அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: கொந்தளித்த ராஜேந்திரபாலாஜி... கொளுத்திப்போட்ட தமிழிசை - எடப்பாடி பலே ஏற்பாடு

மிஸ்டர் கழுகு: கொந்தளித்த ராஜேந்திரபாலாஜி... கொளுத்திப்போட்ட தமிழிசை - எடப்பாடி பலே ஏற்பாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: கொந்தளித்த ராஜேந்திரபாலாஜி... கொளுத்திப்போட்ட தமிழிசை - எடப்பாடி பலே ஏற்பாடு

மிஸ்டர் கழுகு: கொந்தளித்த ராஜேந்திரபாலாஜி... கொளுத்திப்போட்ட தமிழிசை - எடப்பாடி பலே ஏற்பாடு

மிஸ்டர் கழுகு: கொந்தளித்த ராஜேந்திரபாலாஜி... கொளுத்திப்போட்ட தமிழிசை - எடப்பாடி பலே ஏற்பாடு

‘கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது...’ என்று பாடிக்கொண்டே வந்த கழுகாரின் கையில் சில்லென்று மோரைக்கொடுத்து, ‘‘கமல்ஹாசன் விவகாரத்தைத்தான் சொல்லப்போகிறீர் என்பது தெரிகிறது... இதில் தெரியாத ஒரு விஷயம், ‘கமல் பேச்சுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஏன் இவ்வளவு கொந்தளித்தார்?’ என்பதுதான்!’’ என்றோம்.

‘‘அவர் எங்கே கொந்தளித்தார்... அவரைக் கொந்தளிக்கச் சொன்னதே முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்கிறார்கள். ‘இஸ்லாமிய சமூகத்துக்கு இணக்கமாகவும் இந்துக்களுக்கு எதிராகவும் கமல் இருக்கிறார்’ என்று ஒரு லாபியை செய்ய ராஜேந்திரபாலாஜி மூலம் இந்த மூவ் நடந்துள்ளது என்கிறார்கள். இடைத்தேர்தல் நடைபெறும் சட்டசபைத் தொகுதிகள் நான்கிலும் இந்து ஓட்டுகளை முழுமையாக அறுவடை செய்ய இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள திட்டமாம். முதல்வர் எதிர்பார்த்த ரியாக்‌ஷன் கிடைத்ததில் எடப்பாடி தரப்புக்கு ஏக மகிழ்ச்சியாம்.’’

‘‘தமிழக பி.ஜே.பி தலைவரான தமிழிசை சௌந்திரராஜன், பி.ஜே.பி-யுடன் ஸ்டாலின் பேசுவதாக ஒரு குண்டை வீசி இருக்கிறாரே?’’

‘‘அவர் கொளுத்திப்போட்ட தீ வேகமாகப் பற்றி எரிந்தது. ‘இந்தச் சந்திப்பை உறுதி செய்தால், அரசியலைவிட்டே விலகத் தயார்’ என்று ஸ்டாலின் கொந்தளித்துவிட்டார். சந்திரசேகர ராவ் உடனான சந்திப்பு முடிந்த அடுத்த இரண்டு நாள்களில், இந்த விவகாரம் வெடித்ததில், தி.மு.க தரப்பு கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டது. இதற்குப் பின்னால், பி.ஜே.பி தலைமையின் சதி இருக்குமோ என்றும் பேச்சு எழுந்திருக்கிறது. ஆனால், இதற்குப் பின்னாலும் அ.தி.மு.க அம்பு இருக்கிறது என்கிறார்கள்!’’

மிஸ்டர் கழுகு: கொந்தளித்த ராஜேந்திரபாலாஜி... கொளுத்திப்போட்ட தமிழிசை - எடப்பாடி பலே ஏற்பாடு

‘‘அடேங்கப்பா!’’

‘‘தமிழிசையின் பேச்சுக்குப் பின்னணியே சபரீசன் - அமித் ஷா இடையே சந்திப்பு நடைபெற்றதாகக் கிளம்பிய ஒரு தகவல்தான் என்கிறார்கள். குஜராத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் மூலம் அமித் ஷாவை, சபரீசன் சந்தித்து வருமானவரித் துறையில் சிக்கிய ஒரு புள்ளியின் விவகாரம் குறித்துப் பேசியதாகச் செய்திகள் பரவின. இந்தச் செய்திகள் பரவிக்கொண்டிருந்த நேரத்தில்தான் தமிழிசை நமட்டுச் சிரிப்போடு தன் பங்குக்கு ‘தி.மு.க தரப்பில் பி.ஜே.பி-யுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடக்கிறது’ என்று கொளுத்திப்போட்டார். நான்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பு தி.மு.க-வுக்கு எதிராக எதையாவது செய்யவேண்டும் என்று கணக்குப்போட்டு இப்படி காய் நகர்த்தல்களைச் செய்துவருகின்றன தமிழக பி.ஜே.பி தலைகள்!”

‘‘இதற்கு பி.ஜே.பி தலைமையின் எதிர்வினை என்னவாம்?’’

‘‘அவர்கள் கடுப்பாகிவிட்டார்களாம்... ‘ஒரு கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் போது, இன்னொரு கட்சியுடன் பேசுவதாகச் சொல்வது என்ன நாகரிகம்?’ என்று கொந்தளித்துவிட்டார்களாம். விரைவில் தமிழிசைக்கு டெல்லியிலிருந்து ஓலை வரும் என்கிறார்கள். ஆனால், அதைப் பற்றி எல்லாம் அம்மணி கவலைப்பட வில்லை. அவர் வழக்கம்போல கூலாக இருக்கிறாராம். காரணம், அவரது பதவிக்காலம் முடியப்போவதுதானாம்.’’

மிஸ்டர் கழுகு: கொந்தளித்த ராஜேந்திரபாலாஜி... கொளுத்திப்போட்ட தமிழிசை - எடப்பாடி பலே ஏற்பாடு

“சரி, தமிழக பி.ஜே.பி-யின் தலைவர் பதவிக்காலம் முடியப்போகிறதே?’’

‘‘சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இருக்கிறார். அவர் ரேஸில் இருப்பது தெரிந்து, அவருக்கு எதிராக இப்போதே ஒரு டீம் பெட்டிஷன் மேளாவை ஆரம்பித்திருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு இதற்கு விடையும் தெரியும்.’’

‘‘சந்திரபாபு நாயுடுவை தி.மு.க-வின் பொருளாளர் துரைமுருகன் திடீரென சந்தித்திருக்கிறாரே?’’

‘‘உண்மையான காரணம் தி.மு.க-வின் மூத்த நிர்வாகி களுக்கே தெரியவில்லை. மகன், மனைவி சகிதமாக சந்தித்துள்ளதால், ஒருவேளை ஆந்திரத்தில் ஏதேனும் சொந்தப் பிரச்னையாக அல்லது தொழில்கள் நிமித்தமாகச் சந்தித்திருக்கலாம் என்கிறார்கள்!’’

மிஸ்டர் கழுகு: கொந்தளித்த ராஜேந்திரபாலாஜி... கொளுத்திப்போட்ட தமிழிசை - எடப்பாடி பலே ஏற்பாடு

‘‘நான்கு தொகுதிகளில் பணப் பட்டுவாடா சிறப்பாக முடிந்துவிட்டதாமே?’’

‘‘ஆமாம்... ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, அ.ம.மு.க என்று மூன்று தரப்புமே பட்டுவாடா செய்திருக்கிறார்கள். ஆளும் கட்சி பட்டுவாடாவே அதிகம். ஆனால், இந்த விவகாரத்தில், எடப்பாடி கடும் கோபத்தில் இருக்கிறாராம்.’’

‘‘காரணம்?’’

‘‘நாடாளுமன்றத் தேர்தலுக்கு மேலிடத்திலிருந்து கொடுத்த பணத்தை ஒழுங்காகச் சேர்க்கவில்லை என்ற கோபம்தான்... குறிப்பாக கடம்பூர் ராஜூ, பெஞ்சமின், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீதுதான் ரொம்பவே வருத்தமாம். ‘இந்த ஆட்சி நீடிக்காது என்று நினைத்து, வாரிச்சுருட்டிக்கொண்டிருக்கிறார்கள். மே 23-க்குப் பிறகு அவர்கள்பாடு கஷ்டம்தான்!’’ என்று ஓட்டப்பிடாரத்தில் நிர்வாகிகள் கூட்டத்திலே பேசினாராம் எடப்பாடி’’

‘‘தேசிய நிலவரங்கள் எப்படியிருக்கிறது?’’

‘‘நடந்து முடிந்துள்ள ஆறுகட்டத் தேர்தல்களில் ஜார்க்கண்ட், பீஹார், உத்தரப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், மஹாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 130 தொகுதிகளில்தான் பி.ஜே.பி ஜெயிக்கும் என்று காங்கிரஸ் தலைமை கருதுகிறதாம்!’’

“மத்திய உள்துறை என்ன சொல்கிறது?’’

‘‘உ.பி-யில் மட்டும் பி.ஜே.பி-க்கு 40 தொகுதிகளுக்குக் குறையாமல் கிடைக்கும் என்று உள்துறை கணக்குப்போட்டிருக்கிறது. உ.பி-யிலேயே சரிபாதி எண்ணிக்கையில் சீட் பெற்றுவிட்டால், பீஹார், ராஜஸ்தான், மஹாராஷ்டிரம், ம.பி ஆகிய மாநிலங்களில் சரி பாதிக்கு மேல் தொகுதிகளை பி.ஜே.பி கூட்டணி வென்றுவிடும் என்று சொல்கிறார்களாம். இன்னும் நான்கே நாள்கள்தானே... இடையில் பொறுத்திருப்போம்!’’

‘‘டி.ஜி.பி ஆவதற்கு ஜாபர் சேட்டுக்கு சான்ஸ் அடிக்கும் என்கிறார்களே...உண்மையா?’’

‘‘உண்மைதான்... அ.தி.மு.க ஆட்சி நீடித்தால் இதற்கு வாய்ப்பு உண்டு. தேர்தல் முடிவுகள் தி.மு.க-வுக்குச் சாதகமாக வந்தால், திரிபாதிக்கு வாய்ப்பு அதிகம். மத்தியில் பி.ஜே.பி மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், ஆன்மிக லாபியில் ஸ்ரீலட்சுமிபிரசாத் அமர்த்தப்படலாம். இந்த வரிசையில், நான்காவதாக அசுதோஷ் சுக்லா இருக்கிறார். கடைசி நேரத்தில், இவர்களை முந்திக்கொண்டு பதவியைப் பிடிக்கும் வாய்ப்பில், விஜய்குமார் இருக்கிறார். பீஹாரைப் பூர்விகமாகக் கொண்ட விஜய்குமாருக்கு டெல்லியில் உள்ள பீஹார்வாலா ஒருவர் காய் நகர்த்தி வருகிறாராம். டி.ஜி.பி அந்தஸ்தில் கடைசி நபராக இருந்தாலும் குறிப்பிட்ட காலம் ரெகுலர் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி பதவியில் இல்லாமல், ‘பொறுப்பு’ என்கிற பெயரில், விஜய்குமார் நியமிக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை! உமது நிருபர் இதுபற்றி தனிக்கட்டுரையே கொடுத்திருக்கிறாரே... அதையும் படித்துக்கொள்ளும்’’ என்ற கழுகார் ‘பை’ சொல்லிவிட்டுப் பறந்தார்.

துக்கம் கொள்ளவும் சுதந்திரம் இல்லை!

2009
இலங்கைப் போரின் இறுதித்தடம் பதிந்த இடம் முள்ளிவாய்க்கால். 2009 மே 18-ம் தேதி, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்ததைத் தொடர்ந்து போர் முடிவுக்கு வந்தது. போரின் இறுதி நாள்களில் மட்டுமே 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் இறந்ததாக ஐ.நா அறிக்கை அளித்தது. இலங்கைப் போரில், இறந்தவர்களின் நினைவாக, முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ஆண்டுதோறும் மே 18-ம் தேதி உலகத் தமிழர்களால் நினைவு கூரப்படுகிறது.

இலங்கையில் கொழும்பு, வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளில் செயல்படும் சமூக சிற்பிகள் என்கிற மனித உரிமைகள் அமைப்பு, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தைக் கடந்த ஒரு வாரமாக அனுஷ்டித்து வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் ஷெரின் சேவியர், ‘‘2015 ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, தமிழர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக நடைபெறும் சம்பவங்கள், அந்த மாற்றத்தை வெறும் மாயை ஆக்கியுள்ளன. தலைநகரத்தில் குண்டு வெடித்ததற்காக, வடக்குப் பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தி, கடுமையான சோதனைகள் நடைபெறுகின்றன. மே 18  முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையே கடும் நெருக்கடிக்கு இடையில்தான் அனுஷ்டிக்கிறோம்.

யாழ் பல்கலைக்கழகத்தில் பிரபாகரன் படத்தை வைத்திருந்ததற்காக, மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில், மாணவர்கள் எழுச்சியோடு பங்கேற்பதைத் தடுக்கவே, இந்தக் கைது சம்பவம் அரங்கேறியது என்று  அனைவருக்கும் தெரியும். நினைவேந்தலைத் தடுக்க அரசுத் தரப்பிலிருந்து கடும் நெருக்கடிகள் தரப்படுகின்றன’’ என்று கவலை பொங்க கூறியிருக் கிறார். போரில் இறந்தவர்களுக்குத் திதி கொடுக்கும் விதமாக, ஈழப் பகுதியிலுள்ள கிராமங்கள்தோறும் அன்னதானமும் நடைபெறுகிறதாம். இவற்றையும் அரசுப் படைகள் தடுப்பதாகக் கூறப்படுகிறது. வாழத்தான் விடவில்லை. அவர்களின் இறப்புக்கு மரியாதை செலுத்தக்கூட இலங்கை அரசு அனுமதிக்க மறுப்பது அங்குள்ள தமிழர்களிடம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.