Published:Updated:

தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதி; கொ.ம.தே.க செல்வாக்கு எப்படி?

அப்போதைய தேர்தலில் கொ.மு.பே. எந்த தொகுதியையும் கைப்பற்றவில்லை. ஆனால், அந்தப் பேரவை வாங்கிய வாக்குகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. போட்டியிட்ட 12 தொகுதிகளிலும் கணிசமான அளவுக்கு வாக்குகளை வாங்கிக் குவித்தது.

தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதி; கொ.ம.தே.க செல்வாக்கு எப்படி?
தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதி; கொ.ம.தே.க செல்வாக்கு எப்படி?

வுண்டர் சமூகத்துக்காக 1976-ல் உதயமானது ‘கொங்கு வேளாளர் சங்கம்’. தற்போது கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியாக தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளது.

1988-ம் ஆண்டு ‘கொங்கு வேளாளர் சங்கம்’, ‘கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை’யாக மாறியது. கொங்கு மண்டலத்தில் அடங்கிய தொகுதிகளில் பெரும்பான்மை சமூகத்தினராகத் திகழும் அவர்கள்தான் அங்கு வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கினர். இதனால் கொங்கு வேளாளக்கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாகக் களமிறக்கின அரசியல் கட்சிகள்.

'வளர்ச்சியிலும், திட்டங்களிலும் கொங்கு மண்டலம் புறக்கணிப்பட்டு வருகிறது’ எனச் சொல்லி 2009 பிப்ரவரி 15-ம் தேதி ‘கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை’, ‘கொங்குநாடு முன்னேற்றப் பேரவை’ என்ற பெயரில் அரசியல் கட்சியாக அவதாரம் எடுத்தது. கட்சியின் தலைவராக பெஸ்ட் எஸ்.ராமசாமியும், பொதுச்செயலாளராக ஈ.ஆர்.ஈஸ்வரனும் இருந்தனர். கட்சி ஆரம்பித்த இரண்டே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொண்டது ‘கொங்குநாடு முன்னேற்றப் பேரவை’. கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல், நீலகிரி என 12 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது கொ.மு.பே. பெரும்பான்மை சமூகத்தினரான கவுண்டர்களின் ஓட்டுகளை அந்தத் தொகுதியில் இந்தப் பேரவை அள்ளிக் கொண்டு போய்விடுமோ என அரசியல் கட்சிகள் அஞ்சினர். ‘காஸ் சிலிண்டர்’ சின்னத்தில் கொ.மு.பே. போட்டியிட்டது. சின்னம் ஒதுக்கப்பட்ட நாளில் இருந்து வாக்குப்பதிவு நாள் வரை 10 நாள்கள் மட்டுமே இருந்த நிலையில் சின்னத்தை பிரபலப்படுத்தப் பல யுத்திகளைக் கையாண்டனர். 

தேர்தலில் கொ.மு.பே. எந்த தொகுதியையும் கைப்பற்றவில்லை. ஆனால், அந்தப் பேரவை வாங்கிய வாக்குகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. போட்டியிட்ட 12 தொகுதிகளிலும் கணிசமான அளவுக்கு வாக்குகளை வாங்கிக் குவித்தது. அதிகபட்சமாகக் கோவை தொகுதியில் போட்டியிட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன், 1.28 லட்சம் வாக்குகள் பெற்றார். ஈரோடு தொகுதி வேட்பாளர் பாலசுப்பிரமணியம் 1.06 லட்சம் வாக்குகளும் பொள்ளாச்சி வேட்பாளரும், கட்சியின் தலைவருமான பெஸ்ட் ராமசாமி 1.03 லட்சம் வாக்குகளையும் திருப்பூர் தொகுதி வேட்பாளர் பாலசுப்பிரமணியம் 95 ஆயிரம் வாக்குகளையும் பெற்றனர். கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு தொகுதிகளில் கொ.மு.பே. 3-ம் இடத்தைப் பிடித்தது. இதனால் தே.மு.தி.க.வை 4-வது இடத்துக்குத் தள்ளியது. முதல் தேர்தலிலேயே 5.79 லட்சம் வாக்குகளை வாங்கி ஆச்சர்ய அலைகளை உண்டாக்கியது.

கோவை எம்.பி. தொகுதிக்கு உட்பட்ட பல்லடம், சூலூர் சட்டசபைத் தொகுதிகளில் அதிக வாக்குகள் வாங்கி 2-ம் இடத்தைப் பிடித்தது கொ.மு.பே. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு போன்ற தொகுதிகளில் முக்கிய கட்சிகளின் வாக்குகளைப் பெருவாரியாக பிரித்ததால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக கொங்குநாடு முன்னேற்றப் பேரவை மாறியது. காங்கிரஸுக்கு சில தொகுதிகளில் தோல்வி ஏற்பட கொ.மு.பே.தான் காரணம். இதனை அப்போது காங்கிரஸ் கட்சியே ஒப்புக்கொண்டது. ‘‘ஜாதிக் கட்சியான கொங்கு வேளாளர் கட்சி பிரித்த வாக்குகளால்தான் சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தோற்றது’’ எனப் பகிரங்கமாக சொன்னார் மறைந்த எம்.எல்.ஏ. சுதர்சனம்.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் கொ.மு.பே. பெற்ற வாக்குகள் விவரம்:

1. கோவை - 1,28,070
2. பொள்ளாச்சி - 1,03,004
3. திருப்பூர் - 95,229
4. ஈரோடு - 1,06,604
5. சேலம் - 3,642
6. நாமக்கல் - 52,433
7. நீலகிரி - 32,779
8. கரூர் - 14,259
9. தருமபுரி - 15,333
10. கிருஷ்ணகிரி - 4,044
11. கள்ளக்குறிச்சி - 17,818
12. திண்டுக்கல் - 6,411

மொத்தம் - 5,79,626

கொ.மு.பே. கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஈஸ்வரன் பிறகு அந்தக் கட்சியில் இருந்து பிரிந்து 'கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி'யை உருவாக்கினார். பி.ஜே.பி. கூட்டணியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தார். ஆனால், வெற்றி பெற முடியவில்லை. 2011 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற போதிலும் ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கவில்லை. இப்படியான சூழலில் கடந்த மாதம்  'கொங்கு மக்கள் தேசியக் கட்சி' மாநாட்டை ஈஸ்வரன் நடத்தினார். 'கூட்டணி வைத்துத் தேர்தலை சந்திப்போம்' என்றார். அதன்படி இப்போது தி.மு.க. கூட்டணியில் ஈஸ்வரன் இணைந்திருக்கிறார். 'கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி'க்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2009 தேர்தலில் ஏற்படுத்திய பாதிப்பை இந்தக் கட்சி இப்போது ஏற்படுத்துமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.