Published:Updated:

‘முகிலனுக்கு நேர்ந்தது நாளைக்கு நமக்கும் நேரலாம்!’ - கொந்தளித்த சமூகப் போராளிகள்

‘முகிலனுக்கு நேர்ந்தது நாளைக்கு நமக்கும் நேரலாம்!’ - கொந்தளித்த சமூகப் போராளிகள்
‘முகிலனுக்கு நேர்ந்தது நாளைக்கு நமக்கும் நேரலாம்!’ - கொந்தளித்த சமூகப் போராளிகள்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குத் தமிழக அரசும், தமிழக போலீஸ் உயர் அதிகாரிகளும் தான் காரணம் எனக் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி வீடியோ ஆவணம் ஒன்றை வெளியிட்டார் சூழலியல் போராளி முகிலன். அந்த வீடியோவை வெளியிட்டு சென்னையிலிருந்து மதுரைக்குத் திரும்புவதாகச் சொன்ன முகிலன் மாயமானார்.  இதுகுறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டும், நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டும் இன்னும் முகிலன் கிடைத்தபாடில்லை. முகிலன் மாயமாகிக் கிட்டத்தட்ட 15 நாள்களுக்கும் மேலாகியும், இன்னும் எங்கிருக்கிறார் என்ற தகவல் கிடைக்காதது பெருத்த அதிர்வைத் தமிழகமெங்கும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதுசம்பந்தமாக, தமிழகம் முழுவதிலும் உள்ள சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் ‘முகிலன் எங்கே?’ என்ற கேள்வியை முன்வைத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், ஈரோடு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் சேர்ந்து ‘முகிலன் மீட்பு கூட்டியிக்கம்’ ஒன்றை உருவாக்கியிருக்கின்றனர். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று (மார்ச்-2) ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். போலீஸார் கடைசி நேரத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்க, ஈரோடு பெரியார் மன்றத்தில் ஆர்ப்பாட்டமானது, கண்டன கூட்டமாக உருவெடுத்தது.

‘உளவுத்துறையின் தீவிர கண்காணிப்பில் இருந்த முகிலன், காலையில் எத்தனை இட்லி சாப்பிட்டார். தொட்டுக்க என்ன வைத்துக் கொண்டார் என்ற அளவிற்குக் கண்காணித்து வந்தது. அப்படியிருக்க அவர் காணாமல் போய் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், இன்றுவரை முகிலனைத் தீவிரமாக போலீஸார் தேடுவதாய்த் தெரியவில்லை. என்னுடைய கணவருக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லை. தமிழக அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் தான் அவரை ஏதாவது செய்திருக்க வேண்டும் என முகிலனுடைய மனைவி தெளிவாகச் சொல்லியிருக்கிறார். பத்திரிகையாளர் சந்திப்பின் போது தமிழக அரசின் முகமூடியைக் கிழித்ததால் தான் இன்றைக்கு முகிலன் மாயமாகியிருக்கிறார். இதனையெல்லாம் பார்க்கும் போது தமிழக பிரச்னைகளுக்காக போராட வருபவர்களுக்கு இது தான் நிலை என எச்சரிப்பதாகத் தோன்றுகிறது’ என்று பேசினார் தற்சார்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவரான கி.வே.பொன்னையன்.

தொடர்ந்து பேசிய பலரும், ‘தமிழகத்தின் இன்றைக்கு நிலவி வரும் அனைத்துச் சூழலியல் பிரச்சினைகள் மற்றும் மக்களை அடக்கி ஒடுக்கும் எந்த பிரச்சினைகளாக இருந்தாலும் அதற்கு எதிராகப் போராளிகளாகிய நாம் களத்தில் இறங்கிப் போராடுகிறோம். அது அரசுக்கு பிடிக்கவில்லை. தன்னை மீறி மக்கள் போர்க்கொடி தூக்கக் கூடாது என்ற சர்வாதிகார, பாசிச அரசாங்கமாகத் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இன்றைக்கு முகிலன் விஷயத்தில் நடந்தது நாளைக்கு நமக்கும் நடக்கலாம். எனவே, இது முகிலன் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மட்டும் நாம் கடந்து போய்விட முடியாது. இன்றைக்கு இதை நாம் இப்படியே விட்டுவிட்டால், நாளைக்குத் தெருவில் இறங்கிப் போராட வருபவர்களை அரசு என்ன வேண்டுமானாலும் செய்யும். எனவே, சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகள் ஒன்றுசேர்ந்து தீவிரமாக இந்த விஷயத்தைக் கையிலெடுத்தால் தான் முகிலன் எங்கே? என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும்.

‘தன்னுடைய உயிருக்கு என்ன வேண்டுமானாலும் நேரலாம் என்ற தைரியத்தோடு தான் முகிலன் இதுமாதிரியான பிரச்னைகளை கையிலெடுத்துச் செயல்பட்டு வந்தார். அப்படி இனி யாரும் செயல்படக்கூடாது என அச்சுறுத்துவதற்காக முகிலனை இன்றைக்கு எங்கோ வைத்திருக்கிறார்கள். ஸ்டெர்லைட் நிர்வாகமானது மத்திய அரசுக்கு மிகவும் நெருக்கமான தொடர்பில் இருக்கிறது. அவர்கள் தான் தமிழக அரசை கைக்குள் வைத்துக் கொண்டு முகிலனை ஏதோ செய்திருக்கிறார்கள். இதை நாம் எல்லோரும் சேர்ந்து தான் வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும். ஒருவாரம் ஆகினால் பிரச்சினை நீர்த்துப் போய்விடும் என நினைக்கிறார்கள். ஆனால், இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. முகிலனுக்காக நாம் கொடுக்கும் குரலுக்கு, தமிழக அரசு கட்டாயம் பதில் சொல்லியே ஆகவேண்டும்’ எனக் கொதித்தனர்.