Published:Updated:

ரூ. 50,000 கோடி... நாட்டின் பொருளாதாரத்தைச் சரிய வைக்கும் தேர்தல் பிரசார செலவு!

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தேர்தல் பிரசாரத்துக்காக செலவிடும் தொகை சுமார் 50,000 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என டெல்லியைச் சேர்ந்த பொருளாதார சிந்தனைக் குழு ஒன்று மதிப்பிட்டுள்ளது.

ரூ. 50,000 கோடி... நாட்டின் பொருளாதாரத்தைச் சரிய வைக்கும் தேர்தல் பிரசார செலவு!
ரூ. 50,000 கோடி... நாட்டின் பொருளாதாரத்தைச் சரிய வைக்கும் தேர்தல் பிரசார செலவு!

ரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக, அரசியல் கட்சிகள் சுமார் 50,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் செலவழிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் சரிவு நிலைக்குத் தள்ளும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், கூட்டணி அமைப்பது, தொகுதித் தேர்வு, வேட்பாளர்கள் தேர்வு, பிரசார அணியை உருவாக்குவது, நட்சத்திர பேச்சாளர்களை ஏற்பாடு செய்வது, வாக்குச் சாவடி மையங்களில் பூத் ஏஜெண்டுகளை அமைப்பதற்கான ஆட்களைத் தேர்வு செய்வது, தேர்தல் அறிக்கை தயாரிப்பது என நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளுமே தேர்தலுக்குத் தங்களைத் தயார்படுத்தி வருகின்றன. 

தமிழகம், உத்தரப்பிரதேசம்  உட்படப் பல மாநிலங்களில் தேர்தல் கூட்டணி ஏறக்குறைய இறுதி செய்யப்பட்டுவிட்டன. அநேகமாக ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியிலிருந்து மே மாதம் 10-ம் தேதிக்குள் பல கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் அனைத்துக் கட்சிகளுமே தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவிடும். 

மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள், தொழிலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் கவரும் விதமாக சுமார் 1.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வரிக் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்தார். இதனால் சம்பந்தப்பட்ட பிரிவினருக்குப் பயன்தான் என்றாலும், அரசுக்கு வருவாய் இழப்பும் செலவும் அதிகரிக்கும். 

இதற்கிடையே, 2018 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. மேலும், கடந்த ஐந்து காலாண்டுகளில் இந்தக் காலாண்டில்தான் பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்த அளவுக்குக் குறைந்துள்ளது. 

தேர்தல் பிரசார செலவு ரூ.50,000 கோடி

இந்த நிலையில்தான், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தேர்தல் பிரசாரத்துக்காக செலவிடும் தொகை சுமார் 50,000 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என டெல்லியைச் சேர்ந்த பொருளாதார சிந்தனைக் குழு ஒன்று மதிப்பிட்டுள்ளது. இது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தி, மேலும் சரிவை உண்டாக்கும் என்றும் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாது, சர்வதேசச் சந்தையில் சமீப வாரங்களாக அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, உட்கட்டமைப்புகளுக்கு அரசு செலவிடுவது குறைந்து வருவது, தேர்தலுக்குப் பின்னர் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் காணப்படும் நிச்சயமற்ற தன்மையால் முதலீடு தொடர்பான முடிவுகளில் ஏற்படும் தாமதம் போன்றவையும் பொருளாதார சரிவை மேலும் அதிகப்படுத்தலாம் என்றும் அந்தக் குழு கூறியுள்ளது. 

இந்த நிலையில், அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு நாம் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் எதையும் எதிர்பார்க்க முடியாது என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைமை பொருளாதார நிபுணர் சவும்யா காந்தி கோஷ் தெரிவித்துள்ளார். ``அனைத்து மட்டங்களிலும் உட்கட்டமைப்புகளுக்கு அரசு செலவிடுவதும், நுகர்வு விகிதமும் குறைந்து வருகிறது. இந்த நிலைமை வரும் செப்டம்பர் மாத காலாண்டு முடிவு வரை தொடரலாம். மேலும், நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில், அதாவது ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் தற்போதைய 6.6 சதவிகிதத்திலிருந்து 6.2 சதவிகிதமாக மேலும் குறையலாம். இதுவே, அடுத்த நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் வரையிலான காலகட்டத்தில் 6 சதவிகிதமாகக் குறையலாம்" என அவர் மேலும் கூறியுள்ளார். 

சரியும் பொருளாதார வளர்ச்சி விகிதம்

பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் 60 சதவிகிதம், நுகர்வுக்காக செலவிடப்படுவதைச் சார்ந்தே உள்ளது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் நுகர்வு விகிதம், 8.4 சதவிகிதமாகக் குறைந்ததுதான், இந்தக் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முக்கிய காரணமாகும். இதற்கு முந்தைய காலாண்டில் நுகர்வு விகிதம் 9.9 சதவிகிதமாக இருந்தது. 

இந்த நிலையில், சர்வதேச அளவில் காணப்படும் பொருளாதார வளர்ச்சி விகிதக் குறைவும், இந்தியாவில் வாகனம், பொறியியல், ஜவுளித் துறை மற்றும் இதர தொழிலாளர்களுக்கு சாதகமான தயாரிப்புத் துறையைப் பாதிக்கலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், தேர்தலுக்குப் பின்னர் மத்திய அரசு உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குச் செலவிடும் அளவு குறைந்துவிடும் என்றும், இதற்கு, முன்னர் செய்யப்பட்ட பணிகளுக்கான பில்களுக்கு உரிய தொகையைக் கொடுக்க வேண்டியது இருப்பதுதான் காரணம் என்றும், இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி விகிதம் மேலும் குறையக் கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

`இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு சலுகைகளை வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டியதிருப்பதால், அடுத்த நிதியாண்டுக்கான அரசின் செலவின வளர்ச்சி விகிதம், முன்னர் மதிப்பிடப்பட்ட 15 சதவிகிதத்துக்குப் பதிலாக 13 சதவிகிதமாகக் குறைந்துவிடும்’ என்று மத்திய நிதித் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

புதிய அரசுக்கு காத்திருக்கும் சவால்

இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, பல தனியார் புரோக்கரேஜ் நிறுவனங்களும் முதலீட்டு ஆலோசனை நிதி நிறுவனங்களும், பொருளாதார வளர்ச்சி விகிதக் குறைவு அடுத்த சில காலாண்டுகளுக்கும் நீடிக்கும் என்பதால், அதற்கு ஏற்ப தங்களது முதலீட்டு வியூகங்களை வகுத்துக் கொள்ள வேண்டும் என, தங்களது வாடிக்கையாளர்களை அறிவுறுத்தி உள்ளன. 

ஆக மொத்தத்தில், தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் அமைய உள்ள அரசுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை முன்னேற்ற பாதைக்குக் கொண்டு செல்வதற்கான பெரும் சவால் காத்திருக்கிறது!