Published:Updated:

கோஷ்டிப் பூசலில் மாவட்ட அ.தி.மு.க; பா.ம.க-வுக்கு ஒதுக்கப்படுமா கடலூர் தொகுதி?

கடலூர் தொகுதியில் அமைச்சர் எம்.சி. சம்பத்தும், எம்.பி. அருண்மொழித்தேவனும் இரு கோஷ்டிகளாகச் செயல்படுவதால் அந்தத் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க-வினர் தயங்குகிறார்கள்.

கோஷ்டிப் பூசலில் மாவட்ட அ.தி.மு.க; பா.ம.க-வுக்கு ஒதுக்கப்படுமா கடலூர் தொகுதி?
கோஷ்டிப் பூசலில் மாவட்ட அ.தி.மு.க; பா.ம.க-வுக்கு ஒதுக்கப்படுமா கடலூர் தொகுதி?

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வில் 'சீட்' கேட்டு, கட்சித் தலைமைக்கு பலரும் நெருக்கடி கொடுத்துவரும் நிலையில், கடலூர் மக்களவைத் தொகுதியில் மட்டும் அ.தி.மு.க-வினரிடையே போட்டியிட பெரிய அளவில் ஆர்வம் இல்லாத நிலை உள்ளது. இதற்குக் காரணம் கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப்பூசல்தான் என்று கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, இந்த மாவட்டத்தில் இலைமறை காயாக இருந்து வந்த கோஷ்டிப் பூசல், அவரின் மறைவுக்குப் பின்னர் வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழக தொழில் துறை அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எம்.சி. சம்பத் ஓர் அணியாகவும், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும், அந்தத் தொகுதியில் எம்.பி-யுமான அருண்மொழித்தேவன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் சிதம்பரம் பாண்டியன், காட்டுமன்னார்கோயில் முருகுமாறன், பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம் ஆகியோர் மற்றொரு அணியாகவும் செயல்பட்டுக் கொண்டிருப்பதால், இரு கோஷ்டிகளுக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

கடந்த 2 வருடங்களாகவே, அமைச்சர் சம்பத் கலந்துகொள்ளும் எந்த நிகழ்ச்சியிலும், எம்.பி., எம்எல்ஏக்கள் யாரும் பங்கேற்பதில்லை. அது அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும், கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அமைச்சரைப் புறக்கணிக்கும் வகையில் எதிர் கோஷ்டியினர் கலந்து கொள்வதில்லை. 'எம்.சி. சம்பத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்தரப்பினர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர். 

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் அமைச்சர் எம்.சி.சம்பத் மாவட்டச் செயலாளராக உள்ள பகுதிகளைச் சேர்ந்த கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அருண்மொழித்தேவன் கட்டுப்பாட்டில் மாவட்டத்தில் அடங்கிய திட்டக்குடி தொகுதி வருகிறது. எம்.பி-யின் எளிய அணுகுமுறையால், கடலூர் மேற்கு மாவட்டம் மட்டுமல்லாமல், கிழக்கு மாவட்டத்திலும் அவருக்குக் கணிசமான செல்வாக்கு உள்ளது. இதனால், அவருக்கு ஆதரவாளர்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உள்ளனர்.

முன்னாள் மாவட்டச் செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சரும், எம்.சி. சம்பத்தின் சகோதரருமான எம் சி. தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் அய்யப்பன், சிவசுப்பிரமணியன், அமைச்சரின் மகன் பிரவீன் ஆகியோர் அ.தி.மு.க. சார்பில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட சீட் கேட்கின்றனர். எம்.சி. சம்பத்தின் ஆதவாளர் களம் இறங்கினால், அருண்மொழித்தேவன் ஆதரவாளர்கள் வேலை செய்வார்களா என்பது சந்தேகமே! அதேபோல் அருண்மொழித்தேவன் ஆதரவாளர் யாராவது வேட்பாளராக நிறுத்தப்பட்டால், அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்களா என்பதும் கேள்விக்குறிதான். தவிர, சொந்த கட்சியைச் சேர்ந்த வேட்பாளருக்கு எதிராக உள்ளடி வேலைகளிலும் அவர்கள் பரஸ்பரம் ஈடுபடக்கூடும். இந்தக் கோஷ்டிப்பூசல் அரசியலால் கடலூர் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க-வினர் பெரிய அளவில் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. 

இதுகுறித்து அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறுகையில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அவர் யாரை வேட்பாளராக அறிவிக்கிறாரோ, அவரைப் பிடிக்கிறதோ இல்லையோ அவருக்காகத் தேர்தலில் கடுமையாக உழைத்து, பணத்தைச் செலவுசெய்து, வெற்றிபெறச் செய்ய வேண்டியது, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களின் கடமையாக இருந்தது. ஒருவேளை அந்த வேட்பாளர் தோற்றுவிட்டால் அந்த மாவட்டச் செயலாளரின் பதவி பறிக்கப்படும். அந்தப் பயம் கட்சியில் கிளை செயலாளர் வரை அனைத்து நிர்வாகிகளுக்கும் இருந்தது. ஆனால், இன்று அத்தகைய நிலை இல்லை. தொண்டர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். ஆனால், கட்சியில் கட்டுப்பாடு என்பது முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. தலைமையின் மேல் பயம் இல்லை. கோஷ்டிப் பூசல்களும், விமர்சனங்களும் வெட்டவெளிச்சமாகத் தெரிய ஆரம்பித்து விட்டன. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்த நாடாளுமன்றத் தேர்தலை அ.தி.மு.க சந்திக்கவுள்ளது. குறிப்பிட்ட சில தொகுதிகளில் வேட்பாளர்களிடையே ஆர்வம் இல்லாத நிலைதான் உள்ளது" என்றார்.

கடலூரைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர், "கட்சித் தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ, அவரின் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்து, அவரை வெற்றி பெறச் செய்தால், சம்பந்தப்பட்ட நபர் வெற்றிக்குப் பின்னர் விசுவாசமாக இருப்பாரா என்றால் இல்லாத நிலை உருவாகி விட்டது. வேறு அணியில் அவர் சேர்ந்து கொண்டு மாவட்டச் செயலாளருக்கு எதிராகச் செயல்படக்கூடிய சூழல் உள்ளது. எனவே, தேர்தலில் நிற்கும் வேட்பாளர் தனக்கு மிகவும் விசுவாசமானவராக இருக்க வேண்டும். இல்லையெனில் ரத்தசொந்தமாக இருக்க வேண்டும் என ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் நினைக்கின்றனர். அப்படி அவர்கள் நினைப்பதில் தவறு இல்லை. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது நிலைமையே வேறு. இப்போது தலைமை அறிவிக்கும் சம்பந்தமில்லாத நபருக்குச் செலவு செய்வதைவிட, தனக்கு வேண்டியவருக்குச் செலவு செய்யலாம் என்ற மன நிலையில் மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். ஒரு மாவட்டத்தில் இரு செயலாளர்கள் இருப்பதால்தான் இந்தப் பிரச்னை" என்று கூறி முடித்தார்.

கடலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற வேண்டுமானால் அனைவரும் ஏற்கும் வகையில் பொதுவான ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதே அ.தி.மு.க-வினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இல்லாவிட்டால் கடலூர் தொகுதியை பா.ம.க. போன்ற கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்கிற நிலைதான் உள்ளது. கடலூர் தொகுதி என்னவாகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.