Published:Updated:

தூத்துக்குடியில் களமிறங்கும் கனிமொழி? - இன்று விருப்பமனு தாக்கல் செய்ய வாய்ப்பு

தூத்துக்குடியில் களமிறங்கும் கனிமொழி? - இன்று விருப்பமனு தாக்கல் செய்ய வாய்ப்பு
தூத்துக்குடியில் களமிறங்கும் கனிமொழி? - இன்று விருப்பமனு தாக்கல் செய்ய வாய்ப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட இன்று விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகளில் ஆர்வம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.கவுக்கு 7 சீட்டுகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதேபோல பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகளை உறுதி செய்துள்ளது அ.தி.மு.க. தே.மு.தி.க உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும்நிலையில், 5 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்கலாம் என்று தெரிகிறது. அதேபோல், தேர்தல் செலவுக்குப் பணம் கொடுப்பதாக அ.தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். இதனால் விரைவில் தே.மு.தி.க-வும், அ.தி.மு.க கூட்டணிக்குள் நுழையும் சொல்கிறார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி அமைத்துள்ளதால் தன் ஆதரவு காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ள மதச்சார்ப்பற்ற கட்சிகளுக்குத்தான் என தெளிவுப்படுத்தியுள்ளார். கருணாஸும், தனியரசும் தங்களுடைய நிலைப்பாட்ட இன்னும் தெரிவிக்கவில்லை. தி.மு.கவைப்பொறுத்தவரை, காங்கிரஸுக்கு 10 சீட்டுக்களை ஒதுக்கியுள்ளது. ம.தி.மு.க., வி.சி.க, கம்யூனிஸ்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் கூட்டணி முழுமையடையும் எனத் தெரிகிறது. அம்மா மக்கள் முன்னேற்றகழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்துள்ளார். மற்ற சிறிய கட்சிகளுடன் இணைந்து அவர் தேர்தலைச் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல், தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் கூட்டணி அமைத்த கட்சிகள், தொகுதிப் பங்கீடு குறித்து பேசிவருகின்றனர். அந்தவகையில் கடந்த சில நாள்களாகவே, தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க வேட்பாளராக கனிமொழி நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. அதற்கேற்றார்போல் தூத்துக்குடி பகுதியில் தி.மு.கவின் கிராமசபை கூட்டங்களை நடத்துவது, மக்களைச் சந்தித்துப் பேசுவது, உள்ளிட்ட செயல்களில் அவர் ஈடுபட்டு வந்தார். அதன்படி இன்று தி.மு.கவின் கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில்  தூத்துக்குடியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவைத் தாக்கல் செய்ய இருப்பதாக தி.மு.க-வினர் கூறிவருகிறார்கள். அதேபோல, அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க சார்பில் அதே  தொகுயில் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவார் என்கிறார்கள். அதற்கான அறிவிப்பும் இன்று வெளியாகும் எனத் தெரிகிறது. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்களால் அங்கு அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராக அதிருப்தி அலை வீசுகிறது என்கிறார்கள்.