சமூகம்
Published:Updated:

நான்கு தொகுதிகள் இடைத்தேர்தல்

நான்கு தொகுதிகள் இடைத்தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்கு தொகுதிகள் இடைத்தேர்தல்

நான்கு தொகுதிகள் இடைத்தேர்தல்

நான்கு தொகுதிகள் இடைத்தேர்தல்

ஓட்டப்பிடாரம்

அமைதி... அமைதி... அமைதியோ அமைதி!

தூத்துக்குடி மாவட்டத்தில் பின்தங்கிய தனித்தொகுதி ஓட்டப்பிடாரம். இதுவரை அ.தி.மு.க, இங்கு நான்கு முறை வெற்றி பெற்றுள்ளது. எனினும் கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் போட்டி என்னவோ அ.தி.மு.க-வுக்கும் புதிய தமிழகத்துக்கும்தான். ஒட்டநத்தம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில், 101 வயதான இசக்கியம்மாள், தன் கணவர், பிள்ளைகள் யாரும் உயிருடன் இல்லாத நிலையிலும் கண் பார்வை மங்கிய நிலையிலும் உச்சி வெயிலில் தன்னந்தனியாக வந்து வாக்களித்தார். அவரிடம் கட்சியினர் சிலர், “பாட்டியம்மா யாருக்கு ஓட்டுப் போட்டீங்க?” என்று கேட்டார்கள். அவர்களை ஏறஇறங்க பார்த்தவர், ‘‘போய்யா... போ... நல்லவருக்கு ஓட்டுப் போட்டேன்யா, போதுமா” என்று சொல்லி வாயடைக்க வைத்துவிட்டார்.  

நான்கு தொகுதிகள் இடைத்தேர்தல்

குலசேகரநல்லூர் வாக்குச்சாவடிக்கு ரேக்ளா வண்டியில், சாலை அதிரப் பாய்ந்துவந்தார் இளைஞர் ஒருவர். “மக்காச்சோளம் பயிருக்குத் தண்ணி பாய்ச்சணும். அதான் குதிரையில பாய்ஞ்சு வந்தேன்” என்று பஞ்ச் பேசியவர், ஓட்டு போட்டுவிட்டு, மின்னல் வேகத்தில் திரும்பினார். புதியம்புத்தூர் வாக்குச்சாவடியில் மாலை நேரத்தில் வாக்களித்த ஒருவர், வாக்குப்பதிவு செய்வதை போட்டோ எடுக்க முயன்றார். இதனால், கட்சியினர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாஞ்சாலங்குறிச்சி சிலோன் காலனியைச் சேர்ந்த மாடசாமி என்பவர் வாக்களித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கும்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தால், சுமார் ஒருமணி நேரம் அந்த வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் யாரும் வரவில்லை. மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது இந்தச் சம்பவம். கடுமையான கண்காணிப்பில் இருந்த இந்தத் தொகுதியில் அமையாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது.

- இ.கார்த்திகேயன், படம்: ப.கதிரவன் 

நான்கு தொகுதிகள் இடைத்தேர்தல்

அரவக்குறிச்சி

இலவச பேருந்து... 2000 ரூபாய் கலர் ஜெராக்ஸ்!

ரவக்குறிச்சி இடைத்தேர்தல் பெரிய அளவில் வம்புதும்பு இல்லாமல் முடிந்திருக்கிறது. இங்கு தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி, ஸ்டாலினிடம் தன் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அ.தி.மு.க தரப்பில் தம்பிதுரையும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தங்களது அரசியல் எதிரியான செந்தில் பாலாஜியிடம் தோற்கக்கூடாது என்ற கௌரவப் பிரச்னையில் இருக்கிறார்கள். டி.டி.வி.தினகரனுக்கோ, ‘தனக்கு துரோகம் செய்துவிட்டுப்போன செந்தில் பாலாஜியை ஜெயிக்கவிடக் கூடாது’ என்ற முன்முனைப்பு. இப்படி முக்கோண சபதத்தில், அரவக்குறிச்சித் தொகுதி அல்லோலகல்லோலப்பட்டது. அ.தி.மு.க, அ.ம.மு.க, தி.மு.க என மூன்று தரப்பும் ஓட்டுக்கு இரண்டாயிரத்தை வாரி வழங்கியிருக்கிறார்கள்.

வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வாக்குச்செலுத்த வருபவர்களுக்காக, அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் 18-ம் தேதி இரவிலிருந்து 19-ம் தேதி மதியம் வரை இலவச பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்திருந்தன. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு, “கார்வழி கிராமத்தில், தி.மு.க-வினர் இரண்டாயிரம் ரூபாய் தாள்களை ஜெராக்ஸ் எடுத்து, டோக்கனாக விநியோகிக்கிறார்கள். ஓட்டளித்துவிட்டு மாலையில் வந்து அந்த ஜெராக்ஸைக் கொடுப்பவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்குகிறார்கள்” என்று குற்றம்சாட்டினர். ஆனால், தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியோ, “காவல்துறையின் உயர் அதிகாரிகள் தொடங்கி, சாதாரண போலீஸ் வரை அ.தி.மு.க நிர்வாகிகள்போல் செயல்படுகிறார்கள். தி.மு.க-வுக்கு வெற்றி உறுதியாகிவிட்டது. நான் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன். அதனால், தேர்தலை நிறுத்துவதற்காக அ.தி.மு.க-வினர் இரண்டாயிரம் ரூபாய் ஜெராக்ஸ் பிரச்னையைக் கிளப்பி நாடகமாடுகிறார்கள்” என்றார்.

- துரை.வேம்பையன், படம்: நா.ராஜமுருகன்

நான்கு தொகுதிகள் இடைத்தேர்தல்

சூலூர்

‘‘வேட்டியை அவுத்துட்டுப் போகட்டுமா?’’

சூ
லூர் தொகுதியின் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில், அதிகாரிகளைவிட அரசியல் கட்சி ஏஜென்டுகள்தான் பவர்ஃபுல்லாக வலம் வந்தார்கள். விதிகளைப் பொருட்படுத்தாமல், கட்சி கரை வேட்டி யுடன் வீராப்பு காட்டியவர்களை அதிகம் காண முடிந்தது. வதம்பச்சேரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், அ.தி.மு.க வேட்பாளர் கந்தசாமி வாக்களிக்க வந்தபோது, அவருடன் வந்தவர்களில் ஒருவர் அ.தி.மு.க கரை வேட்டியுடன் வந்தார். அவரை மட்டும் தடுத்து நிறுத்திய ஒரு பெண் காவலர், ‘கரை வேட்டிக்கு அனுமதி இல்லை’ என்றார். உடனே, அவருக்குக் கோபம் பொத்துக்கொண்டது. “அப்படீன்னா… அவுத்துட்டுப் போகட்டுமா?’’ என்று பெண் போலீஸிடம் எகிறினார் அவர். அதற்கும் அசராத அந்தப் பெண் போலீஸ், “அதெல்லாம் எனக்குத் தெரியாது. உள்ள விடமுடியாது” என்று கறாராகக் கூறிவிட்டார்.

அ.ம.மு.க-வினர் ஒருபடி மேலே போய், ஒவ்வோர் இடத்திலும் மாதிரி வாக்குப் பதிவு இயந்திரத்தை வைத்து, பரிசு பெட்டி 15-வது இடத்தில் இருக்கிறது என்று விளக்கினார்கள். இதுமட்டுமல்லாமல், எல்லாக் கட்சியினரும் வாக்காளர்களை அழைத்துவர ஸ்பெஷல் வாகன ஏற்பாடுகள் செய்து, ‘இவ்வளவு பேரை அழைத்துவர வேண்டும்’ என்று இலக்கு நிர்ணயித்திருந்தார்கள். அந்தப் பதற்றத்தில் சில நிர்வாகிகள், வாக்காளர் பட்டியலில் பெயரே இல்லாதவர்களையும் அள்ளிப்போட்டுக்கொண்டு வந்து அல்லல்பட வைத்தார்கள்.

சூலூரில் ஒரு வாக்குச் சாவடியில், வாக்குப்பதிவு இயந்திரம் தலைகீழாக மாற்றி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் அதிகாரிகளின் இந்தத் தவறால், 17-வது வரிசையில் இருந்த சுயேச்சையின் பெயர் முதல் இடத்தில் இருந்தது. முக்கால்வாசி வாக்குகள் பதிவான பிறகு மாலை 4 மணிக்கு இதைக் கண்டுபிடித்து தேர்தல் அதிகாரிகள் சரிசெய்ய... ‘நல்லா செய்றீங்க ஆபிஸர்ஸ்’ என்று நக்கலடித்தார்கள் மக்கள்.

- எம்.புண்ணியமூர்த்தி, இரா.குருபிரசாத், படங்கள்: தி.விஜய்

நான்கு தொகுதிகள் இடைத்தேர்தல்

திருப்பரங்குன்றம் 

களைகட்டிய டாஸ்மாக் கடைகள்!


நான்கு வருடங்களுக்குள் மூன்றாவது முறையாக நடக்கும் தேர்தலில் வாக்களித்தனர் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி மக்கள். கட்சி வேறுபாடு பார்க்காமல், மூன்று முக்கியக் கட்சிகளும் வாக்காளர்களுக்குப் பணத்தை வாரி வழங்கிவிட்டு பெரும் நம்பிக்கையோடு இருந்தனர். 

நான்கு தொகுதிகள் இடைத்தேர்தல்

அதுமட்டுமன்றி, “தேர்தல் நாளன்றும் தோப்பூர், வடிவேல் கரை உட்பட சில வாக்குச்சாவடிகள் அருகே நின்றுகொண்டு ஆளும் கட்சியினர் பணம் கொடுக்கிறார்கள். அதைப் பற்றி தேர்தல் அதிகாரிகளுக்கும் காவல் துறைக்கும் புகார் கொடுத் தும் எந்த நடவடிக்கையும் இல்லை” என்று தி.மு.க-வினர் புலம்பிக்கொண்டிருந்தனர். விளாச்சேரி, அவனியாபுரம், அயன் பாப்பாகுடி வாக்குச்சாவடிகளில் வி.வி.பேட் இயந்திரம் திடீரென்று பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், வாக்குப்பதிவில், ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. தனக்கன்குளம் வாக்குச்சாவடியில், வாக்காளர், முகவர்கள் முன்னிலையில் காலை 7 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால், அதை உடனே டெலிட் செய்ய அதிகாரிகள் மறந்ததால், தொடர்ச்சியாக எல்லோரும் வாக்களிக்க வாக்கு எண்ணிக்கை அதிகமாகக் காட்டியது.  இதைப் பார்த்து முகவர்கள் அதிர்ச்சி அடைய, உடனே பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு மாதிரி வாக்கில் பதிவான வாக்குகளை அழித்தனர். இதனால் அங்கும் ஒரு மணி நேரம் தாமதமானது.

அயன் பாப்பாகுடி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி கிழக்கு கட்டடம் தெற்குப் பகுதி வாக்கு மையத்தில், போலி முகவர் அட்டை வைத்திருந்ததாகக் கூறி தி.மு.க முகவர்கள் இருவரை காவல் துறை கைதுசெய்தது. இதைக் கண்டித்து, மத்திய தொகுதி எம்.எல்.ஏ-வான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகர் பொறுப்பாளர் கோ.தளபதி ஆகியோர் தலைமையில் கட்சியினர் அவனியாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இப்படிப் பரபரப்பும் படபடப்புமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலையில் வாக்குச்சாவடிகளில் கூட்டம் குறைந்து, சுற்றுவட்டார டாஸ்மாக் கடைகளில் கூட்டம் களைகட்டியது.

சொல்லப்போனால், கட்சியினர் கொடுத்த காசுக்கு நூறு சதவிகிதம் வாக்குப் பதிவு நடந்திருக்க வேண்டும். ஆனால், 74.11 சதவிகிதமே பதிவானது. இது ஆளும் கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
 
- செ.சல்மான், படங்கள் : ஈ.ஜெ.நந்தகுமார், வீ.சதீஷ்குமார்