Published:Updated:

அறிவாலயத்துக்குப் படையெடுக்கும் தலைவர்கள் -முடிவுக்குவரும் தி.மு.க கூட்டணி!

அறிவாலயத்துக்குப் படையெடுக்கும் தலைவர்கள் -முடிவுக்குவரும் தி.மு.க கூட்டணி!
அறிவாலயத்துக்குப் படையெடுக்கும் தலைவர்கள் -முடிவுக்குவரும் தி.மு.க கூட்டணி!

தி.மு.க கூட்டணி இன்று இறுதி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க கூட்டணியில் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டது. அதேபோல், கொங்கு ஈஸ்வரனுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் உதயசூரியன் சின்னத்திலே போட்டியிட உள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், தி.மு.க தோழமை கட்சிகளான ம.தி.மு.க, வி.சி.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையைத் தி.மு.க தரப்பில் கடந்தவாரமே முடித்துவிட்டது.

தோழமை கட்சிகள் எதிர்பார்க்கும் தொகுதிகளின் பட்டியலை அப்போது தி.மு.க-வினரிடம் கொடுத்துள்ளனர். அதேநேரம் தே.மு.தி.க கட்சி தி.மு.க கூட்டணிக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை அளிப்பதில் சிக்கல் இருந்தது. ஆனால், தே.மு.தி.க இனி தி.மு.க அணிக்கு வருவது சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தேர்தல் அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளது.

இதனால் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதன்படி விடுதலைசிறுத்தைகள் கட்சியினரை இன்று அறிவாலயத்திற்கு அழைத்துள்ளார்கள். அவர்களுக்கு இரண்டு தொகுதிகளை வழங்கி கூட்டணி ஒப்பந்தம் இறுதி செய்யப்படுகிறது. அதேபோல், கம்யூன்ஸ்ட் கட்சியினரையும் அறிவாலயத்துக்கு அழைத்துள்ளார். வைகோ வெளியூரில் இருப்பதாகத் தகவல் வந்துள்ளதால் அவர்கள் கட்சியினர் வருவது மட்டும் இன்று தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைக்குள் தோழமைக் கட்சிகள் அனைவருக்கும் சீட் ஒதுக்கீட்டை முடித்துவிட்டு பிராசார வேலையை ஆரம்பிக்கும் திட்டத்தில் தி.மு.க உள்ளது. இன்று வர முடியாத கட்சிகளை நாளை அறிவாலயத்துக்கு அழைத்துள்ளார்கள்.