சமூகம்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: மீண்டும் மிரட்டுவாரா மோடி?

மிஸ்டர் கழுகு: மீண்டும் மிரட்டுவாரா மோடி?
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: மீண்டும் மிரட்டுவாரா மோடி?

மிஸ்டர் கழுகு: மீண்டும் மிரட்டுவாரா மோடி?

‘கருத்துக் கணிப்பை பி.ஜே.பி வரவேற்கிறது... அ.தி.மு.க கடுமையாக விமர்சித்திருக்கிறதே?’’ - எதிரில் வந்தமர்ந்த கழுகாரிடம் ஆரம்பித்தோம்.

மிஸ்டர் கழுகு: மீண்டும் மிரட்டுவாரா மோடி?

‘‘ஓ... தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கருத்தையும் பி.ஜே.பி-யின் கருத்தையும் வைத்து நீர் சொல்கிறீர். அதற்கு முன் நடந்த கதையை நான் சொல்லவா?’’

மிஸ்டர் கழுகு: மீண்டும் மிரட்டுவாரா மோடி?



‘‘சொல்லும்.’’

‘‘இறுதிக்கட்டத் தேர்தலுக்கு முந்தைய தினம் மோடியின் கேதார்நாத் விசிட் குறித்த செய்திகள், அனைத்து ஊடகங்களிலும் பிரதானப்படுத்தப்பட்டன. அதற்குப் பின்னால் மிகப் பெரிய ஊடகத் தந்திரம் இருக்கிறது. தேர்தல் தொடங்கியதிலிருந்தே பிரதமருக்கு எதிரான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இதனால், மோடிக்கும் மேலாக இருந்து பி.ஜே.பி-யை லாபி செய்யும் குழுவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இவை எல்லாவற்றையும் மோடி சரிக்கட்டிவிடுவார் என்று அந்தக் குழுவினர் நினைத்தார்கள். ஆனால், அவருடைய உரைகளிலும் ஒன்றுமே இல்லை!’’

‘‘அதற்குத்தான் அமித் ஷாவை வைத்துப் பதிலடி கொடுத்தார்களே?’’

‘‘ஐந்து ஆண்டுகளாகப் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தாத மோடி, இறுதிகட்ட பிரசாரம் முடிந்ததும் டெல்லி பி.ஜே.பி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். நீண்ட காலத்துக்குப் பிறகான சந்திப்பு என்பதால், செய்தியாளர்கள் ஆர்வத் துடன் சென்றார்கள்.  அங்கே செய்தியாளர்களின் கேள்விகள் அனைத்துக்கும் அமித் ஷா பதில் அளித்ததில், அனைவருமே கடுப்பாகி விட்டார்கள். பிரதமருக்கு எதிரான சமூக ஊடக விமர்சனங்களும் இன்னும் கடுமையாகிவிட்டன.’’

‘‘அது தெரிந்ததுதான்... தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பைப் பற்றிச் சொல்லும்!’’

‘‘ஏழு கட்டத் தேர்தல்களுக்கு இடையிலேயே பி.ஜே.பி பல வகைகளில், சர்வேக்களை நடத்தியது. அவற்றில் கிடைத்த தகவலை வைத்து ‘தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களைப் பிடிக்க முடியாது; கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியைப் பிடிக்க முடியும்’ என்று நினைத்தார்கள். ஆனால், அவர்களே நம்ப முடியாத அளவுக்கு, ‘பி.ஜே.பி 300 தொகுதிகளுக்கும் அதிகமாகக் கைப்பற்றி, ஆட்சியைப் பிடிக்கும்’ என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் சொல்லியிருக் கின்றன. இந்தக் கருத்துக் கணிப்புகள் வெளியான நாளுக்கு முன்தினம் பி.ஜே.பி அலுவலகத்தில் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களுக்கு ஒரு மீட்டிங் நடத்தப்பட்டிருக்கிறது. அதில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பி.ஜே.பி-க்குக் குறைந்த அளவில் தொகுதிகள் கிடைத்தால், செய்தியாளர்கள் கேள்விக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று பாடம் நடத்தியிருக்கிறார்கள். அவர்களும் அதற்குத் தயாரான நிலையில்தான், கருத்துக் கணிப்புகள் அவர்களே எதிர்பாராத வகையில் 305, 306, 336, 350, 365... என்று ஏறுவரிசைக்கட்ட, அவர்களே திக்குமுக்காடிப்போனார்களாம்!”

மிஸ்டர் கழுகு: மீண்டும் மிரட்டுவாரா மோடி?

“அதெல்லாம் சரி... இதனால், பி.ஜே.பி தலைமை குஷியாகிவிட்டதா?’’

‘‘பொறுமையாகக் கேளும்... கருத்துக் கணிப்பிலுள்ள ஒரு விஷயத்தைப் பலரும் உன்னிப் பாகக் கவனிக்கிறார்கள்... உத்தரப் பிரதேசத்தில் பி.ஜே.பி-க்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்கிற கேள்விக்கான பதில்தான் அது. அகிலேஷ் - மாயாவதி கூட்டணிக்குக் கடைசி கட்ட தேர்தல்களில் சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்று பி.ஜே.பி தரப்பு நினைக்கிறது. அதனால் உத்தரப் பிரதேசம் தங்களுக்கு மீண்டும் கை கொடுக்கும் என்றும் கருதுகிறார்கள். அதேபோல், மேற்கு வங்கத்திலும் சில இடங்களை பி.ஜே.பி கைப்பற்றும் என்று நம்புகிறார்கள்!’’

‘‘அமித் ஷா நம்புகிறாரா, இல்லையா?’’

‘‘அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை யாம்... ‘இப்படித்தான் கடந்த ஆண்டில், ஐந்து மாநில தேர்தல்களில் பி.ஜே.பி அமோக வெற்றி பெறும் என்று சொன்னார்கள். கடைசியில் மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பறி கொடுத்தோம். இப்போதும் அதேபோலத்தான் சொல்கிறார்கள். நாம் ஆட்சியில் இருப்பதால்கூட இப்படிச் சொல்லலாம். நம்மால் எதையும் உறுதியாகக் கணிக்க முடியவில்லை. இறுதியாக... கருத்துக்கணிப்புகள் சொல்வதுபோல அதீத வெற்றியைப் பெறுவோம் அல்லது அடிமட்ட அளவில் தோல்வியைப் பெறுவோம்’ என்று தனக்கு நெருக்க மானவர்களிடம் சொல்லியிருக் கிறார் அமித் ஷா.’’

‘‘அவர் சொல்வது சரிதானே?’’

‘‘அதை நாம் எப்படி கணிக்க முடியும்? ஆர்.எஸ்.எஸ் தரப்பிலும் காய்நகர்த்தல்கள் வேகமாக நடக்கின்றன. பி.ஜே.பி-யை மேலிருந்து ஆட்டுவிக்கும் லாபி குழுவினர் ஆர்.எஸ்.எஸ்-ஸில்தானே அதிகமாக இருக் கிறார்கள். இவ்வளவு பரபரப்புக ளுக்கு இடையே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நாக்பூர் அலுவலகத்தில் தீவிரமாக ஆலோசனை நடந்திருக் கிறது. அதில் நிதின் கட்கரியின் ஆதரவாளர்கள் சிலரும் பங்கேற்றிருக்கிறார்கள்.’’

‘`அப்படி என்னதான் அங்கே பேசப்பட்டதாம்.’’

‘`வந்திருக்கின்ற எக்ஸிட் போல் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, `நமக்கே இன்ப அதிர்ச்சியாக இருக்கலாம் போலிருக்கிறது. மீண்டும் மோடி மிரட்டுவார் போலத்தான் தெரிகிறது’ என்று ஆர்.எஸ்.எஸ் புள்ளிகள் சிலர் உற்சாகம் பொங்கப் பேசியுள்ளனர். ஆனால், நிதின் கட்கரியின் ஆட்களோ, ‘ரொம்ப அவசரப்பட வேண்டாம். கடந்த 2004, 2009-ல்கூட பி.ஜே.பி-க்குத்தான் கூடுதல் இடங்கள் என்பதுபோல எக்ஸிட்போல் முடிவுகள் வந்தன. கடைசியில், காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சியைப் பிடித்தது. அதுபோல இந்தத் தடவை நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. கோட்டை விட்டுவிடக்கூடாது’ என்று பேசியுள்ளனர்.’’

‘`அவர்கள் என்னதான் சொல்ல வருகிறார் களாம்?’’

‘`மோடி மிரட்டுவரா... இல்லையா என்பதை 23-ம் தேதி தெரிந்துகொள்ளலாம். ஆனால், அதற்கு முன்பாக சந்திரபாபு நாயுடுவும், சந்திரசேகர ராவும் மிரட்டிக்கொண்டுள்ளனர். ஊர் ஊராகப் போய் எதிர்க் கட்சிகளைப் பேசிப் பேசி வளைத்துக் கொண்டுள்ளனர். நம் பிடியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகள் மட்டும் போதும் என்று நினைத்துக்கொண்டு நாம் பேசாமல் இருந்தால், கடைசியில் ஏமாந்துபோகவும் வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை பி.ஜே.பி-க்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால், வேறு கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டால், கடைசி நேரத்தில் போய் நிற்க முடியாது. மோடிக்கு பதிலாக நிதின் கட்கரியை அமரவைக்கவும்  ஆர்.எஸ்.எஸ் தயங்காது என்பதை நாம் இப்போதே அவர்களுக்கெல்லாம் சூசகமாகப் பரப்பியாக வேண்டும்’ என்று பேசியுள்ளனர்.’’

‘`ஓஹோ...’’

‘`வடஇந்தியாவிலேயே நிலைமை அத்தனை சாதகமாக இல்லை என்பதுபோல வந்திருக்கும் தகவல்கள்தான் நிதின் கட்கரியின் ஆட்களை கடந்த சில வாரங்களாகவே இப்படியெல்லாம் பேச வைத்துள்ளது. இதெல்லாம் தன் காதுகளுக்கு வந்தாலும் பிரசாரம் ஒன்றே முக்கியம் என்று கவனத்தை அதிலேயே பதித்திருந்த மோடி, மனஅமைதிக்காகத்தான் கேதார்நாத் பக்கம் புறப்பட்டுப் போய் குகைக்குள் உட்கார்ந்து தியானமெல்லாம் செய்து திரும்பினாராம்.’’

‘`தேர்தல் நாளன்று தன்னுடைய காசி தொகுதியில் ஊர்வலம் வந்து சர்ச்சை நாயகனாகி விட்டாரே மோடி?’’

‘`தேர்தல் ஆணையம் ஏற்கெனவே கிட்டத்தட்ட மோடியின் கைப்பாவையாகிவிட்டது என்கிற விமர்சனம் விண்ணைத்தொட்டுக் கொண்டிருக் கிறது. இந்த நிலையில், தேர்தல் ஆணையர்களில் ஒருவரான லாவாசா, ‘மோடி, அமித் ஷா உள்ளிட்ட பி.ஜே.பி புள்ளிகளின் மீதான தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் சரியில்லை. பாரபட்சம் காட்டப்படுகிறது’ என்று பரபரப்புக் கிளப்பியிருந்தார். இத்தனைக்கும் நடுவில், மோடியின் கேதார்நாத் ஆன்மிகப் பயணத்தை குறும்படமாக தயாரித்து, இறுதிக்கட்ட தேர்தல் நாளன்று அனைத்து மீடியாவிலும் ஒளிபரப்ப வைத்தார்கள். இதுவும் அப்பட்டமான தேர்தல் விதிமீறல் என்று எதிர்க்கட்சிகள் கூப்பாடு போட்டன. அப்போதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ‘நாங்க அப்படித்தான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டது தேர்தல் ஆணையம்’ என்று வறுத்துக்கொண்டுள்ளனர் எதிர்க் கட்சியினர். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஒருவேளை எக்ஸிட் போல் சொல்வதுபோல மோடி நிஜமாகவே வெற்றிபெற்றாலும், ‘ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லுகள் செய்து பெறப்பட்ட வெற்றி’ என்று நிச்சயமாகக் குற்றச்சாட்டுகள் கிளம்பவே செய்யும் போலிருக்கிறது.’’

‘`சரி... அ.தி.மு.க ஏன் வருத்தத்தில் இருக்கிறது. அவர்களுடைய நோக்கமெல்லாம் சட்டமன்ற இடைத்தேர்தலில்தானே?’’

‘`உண்மைதான். அதற்காக நாடாளுமன்றத்தில் ஜீரோவில் சந்தோஷப்பட்டுக்கொள்ள முடியுமா? எட்டுத் தொகுதிகளில் கட்டாயம் ஜெயிப்போம், ஏழு தொகுதிகளில் இழுபறியில் வெற்றி பெறலாம் என்று எடப்பாடி கணக்குப்போட்டு வைத்திருந்தாராம். இப்போது 30 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க கூட்டணி ஜெயிக்கும் என்று அந்தக் கருத்துக் கணிப்புகள் சொன்னதும் கடுப்பாகி, ‘கருத்துத் திணிப்பு’ என்று கருத்துச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.’’

‘‘தி.மு.க தலைமையாவது இதை நம்புகிறதா?’’

‘‘நம்பியதால்தான் ஸ்டாலின் அப்செட் என்கிறார்கள். பண்ணை வீட்டில் ஓய்வில் இருக்கும் அவர் இந்தக் கருத்துக் கணிப்பைப் பார்த்துவிட்டு, ‘தமிழகத்தில் நாம் எத்தனை தொகுதிகளில் ஜெயித்தாலும், மேலே மீண்டும் பி.ஜே.பி ஆட்சி வந்தால் தொடர்ந்து நாம் எதிர்க் கட்சியாக மட்டுமே இருக்கமுடியும்’ என்று யோசிக்கிறாராம். மம்தாவிடமும் இதுபற்றி ஸ்டாலின் ஏதோ பேசியிருக்கிறார் என்கிறார்கள்!’’

‘‘மாயாவதியை சந்திரபாபு நாயுடு சந்தித்திருக் கிறாரே?’’

‘‘அந்தச் சந்திப்புக்கு முன்பே ராகுல் காந்தியைச் சந்தித்துள்ளார் சந்திரபாபு நாயுடு... பி.ஜே.பி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் நிலை இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் வெளியான பிறகு ராகுல் காந்தியின் ஆலோசனையின்படியே மாயாவதியை நாயுடு சந்தித்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.’’

‘‘கோட்டை வட்டாரத்தில், ‘ஆட்சி மாற்றத்துக்கு தமிழக அதிகாரிகள் தயாராகிவிட்டார்கள்’ என்றொரு பேச்சு உலா வருகிறதே?’’

‘‘அதில் என்ன சந்தேகம்... தலைமைச் செயலாளர் பதவியும் டி.ஜி.பி பதவியும் விரைவில் காலியாகின்றன. தனது ஆட்சி தொடர்ந்தால், டி.ஜி.பி பதவிக்கு ஒரு தமிழரை கொண்டுவர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். அவருடைய சாய்ஸ் ஜாபர்சேட் என்கிறார்கள். அதேபோல் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பதவிக்காலமும் விரைவில் முடிவடைகிறது. அவருடைய இடத்துக்கு அடுத்து வரவேண்டியவர், கவர்னரின் செயலாளர் ராஜகோபால்தானாம். ஆனால், அவரால் கவர்னர் அலுவலகத்தை விட்டு அகல முடியாத நிலையாம். அதனால், கிரிஜாவுக்குப் பணி நீட்டிப்பு வழங்க கவர்னர் மாளிகை மூலம் ஆட்சியாளர்களிடம் காய் நகர்த்துகிறார்கள். அதேபோல மே 23-க்குப் பிறகு மூன்று துறைகளின் அமைச்சர்களுக்கு கல்தா நிச்சயம் என்கிறார்கள். அதில் இருவர் தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்!’’

‘‘யார் யாரென்று தெரியுமா?’’

‘‘சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி, ‘நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் சரியாக இல்லை; யூஸ்லெஸ்’ என்று அமைச்சர் ஒருவரை கமென்ட் அடித்துள்ளார். அவர் கழற்றிவிடப்படுவது உறுதி என்று ‘செய்திகள்’ வருகின்றன. மேற்கு மண்டலத்தில் சசிகலா தரப்புக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவர் வீட்டில் அடிக்கடி நான்கு அமைச்சர்கள் சந்தித்து, நள்ளிரவு நேரம் வரையில் தினமும் பொழுதைக் கழிக்கிறார்களாம். இந்த விவரம் முதல்வர் காதுக்கு எட்டியிருக்கிறது. அந்த நால்வரையும் கண்காணிக்க சொல்லியிருக் கிறாராம். இன்னொரு பக்கம் ஈரோட்டில் இருக்கும் ஒரு எம்.எல்.ஏ அதிருப்தி காரணமாக எப்போது வேண்டுமானாலும் கலகக்குரல் எழுப்பலாம் என்கிறார்கள்’’ என்ற கழுகார் ‘‘ரிசல்ட் வரட்டும், சந்திப்போம்!’’ என்றபடி சிறகு விரித்தார்.

தலைவரைத் தேடிவந்த தலைவி!

துரை ஏர்போர்ட் ஏரியாவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில், அசகாய சூரரான அந்த அரசியல் தலைவர் பிரசாரத்துக்காகத் தங்கியிருந்தார். அந்த ஹோட்டலுக்கு திடீர் என என்ட்ரி கொடுத்துள்ளார் டிப்டாப் லேடி ஒருவர். தலைவர் அறைக்குள் போகக் காத்திருந்தவரை, அங்கிருந்த சிலர் தடுத்து தனியாக அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். தலைவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் ஒரு காலத்தில் நெருக்கம் இருந்ததாம். இப்போது தலைவர் கண்டுகொள்ளாமல் இருப்பதால், பிரச்னை செய்ய வந்திருக்கிறார். எப்படியோ அவரைப் பேசி அனுப்பி வைத்துவிட்டார்களாம்!

சங்கர மடம் சங்கதிகள்!

ங்கர மடத்துக்குள் பிரச்னைகள் வெடித்து வெளியாகத் தொடங்கியதும், இதுவரை அமைதியாக இருந்தவர்கள் பலரும் தங்களின் உரிமையை நிலைநாட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதில் முக்கியமானவர் குல்பர்க்கா சங்கர். இவர் மறைந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளோடு 15 ஆண்டுகளுக்கும் மேலாக அவரின் நிழலாகவே பயணித்தவராம். பெரிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், டெல்லி பிரமுகர்கள் என அனைவரும் குல்பர்க்கா சங்கரைக் கடந்துதான் ஜெயேந்திரரை அணுக முடியும் என்ற நிலை இருந்தது. தனக்கு விசுவாசமானவர் என்பதால், திருப்பதியில் உள்ள சங்கரமடத்தை இவரிடம் குத்தகைக்கு ஒப்படைக்கும்படி ஜெயேந்திரர் கூறியிருந்தாராம். ஆனால், ஜெயேந்திரரின் இறுதி காலகட்டத்தில் பவரில் இருந்தவர்கள் இதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்களாம். அதன்பிறகு அவரை மடத்திலிருந்தே வெளியேற்றியும்விட்டனர். இதுவரை அமைதியாக இருந்த குல்பர்க்கா சங்கர், இப்போது தன் பங்குக்குச் சில விவகாரங்களைக் கிளறப்போகிறாராம்.

ஏனாத்தூரில் முதியோர் இல்லம் ஒன்றை ஆரம்பித் திருந்தார் ஜெயேந்திரர். அங்கிருந்த முதியவர்களை இப்போது வெளியேற்றிவிட்டு, அதை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றிவிட்டார்கள். அதை மற்றொரு அறக்கட்டளைக்குக் கைமாற்றிவிட்டார்கள் என்றும் ஒரு பேச்சு ஓடுகிறது. இதேபோல காஞ்சிபுரத்தில், காஞ்சி மடத்துக்கு அருகிலிருக்கும் மருத்துவமனையும் அந்த அறக்கட்டளைக்கு சத்தமில்லாமல் கைமாறியிருக்கிறதாம். பூந்தமல்லி அருகே ஜெயேந்திரர் தொடங்கிய ஆயுர்வேதக் கல்லூரியிலும் சில குளறுபடிகளைத் தொடங்கிவிட்டார்களாம். காஞ்சி சங்கர மடத்துக்குச் சொந்தமாக விழுப்புரத்தில் ஒரு சங்கர மடம் உள்ளது. முதல்கட்டமாக, அதை ஒரு தரப்பு பொறுப்பேற்றுக் கொண்டுவிட்டதாம். மொத்தத்தில் மடத்தின் மொத்த சொத்துகளையும் மடைமாற்ற ஆரம்பித்துவிட்டார்கள் என்கிறார்கள் பக்தர்கள்!