Published:Updated:

``உங்கள் தகுதிக்கு ஏற்றது மாதிரி கேளுங்கள்!'- தே.மு.தி.க-வுக்கு கறார் காட்டிய அமைச்சர்கள்

``உங்கள் தகுதிக்கு ஏற்றது மாதிரி கேளுங்கள்!'- தே.மு.தி.க-வுக்கு கறார் காட்டிய அமைச்சர்கள்
``உங்கள் தகுதிக்கு ஏற்றது மாதிரி கேளுங்கள்!'- தே.மு.தி.க-வுக்கு கறார் காட்டிய அமைச்சர்கள்

தி.மு.க. கூட்டணிக்கு போக்கு காட்டிய தே.மு.தி.க., அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவடையும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். கூறியுள்ள நிலையில், தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்க அமைச்சர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்த பிறகு விஜயகாந்த்தின் மவுசு கூடிவிட்டது. தி.மு.க.வைக் கைக்காட்டி, அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேரத்தை உயர்த்தியுள்ளது விஜயகாந்தின் குடும்பம். இதுகுறித்து தே.மு.தி.க. முக்கிய நிர்வாகிகளிடம் பேச்சுக் கொடுத்தோம்.

``கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், எங்கள் கூட்டணியில்தான் பா.ம.க.வும் இணைந்தது. அவர்களுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இன்று அவர்களுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கிவிட்டு, எங்களுக்கு ஐந்து தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என்கின்றனர். 14 தொகுதிகளில் போட்டியிட்டுவிட்டு, இப்போது ஐந்தில் போட்டியிடச் சொன்னால் ஏற்க முடியுமா? பா.ம.க.வுக்கு இணையாகத் தொகுதிகள் ஒதுக்கினால் மட்டுமே, கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர முடியும் என்று பிரேமலதா கறாராகக் கூறிவிட்டார். ஸ்டாலினின் வருகைக்குப் பிறகு, நாங்கள் தி.மு.க.வுடன் அணிசார்ந்துவிடுவோமோ என்கிற கலக்கம் அ.தி.மு.க.வினரிடம் ஏற்பட்டுள்ளது. ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும் சேர்த்து தருவதாகப் பேசி வருகிறார்கள்'' என்றனர்.

வரும் ஜூலை மாதத்துடன் தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை எம்.பி.க்கள் இடம் காலியாகிறது. எம்.எல்.ஏ-க்கள் பலம் அடிப்படையில், தி.மு.க.வுக்கு இரண்டு எம்.பி-க்கள் கிடைக்கும். அ.தி.மு.க.வுக்கு வரும் நான்கில், ஒன்றை பா.ம.க.வுக்கு ஒதுக்குவது என்று ஏற்கெனவே அறிவித்தாகிவிட்டது. மீதமுள்ள மூன்றில் ஒரு எம்.பி. பதவியை தே.மு.தி.க.வுக்கு விட்டுத்தர அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய தென்மாவட்ட அமைச்சர் ஒருவர், ``அ.தி.மு.க.வின் நடப்பு எம்.பி-க்கள் அனைவருக்கும் இந்தத் தேர்தலில் சீட் கிடைப்பது சந்தேகம்தான். நத்தம் விசுவநாதன், ஜே.சி.டி. பிரபாகர், ரபி பெர்னார்ட் போன்றவர்களுக்கும் எம்.பி. ஆகும் ஆசை இருக்கிறது. இதுபோக, மூத்த அமைச்சர்கள் சிலர் தங்களின் உறவினர்களை எப்படியாவது மாநிலங்களவைக்குள் புகுத்திவிட முயல்கிறார்கள். 'அவங்க தகுதிக்கு ஏற்றது மாதிரி கேட்கச் சொல்லுங்கள். 58 தொகுதிகளில் டெபாஸிட் இழந்த ஒரு கட்சிக்கு ஐந்து சீட் ஒதுக்குகிறதே பெரிய விஷயம். இதுல மாநிலங்களவை எம்.பி. சீட் வேற வேண்டுமா?' என்று ஓப்பனாகவே முதல்வரிடம் சில அமைச்சர்கள் கொந்தளித்துள்ளனர். 'தி.மு.க.வை தோற்கடிப்பது மட்டும்தான் இப்ப முக்கியம். நமக்குப் பாதகம் வர்ற மாதிரி சீட் ஒதுக்க மாட்டோம்' என்று முதல்வர் சமாதானப்படுத்தியுள்ளார்'' என்றார்.

இந்த நிலையில், தே.மு.தி.க. தலைமையகத்தில் நாளை அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அ.தி.மு.க.வுடன் இணைவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று தே.மு.தி.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.