Published:Updated:

`மோடியின் எண்ணம் தவிடுபொடியாகிவிட்டது!'- ராமேஸ்வரத்தில் நாராயணசாமி பேட்டி

`மோடியின் எண்ணம் தவிடுபொடியாகிவிட்டது!'- ராமேஸ்வரத்தில் நாராயணசாமி பேட்டி
`மோடியின் எண்ணம் தவிடுபொடியாகிவிட்டது!'- ராமேஸ்வரத்தில் நாராயணசாமி பேட்டி

``ராணுவத்தின் வெற்றிகளுக்குத் தனிப்பட்ட முறையில் மோடி சொந்தம் கொண்டாட முடியாது'' எனப் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சிவராத்திரி தினமான இன்று தன் மகன் சோமசுந்தரத்துடன் ராமேஸ்வரம் வந்திருந்தார். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் சங்கல்பம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தினார். இதைத் தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலில் புனித நீராடி பின்னர் சுவாமி - அம்பாள் சந்நிதிகளில் தரிசனம் செய்தார்.


 

முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, ``பா.ஜ.க - அ.தி.மு.க இடையே அமைந்துள்ள கூட்டணி கொள்கைக் கூட்டணி கிடையாது. அது கட்டாயப்படுத்தி உருவாக்கிக்கொண்ட கூட்டணி. தமிழகம் உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அந்தக் கூட்டணிக்கு தோல்வியைத் தர மக்கள் தயாராக உள்ளனர். மாறாகச் சமூக நீதி உள்ளிட்ட கொள்கைகளை லட்சியமாகக்கொண்ட தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து பணியாற்றி வருகின்றன. அந்தக் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

காஷ்மீரில் மத்திய ரிசர்வ் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவத்தினர் பாகல்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களை அழித்தது. ஆனால் இந்தத் தாக்குதலில் பலியான தீவிரவாதிகளின் எண்ணிக்கை குறித்து யாருக்கும் தெரியாது. பாகிஸ்தானுக்குச் சொந்தமான சுமார் 8 விமானங்களை அழித்து நமது ராணுவத்தினர் வீர சாகசம் செய்துள்ளனர். இதற்கு பி.ஜே.பி-யோ, பிரதமர் மோடியோ அல்லது பா.ஜ.க தலைவர் அமித் ஷாவோ தனிப்பட்ட முறையில் சொந்தம் கொள்ள முடியாது. எனவேதான் நாட்டில் உள்ள 21 அரசியல் கட்சி தலைவர்களும் இந்திய ராணுவத்துக்கு மரியாதை செய்தனர்.

ஆனால் மோடியோ வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு இதைப் பயன்படுத்திக்கொள்ள பார்த்தார். ஆனால் அவரது எண்ணம் தவிடு பொடியானது. விமானப்படை கமாண்டர் அபிநந்தனை விடுவிக்க உலக நாடுகள் பலவும் கோரிக்கை விடுத்தன. இதற்காக இந்திய மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தனர். இதன் பலனாக அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்துள்ளது. இந்நிலையில் நமது தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் குறித்த ஆதாரங்களைக் கேட்பதில் தவறு இல்லை. இது நமது ராணுவத்தைக் கொச்சைப்படுத்தும் செயல்  அல்ல. ஆதாரம் கேட்பவர்கள் தேசத் துரோகிகள் அல்ல. அண்ணல் காந்தியடிகள், அன்னை இந்திரா, தலைவர் ராஜீவ்காந்தி ஆகியோரைத் தீவிரவாதிகளினால் இழந்தது காங்கிரஸ் கட்சி. எனவே, உண்மையான தேசபக்தி கொண்டது காங்கிரஸ் கட்சியாகும். தேச பக்தி தங்களுக்கு மட்டுமே சொந்தம் என பா.ஜ.க கூறக்கூடாது'' என்றார்.

முதல்வர் நாராயணசாமியுடன் ராமேஸ்வரம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பாரிராஜன், காமராஜ், நம்புராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக ராமேஸ்வரம் வந்த முதல்வர் நாராயணசாமியை கோட்டாட்சியர் சுமன், தனி வட்டாட்சியர் அப்துல்ஜபார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.