பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

@இந்து குமரப்பன், விழுப்புரம்.
எம்.ஜி.ஆருக்காக கவிஞர் வாலி எழுதிய தத்துவப் பாடல்களில் தங்களுக்குப் பிடித்தது எது?

‘ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை’

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்காகக் கவிஞர் எழுதிய வரிகள், இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டு காலத்துக்கும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும் வரிகள்.

கழுகார் பதில்கள்!

ஆரூர் இராசா, கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம்.
‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி இல்லை’ என்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு கருத்தைச் சமீபத்தில் சொல்லியிருப்பதாகச் செய்தி வெளியானது. அப்படியானால் சசிகலாவும் குற்றவாளி இல்லைதானே?


‘ஜெயலலிதா குற்றவாளி இல்லை’ என்று சொல்லப்படவில்லை. ‘மரணம் அடைந்து விட்டதால், அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது’ என்றுதான் உச்ச நீதிமன்றம் சொன்னது. ஆனால், சட்டம் படித்த மேதைகளுக்கே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அத்தனை தூரம் தெளிவாக விளங்காததால், அன்றிலிருந்தே சர்ச்சை தொடர்கிறது. ஆளாளுக்கு ஒவ்வொரு விதத்தில் கையாளுகிறார்கள். ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை, ராகுல் காந்தி தன் இஷ்டம்போல மாற்றிச் சொன்னதுபோலத்தான் இதுவும். உயர் நீதிமன்றங்களும்கூட இப்படித்தான் மாறி மாறி கருத்துகளைச் சொல்கின்றன. தீர்ப்போ... கருத்தோ... எதுவாக இருந்தாலும் ‘வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு’ எனத் தெளிவாக வெளியிட்டால், வீண் வாதங்களுக்கு வேலையே இருக்காது.

@முத்துக்கிருஷ்ணன், தாராபடவேடு, வேலூர்.
பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறையில் கரப்ஷன், கலெக்‌ஷன், கமிஷன் கொடிகட்டிப் பறப்பதாக ஓயாமல் குற்றம்சாட்டி வருகிறார் மு.க.ஸ்டாலின். ஒருவேளை இவர் முதல்வராகிவிட்டால், இவற்றை எல்லாம் ஒழிக்கத் தனியாகச் சட்டம் போடுவாரா?


இவர்கள் ஆண்ட காலத்திலும் நீக்கமற நிறைந்திருந்ததுதானே... எதிர்க்கட்சியில் இருப்பவர்கள்தான் இதைப் பற்றிப் பேசுவார்கள்.ஏற்கெனவே இருக்கும் சட்டங்கள் போதாதா? ஆளுங்கட்சியினர் சொன்னபடி நடந்து கொள்ளாத அதிகாரிகளுக்கு, அமைச்சர் தொடங்கி ஆளுங்கட்சியின் அல்லக்கைகள் வரை போன் போடாமல் இருந்தாலே போதும்... அனைத்தும் தானாக அடங்கிவிடும். அதைச் செய்யும் துணிச்சல், எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது - ஸ்டாலின் உட்பட.

@யோகா வெங்கட், சத்துவாச்சாரி.
எல்லா வழக்குகளையும் சட்டத்தின் பார்வையில் மட்டுமே நீதிபதிகள் அணுகுவது சரியா?


அதுதான் சரி. அரிதான வழக்குகளில் மட்டும்தான் சற்றே விலகி நின்று யோசிக்க முடியும். நியாய, தர்மத்தையும் சேர்த்து பரிசீலிக்க முடியும். எப்போதுமே நியாய, தர்மத்தை மட்டுமே பரிசீலிக்க ஆரம்பித்தால், நீதி பரிபாலனம் என்பதே கேள்விக்குள்ளாகிவிடும். சந்தர்ப்ப, சாட்சியங்கள் மட்டுமே நீதியைத் தீர்மானிப்பதுதான் இந்திய நாட்டினுடைய நீதி பரிபாலனத்தின் அடிநாதம். எனவே, நீதி வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டுதான் இருக்கமுடியும்.

@பல்லவமன்னன், நெல்லை.
பொன்பரப்பி தமிழரசன்?


உரிமைகளும் வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட இளைஞர்களுக்காக போராடக் கிளம்பிய தமிழ்த் தேசியவாதி, வெற்றியைத் தேடி ஆயுதத்தைக் கையில் எடுத்தார். தமிழ்நாடு விடுதலைப் படையைக் கட்டி அமைத்தார். இயக்கத்தின் தேவைக்காக நிதி தேடி பொன்பரப்பி கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது கொல்லப்பட்டார். இதில், ‘முன்கூட்டியே மோப்பம் பிடித்த காவல்துறை, பொதுமக்களைத் திரட்டி, அவர்களோடு கலந்து நின்று தமிழரசன் உள்ளிட்டோரை அடித்தே கொன்று பின்பு, மக்கள்தான் கொன்றார்கள் என்று கதையைப் பரப்பிவிட்டது’ என்கிற குற்றச்சாட்டு இன்னும் உயிரோடு இருக்கிறது. இவருடைய பாதை சரியானதா... தவறானதா என்கிற வாதப்பிரதிவாதங்கள் இன்றும் தொடர்கின்றன. ஆனால், அவர் வாழ்ந்த காலகட்டத்தில், ஏற்பட்ட நெருக்கடிகளால்தான் அவர் ஆயுதத்தைத் தூக்கினார் என்பது உண்மை.

கழுகார் பதில்கள்!

@கமலக்கண்ணன். இரா.சித்தோடு.
எந்தவித ஆதாரமும் இல்லாமல், மேடையில் பல பொய்களை சீமானால் எப்படிப் பேச முடிகிறது?


பொதுவாகவே அரசியல்வாதிகள் என்றால், நாக்கு வியாபாரிகள்தான். அதற்காகப் பொத்தாம்பொதுவாகக் குற்றம்சாட்டக்கூடாது சீமான்.

@சரண்கங்கா.
தற்போதையச் சூழலில், சசிகலா விடுதலை பெற்று வந்தால், அவரால் அரியணை ஏறியவர்களின் தலைகள் தப்புமா?


ஏதோ பூதகி ரேஞ் சுக்குப் பூதாகரப் படுத்துகிறீர்களே. அரசியல்வாதிகளில் அவர் கொஞ்சம் வித்தியாசமானவர். பலரும் நேரடியாகக் களத்தில் நிற்பார்கள். இவர் அக்காவின் அனைத்துவிதமான ஆசிகளோடும் பின்னால் நின்றுகொண்டு அரசியல் செய்தார். மற்றபடி என்ன செய்துவிட்டார்? எதுவாக இருந்தாலும் கையில் அதிகாரம் இருக்கும்வரை மட்டுமே. அது இல்லாவிட்டால், சசிகலா மட்டுமல்ல, கொம்பாதி கொம்பனாக இருந்தாலும் அடங்கித்தான் ஆகவேண்டும்.

கழுகார் பதில்கள்!

ஆ.ஞானசேகரன், மதுரை-9.
எட்டுவழிச்சாலை திட்டத்தில், மத்திய அரசு உறுதியாக இருக்கிறதே... இதனால் யாருக்குப் பலன்?


கடைசிகட்ட நாடாளுமன்றத் தேர்தலும் தமிழக இடைத்தேர்தல்களும் முடியும்வரை வாயே திறக்காத எடப்பாடி பழனிசாமி, ‘உயிர் முக்கியமா, பயிர் முக்கியமா’ என்று கேட்டபோதே பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதே! தில் இருந்தால், இதைத் தேர்தல் பிரசாரத்திலும் அல்லவா சொல்லியிருக்க வேண்டும்.

@இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
தமிழ்நாட்டில், 39,202 நீர்நிலைகள் இருந்தும் சொட்டுநீர்கூட சேமித்து வைக்காதது அரசின் அலட்சியப்போக்குதானே?


அரசு அல்ல, அரசுகளின் அலட்சியப்போக்கு. மாநிலத்தை ஆண்ட/ஆளும்கட்சிகள்; இந்தக் கட்சிகளுக்கு முட்டுக்கொடுத்து ஆட்சிக்கட்டிலில் ஏற்றிவைக்கும் கட்சிகள்; ‘நாம் சொல்கிறபடி நடந்து கொண்டால்போதும்’ என்றபடி மாநிலத்தில் இவர்கள் நடத்தும் அத்துமீறல்களை எல்லாம் வேடிக்கை பார்த்த/பார்த்துக் கொண்டிருக்கிற ஆண்ட/ஆளும் தேசிய கட்சிகள் என அனைவருமே இதில் பங்காளிகள்தான். எல்லாவற்றுக்கும் மேலாக, இது எதையுமே எதிர்த்துக்கேட்காமல், ‘சூதானமா வாழ்ந்துட்டுப் போயிடணும்டா மகனே’ என்று வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் நாம் பெரும் பங்காளிகள்.

@குடந்தை பரிபூரணன், வடகரை.
பேய்ப் படங்கள் பார்த்து யாரும் பயப்படுவதாகத் தெரியவில்லையே?


‘பொய்’ப் படங்களுக்கு எல்லாம் இப்போது யாரும் பயப் படுவதில்லை என்பது வரவேற்கத்தக்க விஷயம்தானே! மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று சந்தோஷப்படுங்கள்.

@லி.சீனிராஜ், தொம்பக்குளம்.
கதையம்சம் இருந்தாலும் ‘பாகுபலி’ அளவுக்கு ‘பொன்னியின் செல்வன்’ வெற்றிபெற வாய்ப்பு உள்ளதா?

பெரிய அளவுக்கு கதையம்சம் இல்லாத ‘பாகுபலி’யே வென்றிருக்கிறது. கதையம்சம் மட்டும் முக்கியமல்ல, படமாக்கப்படும் விதமும் அது ரசிகர்களுக்குப் படைக்கப்படும் விதமும்தான் வெற்றியைத் தீர்மானிக்கும்.

ஆர்.துரைசாமி, கணபதி, கோயமுத்தூர்-6.
‘ஜீவசமாதி’ என்று சொல்லிக்கொண்டு மரணத்தைத் தழுவும் நிகழ்வுகளை, ‘தற் கொலை’ என்கிற வகையில் எடுத்துக்கொண்டு அரசாங்கத்தால் தடுக்க முடியாதா?


நம்பிக்கை, மூட நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை, பகுத்தறிவு, அறியாமை என்று பலவற்றுக்குமான வரையறை எது என்பதே இங்கே வரையறுக்கப்படவில்லையே!

கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு