Published:Updated:

மிஸ்டர் கழுகு: கனிமொழிக்குத் தடை!

மிஸ்டர் கழுகு: கனிமொழிக்குத் தடை!

மிஸ்டர் கழுகு: கனிமொழிக்குத் தடை!

மிஸ்டர் கழுகு: கனிமொழிக்குத் தடை!

Published:Updated:
மிஸ்டர் கழுகு: கனிமொழிக்குத் தடை!

பொங்கல் விழாவாச்சே... கரும்புத் தட்டைகளுடன் வந்தார் கழுகார். நம் பங்குக்கு சர்க்கரைப் பொங்கல்.   

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சசிகலா சமாச்சாரங் களை அடுத்துச் சொல்கிறேன். முதலில் கனிமொழி விஷயம் ஆரம்பிக்கலாமா...'' என்ற கழுகார்... ''தி.மு.க. வட்டாரத்தில் கொஞ்ச காலம் அடங்கி இருந்த அனல் மறுபடியும் பற்றிக்கொண்டுவிட்டது.

கனிமொழி சிறையில் இருந்து வந்ததில் இருந்தே ஸ்டாலின் மற்றும் அழகிரி ஆட்க ளுக்குக் கசப்புதான். அவருக்குத் தரப்பட்ட வரவேற்பை ஸ்டாலின் ஏனோ ரசிக்கவில்லை. ஜனவரி 5-ம் தேதி கனிமொழியின் பிறந்த நாள். அதையொட்டி வடசென்னைப் பிரமுகர்கள் பலரும் சேர்ந்து சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கனிமொழியின் பிறந்த நாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடினார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் செய்யப்பட்டன. ராஜாத்தி அம்மாள் கலந்துகொண்டு கண்ணீர் உரை ஆற்றினார். அதை உமது நிருபரே ரிப்போர்ட் பண்ணி இருந்தார். 'இந்த விழாவை நடத்தக் கூடாது என்று எங்களுக்குத் தடை இருந்தது’ என்று பெரம்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவம் கர்ஜித்ததும் இந்த மேடையில்தான். இந்தத் தடைகள் நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டு இருக்கின்றனவாம்!''

மிஸ்டர் கழுகு: கனிமொழிக்குத் தடை!

''ம்!''

'' 'கனிமொழியைப் பார்க்காதே! கனிமொழியிடம் பேசாதே! கனிமொழி பற்றி கேட்காதே!’ என்கின்ற ரீதியில் இருக்கின்றனவாம் இந்தத் தடைகள். 'கனிமொழி பிறந்த நாளை ஒட்டி சென்னையில் ஒட்டப்பட்ட முக்கியமான போஸ்டர்களில் ஒன்று முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியும் அவரது சகோதரரும் ஒட்டியது. அவர்கள் இருவருமே சிறையில் இருக்கிறார்கள். 'நீங்க எதுக்கு போஸ்டர் ஒட்டினீங்க?’ என்று அவரது குடும்பத்துக்கு சிலர் மிரட்டல் விடுத்துள்ளார்கள்’ என்று தி.மு.க. வட்டாரத்தில் ஒரு தகவல் பரவி இருக்கிறது. இந்த சம்பவம் நடந்தபோது டெல்லியில் இருந்தார் கனிமொழி. அவரது கவனத்துக்குச் சொல்லி இருக்கிறார்கள். இரண்டு நாட்கள் கழித்து சென்னை வந்தவர், புழல் சிறைக்குச் சென்றார். சாமியையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்தார். ஆறுதல் சொல்லிவிட்டுத் திரும்பினார். இது, ஸ்டாலின் தரப்பை அதிகக் கோபம்கொள்ள வைத்தது!''

''அதிரடியாக இருக்கிறதே!''

''இதைவிட இன்னொரு கொந்தளிப்பைக் கேளும். பிப்ரவரி - 3ம் தேதி தி.மு.க. பொதுக்குழு கூடப்போகிறது!''

''தேர்தல் தோல்விக்குப் பிறகு நடந்த பொதுக் குழுவிலேயே எதுவும் நடக்கவில்லை. இதில் என்ன நடந்துவிடும்?''

''பொதுக்குழுவில் இந்த விவாதங்கள் வந்து கொந்தளிப்பைக் கிளப்பும் என்று நான் சொல்ல வரவில்லை. 'பிப்ரவரி 3-ம் தேதி என்று தேதி குறிக்கப்பட்டதன் பின்னணியே கனிமொழியை பொதுக்குழுவில் கலந்துகொள்ள விடாமல் தவிர்க்க வேண்டும்’ என்பதற்காகத்தான் என்கிறார்கள்!''

''இது என்ன புதுக்கதை?''

''பொதுவாக சனி, ஞாயிறு ஆகிய கிழமை களில்தான் இதுபோன்ற குழு கூட்டங்கள் நடத்தப்படும். வெளியூர்க்காரர்கள் அனைவரும் வருவதற்கு வசதியாக இப்படி நடத்துவார்கள். ஆனால், இந்தத் தடவை, வெள்ளிக்கிழமை பொதுக்குழு கூடப்போகிறது. 'விடுமுறை நாட்களில் வைத்தால் மட்டும்தான் கனிமொழியால் கலந்துகொள்ள முடியும். மற்ற வார நாட்களில் அவர் நிச்சயம் பார்ட்டியாலா கோர்ட்டில் ஆஜராவதற்காக டெல்லியில் இருந்தாக வேண்டும். அவரை வரவிடக் கூடாது என்பதற்காகத்தான் இப்படிச் செய்துவிட்டார்கள்’ என்று கனிமொழி ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். 'நாலாம் தேதி வெச்சுக்கலாம்னு தலைவர் சொன்னாரு. ஆனா தளபதி அதை ஏத்துக்கலை’ என்கிறார்கள்.''

''அப்படியா?''

''பிப்ரவரி 3 என்பது அண்ணா நினைவு நாள். அன்றைய தினம், அமைதி ஊர்வலமாக அண்ணா நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கும். 'பேரறிஞர் அண்ணா இறந்த நாள் என்பது துக்ககரமான நாள். அன்றைய தினம் இப்படிப்பட்ட பொதுக்குழுக்களைப் பொதுவாக நடத்த மாட்டார்கள். அதையும் மீறி நடத்துவதற்கு உண்மையான காரணம் இதுதான்’ என்றும் சொல்கிறார்கள். இந்தத் தேதியை மாற்றி அமைக்க கருணாநிதி எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.''

''இப்படிப்பட்ட நிலையில் கனிமொழிக்கு புதிய பதவி எப்படிக் கிடைக்கும்?''

'' கனிமொழி விரக்தி மன நிலையில்தான் இருக் கிறார். 'எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம்’ என்று கருணாநிதியிடம் அவர் சொன்னாலும், 'ஏதாவது பதவி தந்தாக வேண்டும்’ என்பதில்  ராஜாத்தி அம்மாள் உறுதியாக இருக்கிறாராம். 'நாங்க எல்லாம் இருக்கும்போதே என் பொண்ணை இந்த மாதிரிப் பண்றாங்களே. நாங்க இல்லேன்னா, என்ன நடக்குமோ?’ என்று  பதற்றமாகப் பேசுகிறாராம்!''

''பிப்ரவரி 3 என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!'' என்ற நாம், ''சசிகலா விஷயத்துக்கு வாரும்'' என்று கழுகாருக்குக் கட்டளை போட்டோம்.

''சசிகலாவின் மனநிலையை ஊருக்கு அறிவிக்கும் என்று நினைக்கப்பட்ட ம.நடராஜனின் விழா, தஞ்சாவூரில் நடந்துகொண்டு இருக்கிறது. செவ்வாய்கிழமை இரவுதான் நடராஜன் பேசப்போகிறார். அப்போதுதான் முழு விவரங்கள் தெரியும். ஆண்டுதோறும்  நடராஜனால் நடத்தப்படும் தமிழர் கலை இலக்கியத் திருவிழாவுக்கு எப்போதும் பரபரப்பு உண்டு. இந்த வருடம் அது இன்னும் கூடுதலாகவே இருக்கிறது. அவர் அழைத்து வரக்கூடிய ஆட்களும் வித்தியாசமாக இருப்பார்கள். மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ண முகர்ஜி மற்றும் கார்கில் போரில் கேப்டனாகச் செயல்பட்ட கொல்கத்தாவை சேர்ந்த அருண் சக்ரவர்த்தி ஆகிய இருவரும் வந்திருந்தார்கள். நடராஜன் இருக்கும் இடத்தில் மதுரை ஆதீனம் இருப்பார். அவரும் தவறாமல் வந்துள்ளார். வழக்கமாக விழா தொடங்குவதற்கு முன்னால் நடராஜன், பத்திரிகையாளர்களைச் சந்திப்பது நடக்கும். இந்த வருடம் அது நடக்கவில்லை. இந்த ஆண்டு விழா நடக்குமா நடக்காதா எனப் பலர் நினைத்தனர். 'ஆண்டு தவறாமல் விழா நடக்கும்’ எனச் சுருக்கமாகப் பேசித் தொடங்கி வைத்தார் நடராஜன். வெளி மாவட்டங்களில் இருந்து பெரும்பாலானோர் வந்திருந்தனர். அ.தி.மு.க.வினரும் கட்சிக் கரை வேட்டியுடன் வந்திருந்தனர். இவர்களோடு உளவுத் துறையும் கலந்து இருந்தனர். 'பட்டமில்லாத பேரரசனே... முடிவெடு தலைவா...’ என்று நடராஜனுக்குத் தூபம் போடும் போஸ்டர்களைப் பார்க்க முடிந்தது. இரண்டு நாள் கலை நிகழ்ச்சிகளுக்குப் பிறகுதான் நடராஜன் என்ன சொல்கிறார் என்பது தெரியும்!''

''சசிகலா?''

''இந்த ஆண்டு அவருக்குப் பொங்கல் கிடையாது. அவரது சகோதரி வனிதாமணி சமீபத்தில்தான் இறந்தார். எனவே, அந்தக் குடும்பத்தினர் யாரும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடவில்லை. ஜெயலலிதாவுடனான நட்பும் முறிந்ததால், இது சோகப்பொங்கல். பொங்கலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக சசிகலா, மன்னார்குடி வந்து தன் உறவுகளை மட்டும் பார்த்துவிட்டுச் சென்றதாகச் சொல்கிறார்கள். அவரை யாரெல்லாம் சந்தித்தார்கள் என்பதை நான் சொல்ல வேண்டியது இல்லை. பொங்கலுக்கு முதல் நாள், தினகரன், சுதாகரன், பாஸ்கரன் என்று சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் அவரவர் குடும்பத்தினருடன் மன்னார்குடி வந்தார்கள். ஆனால், சசிகலா வரவில்லையே என்றும் சிலர் சொல்கிறார்கள். மன்னார்குடி டவுனில் இருக்கும் மன்னை நகரில் வனிதாமணியின் வீடு இருக்கிறது. இங்குதான் படையல் வைபவம் நடந்தது. மன்னார்குடி டவுனில் இருந்து 5 கி.மீ தொலைவில் சுந்தரக்கோட்டையில் திவாகரன் வீடு இருக்கிறது. நெல்லி, மாமரங்களுக்கு நடுவில் அமைந்திருக்கும் தோட்ட வளாகத்தில் யார் உள்ளே போய் வருகிறார்கள் என்று தெரிய வாய்ப்பு இல்லை. அன்றைய தினம் மராட்டிய மாநிலப் பதிவு எண் உள்ள கருப்புக்கார் ஒன்று இரண்டு வீடுகளுக்கும் அடிக்கடி சென்று வந்ததை உள்ளூர்க்காரர்கள் பார்த்தனர். அதன் கண்ணாடியிலும் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததால், உள்ளே இருந்தவர்கள் யாரென்று தெரியவில்லை. படையல் வைபவம் முடிந்ததும், திவாகரனும் அவரது மனைவியும் ஒரு டிபன் கேரியரில் சாப்பாடு எடுத்துக்கொண்டு சுந்தரக்கோட்டை வீட்டுக்கு அவசரமாகக் கிளம்பிப் போனார்களாம். 'சொந்தபந்தம் கண்களில் படாமல் சுந்தரக்கோட்டை வீட்டிலேயே சசிகலா இருக்கிறார். அவருக்குத்தான் சாப்பாடு' என்று உறவினர்கள் பேசிக்கொண்டார்கள். ஆனால் போலீஸ் தரப்பு, 'சசிகலா சென்னையிலேயேதான் இருக்கிறார்’ என்கிறது!''

''சொந்த வீட்டுக்குச் செல்வதற்குக்கூட அனுமதி வாங்க வேண்டுமா என்ன?''

''மந்திரிகள் மத்தியில் ஒருவித பதற்றம் தொற்றிக் கொண்டு உள்ளது. பொங்கலுக்கு முன்பு முக்கிய அமைச்சர்களை முதல்வர் அழைத்து, அரசுத் தரப்பு பி.ஏ-களில் 27 பெயர்களைச் சொல்லி, 'இவர்கள் மீது போலீஸ் ரிப்போர்ட் சரியாக இல்லை' என்று சொன்னாராம். அப்படி என்றால், அவர்களை மாற்றி விடுங்கள் என்றுதானே அர்த்தம். பொங்கல் முடிந்ததும் இந்த பி.ஏ-க்கள் அவரவரின் துறைகளுக்கே தூக்கி அடிக்கப்படலாம்.''

''அரசு பி.ஏ. சரி, ஒவ்வோர் அமைச்சரும் தனிப்பட்ட முறையில் பி.ஏ. என்கிற பேனரில் சிலரை முழு அதி காரத்துடன் நடமாட விட்டிருக்கிறார்களே? அது..?''

''பல முகங்களைக்கொண்ட பி.ஏ-க்கள் பலரும் உளவுத்துறையின் சர்வேலன்ஸில் இருக்கிறார்கள். சப்ளை அண்டு சர்வீஸ், கட்டிங் வாங்குவது போன்ற காரியங்களை மட்டுமே கவனித்து வரும் இவர்களுக்கு அடுத்த கட்டமாக கல்தா உண்டாம்.''

''பி.ஏ-க்கள் வரை முதல்வர் உன்னிப்பாகக் கண் காணிக்கிறார் என்றால், சந்தோஷம்தான்.''

''திருச்சி அருகே  பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட  மதுபான தொழிற்சாலை ஒன்று பிப்ரவரியில் உற்பத்தியைத் துவக்க இருக்கிறது. அதன் பின்னணியை உளவுத் துறையினர் ஆராய்ந்து வருகிறார்களாம். அதன் உரிமையாளருக்கு யாராவது பின்னணியாக இருக்கிறார்களா என்று விசாரணை தொடர்கிறது'' என்று கழுகார் சொல்ல, ''நாங்களும் விசாரிக்கிறோம்'' என்றோம்.

''நாளை ஒரு நாள் எனக்கு விடுமுறை வேண்டும்'' - அனுமதி பெற்றுப் பறந்தார் கழுகார்!

அட்டை மற்றும் படங்கள்: கே.கார்த்திகேயன், என்.விவேக், 'ப்ரீத்தி’ கார்த்திக், கே.குணசீலன்

 ''நடராஜன் கையில் 90 எம்.எல்.ஏ.க்கள்!'

மிஸ்டர் கழுகு: கனிமொழிக்குத் தடை!

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா தி.மு.க. பொதுக்கூட்டம் கடந்த 15-ம் தேதி மன்னார்குடியில் நடந்தது.  இதில்பேசிய தி.மு.க  மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கோட்டூர் ராஜசேகரன் பேச்சு ஆளும் கட்சியை மிரள வைத்துள்ளது. 'ஜெயலலிதா, 'நீங்க மூணு பேரும் தப்பு செஞ்சதா கோர்ட்டில் ஒப்புக்கோங்க. இதற்கும் முதலமைச்சருக்கும் சம்பந்தமில்லை. நாங்கதான் இந்தச் சொத்துக்களை வாங்கினோம்னு சொல்லிடுங்க’ என்று, சசிகலாவிடம் சொல்லி இருக்கிறார். இதற்கு சசிகலாவும், இளவரசியும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். இதை சுதாகரன், நடராஜனிடம் கூற, 'நீங்க எப்படிச் சம்மதிக்கலாம்?’ என்று பிரச்னை செய்ததுதான் இந்தப்  பிரிவுக்குக் காரணம்.  

இப்போது மூணு பேரும் கோர்ட்டில், 'நாங்க போயஸ் தோட்டத்தில் வேலைதான் பார்த்தோம். எங்களுக்கு எதுவும் தெரியாது. அவங்க எந்த இடத்தில் கையெழுத்துப் போடச் சொன்னாலும் நாங்க போட்டோம். அந்தச் சொத்துக்களை அரசாங்கமே எடுத்துக்கிட்டாலும் எங்களுக்குப் பிரச்னை இல்லை என்று  சொல்லப்போறதாக அவங்க தரப்பில் இருந்து எங்களுக்குச் செய்தி வந்துள்ளது.

பெங்களூரு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், நடராஜன் பின்னால் 90 எம்.எல்.ஏ-க்கள் வருவாங்கன்னு  சொல்றாங்க. இதனால், அந்தக் கட்சி யில் மீண்டும் ஜெ. அணி, ஜானகி அணி போல ஒரு நிலை உருவாகலாம். ஒரு வருஷத்தில் அ.தி.மு.க. ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது' என்று  பேசி இருக்கிறார்.

மன்னார்குடி குடும்பமும் கோட்டூர் ராஜசேகரனும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது! 'ராஜசேகரன் எதிரொலிப்பது யாருடைய குரலை?’ என்று போலீஸார் விசாரிக்க ஆரம்பித்துள்ளார்கள்!

மிஸ்டர் கழுகு: கனிமொழிக்குத் தடை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism