Published:Updated:

வீதிக்கு வந்த வீரபாண்டியார் வீட்டுச் சண்டை - மினி தொடர்: பாகம் 1

வீதிக்கு வந்த வீரபாண்டியார் வீட்டுச் சண்டை - மினி தொடர்: பாகம் 1
வீதிக்கு வந்த வீரபாண்டியார் வீட்டுச் சண்டை - மினி தொடர்: பாகம் 1

-வீ.கே.ரமேஷ்

படங்கள்:
க. தனசேகரன்

வீரபாண்டியாரை 'சேலத்து சிங்கம்' என்று சிலாகிப்பார் கருணாநிதி. அவரும் கடைசி நிமிடங்கள் வரை கருணாநிதிக்கே சிம்ம சொப்பனமாகத்தான் இருந்தார். அந்தச் சிங்கத்தின் குகையிலேயே இப்போது சிறு நரி புகுந்தது போல், சலசலப்பு கிளம்பி இருக்கிறது. விளைவு, பலபேருக்கு பஞ்சாயத்து பண்ணிய வீரபாண்டியாரின் குடும்பத்திற்கே இப்போது நாட்டாமை தேடவேண்டிய நிலை. உண்மையில் அந்தக் குடும்பத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?

கோலோச்சிய வீரபாண்டிய ஆறுமுகம்

தொடர்ந்து 38 வருடங்களாக திமுக மாவட்ட செயலாளராகவும், ஐந்து முறை எம்.எல்.ஏவாகவும், வேளாண்மை, உள்ளாட்சி உள்ளிட்ட துறைகள் என மூன்று முறை அமைச்சராகவும் இருந்த மூத்த முன்னோடி வீரபாண்டி ஆறுமுகம்.

வீதிக்கு வந்த வீரபாண்டியார் வீட்டுச் சண்டை - மினி தொடர்: பாகம் 1

கடந்த திமுக ஆட்சியில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தபோது, சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள அங்கம்மாள் காலனி நிலத்திற்கு அண்ணன் ஆசைப்பட்டதால், அங்கிருந்த மக்களை இரவோடு இரவாக அடித்து விரட்டினர் அன்புத் தம்பிகள். திமுக ஆட்சி முடியும் வரை அந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு போக முடியாத சூழ்நிலை இருந்தது.

வீதிக்கு வந்த வீரபாண்டியார் வீட்டுச் சண்டை - மினி தொடர்: பாகம் 1

சூளுரைத்த ஜெயலலிதா

விஷயம் தெரிந்து, தேர்தல் பிரச்சாரத்திற்கு சேலம் வந்த ஜெயலலிதா, 'அங்கம்மாள் காலனி நிலத்தை மீட்டு தருவேன். அந்த நிலத்தை அபகரிக்க நினைக்கும் வீரபாண்டி ஆறுமுகத்தை சிறைக்குள் தள்ளுவேன்' என்று சூளுரைத்துச் சென்றார். இதனால், கொதித்தெழுந்த வீரபாண்டி ஆறுமுகமும் அடுத்தடுத்த மேடைகளில் ஜெயலலிதாவை ஒருமையில் திட்ட ஆரம்பித்தார்.

ஆட்சி தன் கைக்கு வந்ததும். வீரபாண்டி ஆறுமுகத்தை மையமாக வைத்தே ஜெயலலிதா நில அபகரிப்பு புகார்களை கவனிக்க ஒரு தனி பிரிவை ஏற்படுத்தியதாக சொல்வார்கள். அம்மா சொன்னது போலவே, அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட வீரபாண்டி ஆறுமுகத்தை, பின்பு பழைய வழக்குகளுக்காக குண்டர் தடுப்புக் காவலும் சூழ்ந்தது.

சிங்கத்தை சீட்டிங் கேஸில் தள்ளினால் எப்படி இருக்கும்? ஆதரவாளர்கள் கொதித்தார்கள்; எதிர்ப்பாளர்கள் திளைத்தார்கள். சிறைவாசம் வீரபாண்டியாரை ரொம்பவே முடக்கிப் போட்டது. குண்டாஸை உடைத்து வெளியில் வந்தாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மரணத்தை தழுவினார்.

வெடித்துக் கிளம்பிய சொத்து பிரச்னை

குடும்பத் தலைவன் இறந்தால் சராசரி குடும்பங்களில் சொத்துப் பிரச்னை தலை தூக்கும். வீரபாண்டியார் குடும்பத்திலும் அப்படியொரு பிராது வெடிக்கும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். குடும்ப உறுப்பினர்களுக்குள் இலைமறை காயாக இருந்த சொத்துப் பிரச்னை, வீரபாண்டியாரின் மூத்த மருமகள் பிருந்தா மூலமாக விஸ்வரூபம் எடுத்து கோர்ட் கதவுகளை தட்டியது.

வீதிக்கு வந்த வீரபாண்டியார் வீட்டுச் சண்டை - மினி தொடர்: பாகம் 1

சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பிருந்தாவும், வீரபாண்டியாரின் மூத்த மனைவி ரெங்கநாயகியும் கூட்டாக தாக்கல் செய்திருக்கும் அந்த மனுவில் '(வீரபாண்டி)எஸ்.ஆறுமுகம் 2007 செப் 6 ஆம் தேதி செவ்வாய்ப்பேட்டை ஜனார்த்தனராவிடம் இருந்து 97.5 சென்ட் நிலத்தையும், அவரது சகோதரர் கங்காராமிடம் இருந்து 50.5 சென்ட் நிலத்தையும் வாங்கி எஸ்.ஆறுமுகம், ரெங்கநாயகி மற்றும் பிருந்தா செழியன் என மூன்று பெயரிலும் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார். பிறகு, கடந்த 2011 டிசம்பர் 23 ஆம் தேதி ரெங்கநாயகி, பிருந்தா செழியன் ஆகிய எங்கள் இருவரையும் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இரவில் கடத்திச் சென்ற ஆறுமுகம், அங்கு வைத்து மிரட்டி இந்த இரண்டு சொத்துக்களின் பங்குகள் மேலும் எட்டு சொத்துக்களையும் தன் பெயருக்கு மாற்றிக் கொள்வதாக கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

##~~##
ரெங்கநாயகி தன் கணவருக்கு தானமாக கொடுப்பதாகவும், மருமகள் பிருந்தாசெழியன் அந்த நிலத்தை 37.66 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளதாகவும், நான்கு காசோலைகளில் தலா 9 லட்சமும், ஐந்தாவது காசோலையில் 1.66 லட்சமும், வழங்குவதாக அவர் தெரிவித்த போதிலும், அந்த தொகை வழங்கவில்லை.

எனவே, அந்த சொத்து பதிவை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். முதல் மனைவி ரெங்கநாயகியின் இளைய மகன் ராஜேந்திரனுக்கு பங்கை கொடுக்காமல், இரண்டாவது மனைவி லீலா, அவரது மகன் பிரபு, முதல் மனைவியின் மகள்கள் மகேஸ்வரி, நிர்மலா, மூத்த மகன் செழியனின் மகள்கள் சூர்யா, சிந்து, ராஜேந்திரனின் மகள்களான கிருத்திகா, மலர்விழி ஆகியோருக்கு அந்தச் சொத்து தானமாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தான சொத்து பரிமாற்ற பதிவு செல்லாது என அறிவிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

வீபாண்டியார் குடும்பத்திலிருந்தே இப்படி ஒரு வழக்கு புறப்பட்டு வர என்ன காரணம்? அந்தக் குடும்பத்தில் இப்போது என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?

நாளை பார்க்கலாம்...