Published:Updated:

நாஞ்சில் சம்பத் அரசியலில் இருந்து விலகலா... ஸ்டாலினை புகழ்ந்து பேசியது ஏன்? 

நாஞ்சில் சம்பத் அரசியலில் இருந்து விலகலா... ஸ்டாலினை புகழ்ந்து பேசியது ஏன்? 
நாஞ்சில் சம்பத் அரசியலில் இருந்து விலகலா... ஸ்டாலினை புகழ்ந்து பேசியது ஏன்? 

தி.மு.க, ம.தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க எனக் கட்சிகள் மாறியுள்ள நாஞ்சில் சம்பத்  திமுக மேடையில் தலை காட்டத் தொடங்கியுள்ளார். தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தம்புசெட்டி தெருவில் நடந்த கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். 

நாஞ்சில் சம்பத் அரசியலில் இருந்து விலகலா... ஸ்டாலினை புகழ்ந்து பேசியது ஏன்? 

தி.மு.க மேடையில் பேசிய நாஞ்சில் சம்பத், ``இந்தியாவின் பலமே மதச்சார்பின்மைதான். அந்த  மதச்சார்பின்மைக்கு மாரடைப்பு வந்துள்ளது. சகிப்புத்தன்மை சாக்காடு நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. கோபுர பெருமை கொண்ட தேசம் குட்டிச்சுவராகப் போய்க்கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் யாரால் மீட்க முடியுமோ இல்லையோ இந்தியாவின் அடுத்த பிரதமரை கைகாட்டும் துணிச்சல் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு இருக்கிறது. நீட் தீர்மானம் எங்கே... குடியரசுத் தலைவர் ஏன் இன்னும் கையொப்பமிடவில்லை என்று கேட்கும் துணிவு ஸ்டாலினுக்கு உள்ளது.  நான் ஏதோ முடிவெடுத்து விட்டதாகச் சிலர் நினைக்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. சிறு பருவத்தில் எந்தக் கொள்கையை பேசினேனோ அந்தக் கொள்கைக்கு இப்போது ஆபத்து வந்துள்ளது. பாசிசத்தை வீழ்த்த எப்போதும் என் குரல் ஒலிக்கும் . அந்த மேடை திராவிட மேடையாக இருக்கும்.

இந்த மண் பெரியாரின் நந்தவனம், அண்ணாவின் கோட்டம், கலைஞரின் பாசறை, தளபதி ஸ்டாலினின் காவல் அரண் இங்கே எப்படி தாமரை மலரும். இந்தியாவின் வரலாற்றில் இரண்டாவது சுதந்திர போருக்குத் தலைமை தாங்கிய கட்சி  தி.மு.க. அதன் தலைவர் ஸ்டாலின், தி.மு.க-வின் முகம் ஸ்டாலின். எந்த சுயநலமும் என்னிடத்தில் இல்லை. நான் சீட் கேட்டும் இங்கு வரவில்லை. இக்கட்டான காலத்தில் ஒரு படகு கிடைக்காதா என்று தவிக்கிறோம். அதன் பெயர் ஸ்டாலின். எங்கே எல்லாமோ நான்  மாறினேன். ஆனால், என்  கொள்கையை மாற்றிக் கொண்டதில்லை. அதனால்தான் உங்கள் முன்னால் இப்போதும்  என்னால் தைரியமாக நிற்க முடிகிறது. ஸ்டாலின் காலம் தந்த தலைவர். அந்தரத்தில் இருந்து வந்து அவர் தலைவர் பதவியில் அமர்ந்தவர் இல்லை. 

நாஞ்சில் சம்பத் அரசியலில் இருந்து விலகலா... ஸ்டாலினை புகழ்ந்து பேசியது ஏன்? 

என்னைக் குறித்து ஒரு முடிவெடுப்பதற்கு முன்னால் என் அடையாளங்களை மீட்டெடுக்க முயன்று வருகிறேன். இலக்கிய பேச்சுகளை புத்தகமாகப் பதிப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. திரைப்படத்தில் நடிப்பதால் தற்போது என்னால் தெருக்களில் சாதாரணமாக நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது யுத்த காலம். பாசிசத்தை முறியடிக்கும் வேளையில் என் குரல் ஒலிக்காமல் போனால் நான் உயிரோடு இருந்து எந்தப் பலனும் இல்லை. இந்தியா ஒரு நாடல்ல. திராவிட இயக்கத்தில் பற்று கொண்டவர்கள் இந்திய துணைக் கண்டம் என்றே சொல்வோம். இப்போது, இங்கே ஒரு கூட்டணி மலர்ந்துள்ளது. இந்தக் கூட்டணியில் உள்ளவர்கள் நரகத்துக்குச் சென்றாலும் வெயிட்டிங் லிஸ்டில்தான் இருப்பார்கள். கட்சி அரசியலுக்குள் சிக்காமல் பொதுவெளியில் பயணிக்க முடிவெடுத்துள்ளேன்''  என்று பேசினார்.

சமீபகாலமாகத் தீவிர அரசியலில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகியுள்ளார். இலக்கிய மேடைகளில் மட்டுமே அவரைப் பார்க்க முடிகிறது. திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். நாஞ்சில் சம்பத் நடித்த எல்.கே.ஜி என்ற சினிமா சமீபத்தில் வெளி வந்தது.  எனினும்,  ம.தி.மு.க-வில் இருந்து விலகியதில் இருந்தே  நாஞ்சில் சம்பத் மனதளவில் சோர்ந்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். பல கட்சிகள் மாறியதால் தன்னுடைய இமேஜ் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கருதுவதாகவும் அவரின் நண்பர்கள் சொல்கிறார்கள். எனினும், ``தேர்தல் சமயத்தில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு எதிராக நாஞ்சில் சம்பத் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார்'' என்று சொல்லப்படுகிறது.