Published:Updated:

ஸ்டாலினைப் புறக்கணித்தாரா பொன்முடி?

நேர்காணலில் நடந்த கோணல்கள்!

ஸ்டாலினைப் புறக்கணித்தாரா பொன்முடி?

நேர்காணலில் நடந்த கோணல்கள்!

Published:Updated:
##~##

தி.மு.க. இளைஞர்களைத் தேடி மாவட்டம் தோறும் வலம் வந்து கொண்டு இருக்கிறார் ஸ்டாலின். கட்சியின் பொருளாளரான அவர்தான் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராகவும் இருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும் தோல்வியை அடைந்த தி.மு.க., தன்னுடைய உள் கட்சியை வலுவானதாக மாற்ற வும் புதிய இளைஞர்களைக் கட்சிக்குள் கொண்டுவரவும் பெரும் முயற்சி எடுத்து வருகிறது. அதன் தொடக்கமாக இளைஞர் அணிக்கே புதிய செயலாளர் நியமிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இளைஞர் அணியைத் தொடங்கியதில் இருந்து முதலில் அமைப்பாளராகவும் பின்னர் செயலாள ராகவும் இருப்பவர் மு.க. ஸ்டாலின். அந்தப் பதவியில் இனி அவர் தொடர முடியுமா என்கிற வயசுச் சிக்கல் அடுத்த ஆண்டு வரப்போகிறது! 

பொன்முடி பொருமல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வரும் மார்ச் மாதம் 3-ம் தேதி தனது 60-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் ஸ்டாலின். '60 வயதுக்காரர் இந்தப் பதவியில் இருக்கலாமா?’ என்ற கிண்டல் கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாது. அதனால்தான் புதிய செயலாளரைத் தேர்வு செய்யத் திட்டமிட்டு உள்ளார்கள். அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் இருக்கும் இளைஞர் அணிப் பொறுப்பாளர்களையும் இளமையானவர்களாக நியமிக்கவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இளைஞர் அணிக்கு நிர்வாகிகளைத் தேர்வு செய்வ தற்கு வயது வரம்பு நிர்ணயித்து, நேர்முகத் தேர்வு நடத்தி வருவதுதான் இப்போதைய ஹாட்!

ஸ்டாலினைப் புறக்கணித்தாரா பொன்முடி?

11-ம் தேதி விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட இளைஞர் அணி அமைப்புக்கான நேர்காணல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நேர்காணலுக்கு முன்னதாகவே ஸ்டாலின் - பொன்முடி மோதல்தான் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது.

''ஏற்கெனவே 10-ம் தேதி ஸ்டாலின் விழுப்புரம் வருவதாக இருந்தது. அதை கேன்சல் செய்துவிட்டுத்தான் 11ம் தேதி வந்தார். அவருக்கு எந்த மாதிரி வரவேற்பு கொடுப்பது என்பதைப்பற்றி மாவட்டத் தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. இதில் 10 நிமிஷம்தான் பொன்முடி இருந்தார். 'தளபதி வருகிறார். பெரிய பெரிய கட் அவுட் வையுங்க. எனக்கு வயிறு சரியில்லை’னு சொல்லிட்டுப் போயிட்டார். எங்களுக்கு இதுவே அதிர்ச்சியாக இருந்தது.

ஸ்டாலினைப் புறக்கணித்தாரா பொன்முடி?

விழுப்புரம் மாவட்டத்துக்கு தளபதி வந்தால், மாவட்ட எல்லையான ஓங்கூரில் பெரிய வரவேற்பு கொடுப்போம். ஆனால், அதை 11-ம் தேதி செய்யலை. சாரம் என்ற ஊரில் ஒரு குச்சியில் மட்டும் கொடி கட்டிவெச்சிருந்தாங்க. திண்டிவனம் பக்கத்துல பொன்முடி நின்னுட்டு இருந்தார். முறையான ஏற்பாடு செய்யாததால், தளபதி, நான்கு வழிச் சாலையில் 'விர்’ரெனப் பறந்து போய் சூர்யா கல்லூரியில் போய் உட்கார்ந்துகொண்டார். தளபதி அந்தப் பக்கமாகப் போய்விட்டார் என்று தெரிந்ததும், பொன்முடி தாமதமாக சூர்யா கல்லூரிக்கு போய்ச் சேர்ந்தார். தளபதி வந்தாலே அவருக்கான காலை உணவு பொன்முடி வீட்டில் இருந்து அவரது மனைவி விசாலாட்சிதான் எடுத்து வருவார். அவர் அன்று கொண்டுவரவில்லை. காலையில் தொடங்கிய இளைஞர் அணி நேர்காணல் மதியம் 2.15 மணிக்கு முடிந்தது. மதிய உணவையும் விழுப்புரத்தில் தளபதி சாப்பிடவில்லை. உடனே, திருவண்ணாமலை சென்று 3.20-க்குத்தான் அங்கு சாப்பிட்டார். இது மாதிரி சம்பவம் இதுவரைக்கும் நடந்ததே இல்லை. தளபதிக்கு முறையான வரவேற்பை பொன்முடி கொடுக்காததது போகப் போக பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்'' என்கிறார் விழுப்புரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகி ஒருவர். ''தளபதிக் காகத்தான் பொன்முடி செய்வது அனைத்தையும் பொறுத்துக்கொண்டோம். இன்று அவரையே மதிக்காத பொன்முடி எதற்கு?'' என்று இவர்கள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

ஆனால் பொன்முடி ஆதரவாளர்களோ, ''விழுப்புரம் எல்லை என்று சொன் னதும் மாவட்ட எல்லை என்று ஸ்டாலின் நினைத்து விட்டார். அதனால்தான் நான்கு வழிச் சாலையில் சென்று விட்டார். நாங்கள் திண்டிவனம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தது தகவல் பரிமாற்றக் குழப்பத்தில் அவருக்குச் சரியானபடி போய்ச்சேரவில்லை. வேறு எந்தப் பிரச்னையும் கிடையாது'' என்கிறார்கள்.

''தெரியாது!''

விழுப்புரத்தில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் காலை 9.30 மணிக்கு மாவட்ட தி.மு.க-வின் இளைஞர் அணிக்கான ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகளை நியமிப்பதற்கான நேர்காணல் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வோர் ஒன்றியப் பொறுப்புக்கும் கிளைகளுக்கும் சுமார் 20 பேர் வீதம், 800-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகள்.

நேர்காணலுக்கு வந்தவர்கள் கொடுத்த பயோடேட்டாவில் இருந்துதான் பெரும்பாலான கேள்விகளைக் கேட்டார் ஸ்டாலின். நேர்காணல் முடித்துவந்த சில இளைஞர்களிடம் பேசினோம்.

'' 'பெயர் என்ன? படிப்பு என்ன?’ன்னு கேட்டார். நாங்க இப்போ செய்ற வேலையைச் சொன்னதும், 'அந்த வேலையைப் பார்த்துக்கிட்டு கட்சிப் பணி எப்படிச் செய்ய முடியும்?’னு கேட்டார். எங்க குடும் பத்தைப் பத்தி விசாரிச்சார். 'உங்க குடும்பத்துல யாராவது நம்ம கட்சியில இருக்காங்களா? அப்படின்னா, என்ன பொறுப்புல இருக்காங்க. வேற கட்சியில தெரிஞ்சவங்க இருக்காங்களா?’ன்னும் விசாரிச்சார். இது தவிர 'இளைஞர் அணி அமைப் பாளர் யார்? பொறுப்பாளர் பெயர் என்ன? செய லாளர் பெயர் என்ன?’ன்னு கேட்டார். பலரும் தெரியாதுன்னு சொன்னதும் ஸ்டாலின் சிரித்தார்'' என்கிறார்கள்.

''தம்பி, அது நான்தான்!''

ஸ்டாலினைப் புறக்கணித்தாரா பொன்முடி?

விழுப்புரத்தில் நேர்காணலை முடித்துவிட்டு திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார் ஸ்டாலின். எப்போது திருவண்ணாமலைக்கு ஸ்டாலின் வந்தா லும், வேலு தலைமையில் கொடுக்கப்படும் அதிரடி வரவேற்பும் இந்த முறை ஏனோ ஆப்சென்ட்.

திருவண்ணாமலை மாவட்ட அலுவலகத்தில் கேட்டை இழுத்து மூடிவிட்டு நேர்காணலுக்கான கடிதம் இருந்தவர்களை மட்டுமே உள்ளே அனுமதித் தார்கள். அப்போது மைக்கில், 'நேர்காணலுக்கு வந்திருப்பவர்கள் வெள்ளை நிறச் சட்டை மற்றும் வெள்ளை நிறத்தில் பேன்ட் போட்டிருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்’ என்ற தும், பலரும் அருகில் இருந்த துணிக் கடைகளுக்குச் சென்று,  ரெடிமேட் உடை மாற்றி வந்தார்கள்.

'நேர்காணலுக்கு வந்திருப்பவர்கள் கழுத்தில் கருப்பு, சிவப்பு துண்டு போட்டு இருக்கக் கூடாது. ராணுவ வீரர்களைப் போல் மிடுக்காக இருக்க வேண் டும். தொப்பி அணிந்து இருக்கலாம். உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையில் மட்டும்தான் அமர வேண்டும். இருக்கைகளை எடுத்து வேறு இடத்தில் போட்டு உட்காரக் கூடாது’ என்று ரன்னிங் கமென்ட்ரி  ஓடிக்கொண்டே இருந்தது.

முதலில், ஆரணி நகரத்துக்கு நேர்காணலுக்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். சத்திய நாராயணன் முதல் நபராக நுழைந்தார்.

நேர்காணல் நடத்திய ஸ்டாலின், 'உங்கள் வயது என்ன? நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்? நீங்கள் ஏதாவது பொறுப்பில் இருக்கிறீர்களா? உங்கள் தந்தை பொறுப்பில் இருக்கிறாரா?’ என்று சில கேள்விகளைக் கேட்டுவிட்டு அவரை அனுப்பி வைத்தார்.

அடுத்ததாக வந்தவரைப் பார்த்ததும் வயதைக் கேட்டார். அவர் வயதைச் சொன்னதும், '30 வயதுக்குள் இருக்க வேண்டும்... அதனால் நீங்கள் போகலாம்’ என்று உட்காரவிடாமல் விரட்டி அடித்தார்.

அடுத்ததாக வந்தவரின் வயதைக் கேட்டு சான்றிதழ்களைச் சரிபார்த்தவர், 'இளைஞர் அணி அமைப்பு எப்போது தோன்றியது தெரியுமா?’ என்று கேட்டார். அதற்கு அவர், '1980-ம் ஆண்டு மதுரை ஜான்சி பூங்காவில்’ என்றார்.

அடுத்து, 'இந்த அணியின் மாநிலச் செயலாளர் யார் தெரியுமா?’ என்று கேட்டார். அந்த நபர் ஸ்டாலின் அருகில் இருந்த திருவண்ணாமலை முன்னாள் நகர் மன்றத் தலைவர் ஸ்ரீதரனைக் கை காட்டினார். இதைச் சற்றும் எதிர்பாராத ஸ்டாலின் முதற்கொண்டு அனைவரும் சிரித்தனர். சிரிப்பொலி அடங்கியதும் ஸ்டாலினே, 'தம்பி, மாநிலச் செயலாளர் நான், அவர் உங்க மாவட்டத்தின் அமைப்பாளர்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகள் சிலரிடம் பேசியபோது, ''தி.மு.க-வில் இளைஞர் அணி அமைப் பின் பொறுப்புக்கு வருவது மிகப்பெரிய விஷயம். இதுநாள் வரை மாவட்ட நிர்வாகிகள் சிபாரிசு செய்பவர்களுக்குத்தான் அணியில் இடம் கிடைத்து வந்தது. அதனால் கட்சிக்காகக் கஷ்டப்பட்ட அடிமட்டத் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இப்போது தளபதியே நேர்காணல் நடத்துவதால், கட்சிக்காகப் பாடுபட்டு வருபவர்களுக்குக் கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும். இப்படி நேர்காணல் நடத்தப்படுவதால், இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்கிறார்கள். இதுபோல் கட்சியின் மற்ற பதவிகளுக்கும் வயது வரம்பு கொண்டுவந்து நேர்காணல் நடத்தினால், கட்சிக் காகக் கஷ்டப்பட்டுவரும் பலருக்கும் வாய்ப்பு கிடைக்கும்'' என்று தங்கள் பங்கு ஆதங்கத்தைக் கொட்டினார்கள்.

ஏதோ ஒரு மாறுதல் தெரிகிறது தி.மு.க.வில்!

- கோ.செந்தில்குமார், அற்புதராஜ்

படங்கள்: பா.கந்தகுமார், எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism