Published:Updated:

`உங்கள் தொகுதியில் ஒன்று தே.மு.தி.கவுக்கு!' - அ.தி.மு.க கோரிக்கையை ஏற்குமா பா.ம.க? 

தொடர் இழுபறி நீடிப்பதால் மின்துறை அமைச்சர் தங்கமணி அதிருப்தியில் இருக்கிறார். `4 தொகுதிகளை அவர்களுக்கு ஒதுக்கலாம். அதற்கு மேல் ஒரு தொகுதியைக் கூட தர முடியாது' என அவர் வார்த்தைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.

`உங்கள் தொகுதியில் ஒன்று தே.மு.தி.கவுக்கு!' - அ.தி.மு.க கோரிக்கையை ஏற்குமா பா.ம.க? 
`உங்கள் தொகுதியில் ஒன்று தே.மு.தி.கவுக்கு!' - அ.தி.மு.க கோரிக்கையை ஏற்குமா பா.ம.க? 

பிரதமர் மோடியின் சென்னை வருகையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அமர வைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. தே.மு.தி.க காட்டும் பிடிவாதத்தால் கூட்டணிப் பேச்சு நீடித்துக்கொண்டிருக்கிறது. `4 தொகுதிகளுக்கு மேல் கொடுப்பது கடினம். பா.ம.க-வைக் காரணம் காட்டியே தங்களுக்கான பேரத்தை அதிகப்படுத்திக் கொள்கின்றனர்' என ஆதங்கப்படுகின்றனர் அமைச்சர்கள் வட்டாரத்தில். 

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிகளையும் தொகுதிப் பங்கீடுகளையும் இறுதி செய்யும் வேலைகளில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. தி.மு.க அணியில் காங்கிரஸ், வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஐ.ஜே.கே, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி ஒப்பந்தம் முடிவாகிவிட்டது. அதேநேரம், அ.தி.மு.க அணியில் தே.மு.தி.கவுக்கான இடங்களை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் அமைச்சர்களில் ஒருபிரிவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். கடந்த சில நாள்களாக தே.மு.தி.க-வில் தொகுதிப் பங்கீடு குறித்து அமைக்கப்பட்ட குழுவினருடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியானது. இந்தக் கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, மோகன்ராஜ், இளங்கோவன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இதன்பிறகும் அ.தி.மு.க உடனான தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வராததால் நேற்று விஜயகாந்தை சந்தித்துப் பேசினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். `தே.மு.தி.க வருகையை உறுதி செய்யுங்கள்' என டெல்லியிலிருந்து வரும் தொடர் அழுத்தம் காரணமாகவே, பன்னீர்செல்வம் நேரடியாகப் பேச்சுவார்த்தைக்குச் சென்றார் என்ற செய்திகளும் வெளியாகின. 

விஜயகாந்தை சந்தித்த பிறகு பேட்டி கொடுத்த ஓ.பன்னீர்செல்வம், `அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க இணைவது பற்றி இன்றோ, நாளையோ நல்ல முடிவு எட்டப்படும். 6-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள். பிரதமர் பங்கேற்கும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் விஜயகாந்த் உறுதியாக இருப்பார்' என நம்பிக்கை தெரிவித்தார். `உண்மையில் தே.மு.தி.க-வுடனான பேச்சுவார்த்தை எப்படிச் செல்கிறது?' என அ.தி.மு.க நிர்வாகிகளிடம் விசாரித்தோம். 

``பா.ம.கவுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டதிலிருந்தே, தங்களுக்கும் பேரம் பேசும் சக்தி இருப்பதாக தே.மு.தி.க-வினர் நம்புகிறார்கள். பெரும்பாலான மாவட்டங்களில் அக்கட்சிக்கு அடிப்படைக் கட்டமைப்பே இல்லை. தொடக்கத்திலிருந்தே அவர்கள் எங்களுடன் பேசாமல், பா.ஜ.க மூலமாகவே பேச்சுவார்த்தையை நடத்தி வந்தார்கள். கடந்த பிப்ரவரி 19-ம் தேதி கிரவுன் பிளாசா ஓட்டலில் வைத்து பா.ம.க மற்றும் பா.ஜ.கவுடன் கூட்டணி ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட அன்று, தங்களுடைய செல்வாக்கைக் காட்டும்விதமாக தே.மு.தி.கவினர் நடந்து கொண்டனர். இருப்பினும், விஜயகாந்தை சந்திக்க நேரடியாகச் சென்றார் பியூஷ் கோயல். இதையே காரணம் காட்டி, தி.மு.க-வுடனும் பிரேமலதா தரப்பினர் பேசி வந்தனர். தொகுதிப் பங்கீட்டை விடவும் தேர்தல் செலவுகளை ஏற்றுக் கொள்வதற்கு தி.மு.க மறுத்துவிட்டதால், அ.தி.மு.கவைத் தவிர அவர்களுக்கு வேறுவழியில்லாத சூழல் ஏற்பட்டது. அப்படி இருந்தும், 5 பிளஸ் 1 தொகுதிகளை அ.தி.மு.க ஒதுக்கிவிட்டதாகவும் 21 தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்தத் தகவல் எதுவும் அ.தி.மு.க தரப்பிலிருந்து வெளியாகவில்லை. இப்படியொரு செய்தியை தே.மு.தி.க-வின் முக்கிய நிர்வாகிகளே வெளியில் கசியவிட்டனர். உண்மையில், தே.மு.தி.க-வுக்கு அதிக இடங்களை ஒதுக்கும் முடிவில் எடப்பாடி பழனிசாமி இல்லை" என விவரித்தவர்கள், 

``தி.மு.கவுக்கு எதிராக மெகா அணியாக இந்தக் கூட்டணியைக் கட்டமைக்கும் முடிவில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தே.மு.தி.க காட்டும் பிடிவாதத்தால் கடும் கோபத்தில் இருக்கிறார். அதனால்தான் நேற்று விஜயகாந்துடன் நடந்த பேச்சுவார்த்தைக்கும் பன்னீர்செல்வமே அனுப்பி வைக்கப்பட்டார். தொடர் இழுபறி நீடிப்பதால் மின்துறை அமைச்சர் தங்கமணி அதிருப்தியில் இருக்கிறார். `4 தொகுதிகளை அவர்களுக்கு ஒதுக்கலாம். அதற்கு மேல் ஒரு தொகுதியைக் கூட தர முடியாது' என அவர் வார்த்தைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். வேறு சில அமைச்சர்களோ, `கூட்டணிக்கே அவர்கள் தேவையில்லை. ஸ்டாலினுடம் பேசிக்கொண்டு நமக்குப் பெரும் இடையூறுகளைக் கொடுத்து வருகிறார்கள். இப்படியெல்லாம் அவர்கள் நடந்து கொள்வதால்தான், அம்மா அவர்களை ஓரம்கட்டி வைத்திருந்தார். தே.மு.தி.க என்ற கட்சியே கரைந்து போய்விட்டது. மற்றவர்களைவிட தங்களுக்கு பேரம் பேசும் சக்தி அதிகமாக இருப்பதைப் போன்ற தோற்றத்தை அரசியல் களத்தில் நிறுவப் பார்க்கிறார்கள்' எனக் கோபத்தோடு விவரித்துள்ளனர். நாளை பிரதமர் வருகையின்போது, தே.மு.தி.க நிர்வாகிகளையும் மேடையேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார்" என்கின்றனர் விரிவாக. 

அ.தி.மு.கவின் 4 பிளஸ் 1 என்ற கோரிக்கைக்கு தே.மு.தி.க செவிசாய்க்காமல் இருப்பதால், பா.ம.க பக்கம் இருந்து ஒரு தொகுதியைக் கேட்டுப் பெறும் முடிவிலும் அ.தி.மு.க இருக்கிறது. `உங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் ஒரு ரிசர்வ் தொகுதியையும் தருகிறோம். அந்தத் தொகுதியை தே.மு.தி.கவுக்கு நீங்கள் விட்டுக் கொடுத்தால், அனைத்தும் சுபமாக முடிந்துவிடும். தே.மு.தி.க பக்கம் இருக்கும் வாக்குகளும் நமக்கு வந்து சேரும்' என்ற கோரிக்கையை பா.ம.க தரப்பிடம் தெரிவித்துள்ளனர். தே.மு.தி.க உடனான இழுபறியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இப்படியொரு யுக்தியைப் பயன்படுத்தி வருகின்றனர் ஆளும் அண்ணா தி.மு.க-வினர். 

நாளை பிரதமர் மோடி அமர்ந்திருக்கும் மேடையில் தே.மு.தி.க நிர்வாகிகள் அமர்ந்திருந்தால், இழுபறிகள் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தம்.