Published:Updated:

``ஸ்கெட்ச் லோக்சபாவிற்கு அல்ல!”- எடப்பாடியால் ஏமாறப் போகும் கூட்டணிக் கட்சிகள்

``ஸ்கெட்ச் லோக்சபாவிற்கு அல்ல!”- எடப்பாடியால் ஏமாறப் போகும் கூட்டணிக் கட்சிகள்
``ஸ்கெட்ச் லோக்சபாவிற்கு அல்ல!”- எடப்பாடியால் ஏமாறப் போகும் கூட்டணிக் கட்சிகள்

``1,500 கோடி ரூபாய் பட்ஜெட் போட்டு, கூட்டணிக் கட்சிகளைத் தோளில் சுமந்து தேர்தலைச் சந்திப்பது, 39 நாடாளுமன்றத் தொகுதிக்கா?; என்று எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவருகிறாராம். சீட்டு முதல் நோட்டு வரை அ.தி.மு.க விரித்த வலையில் விழுந்துள்ள கட்சிகளுக்கு எடப்பாடியின் அரசியல் இனிதான் புரியப்போகிறது என்று சிரிக்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.
நாடாளுமன்றத் தேர்தல் ரேஸ் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க தலைமையில் ஓர் அணி, தி.மு.க அணியில் ஓர் அணி எனத் தேர்தல் போர்க்களத்துக்குக் கட்சிகள் தயாராகிவருகின்றன.

இரண்டு மாதங்கள்கூட நீடிக்காது என்று சொல்லப்பட்ட எடப்பாடி பழனிசாமி அரசு இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்தையும் முடித்துவிட்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தன்னைத் தயார்படுத்திவருகிறது. ஜெயலலிதா இருந்த வரை கூட்டணி என்பது அ.தி.மு.க வுக்குப் பெரிய விஷயமல்ல. ஆனால், இப்போது கூட்டணி என்கிற குதிரையின் மீதே அ.தி.மு.க சவாரி செய்ய வேண்டிய நெருக்கடி இருக்கிறது. அதன் காரணமாகவே, கூட்டணி விஷயத்தில் தி.மு.க-வை முந்திக்கொண்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பிலிருந்தே முக்கியக் கட்சிகளை வளைக்கும் வேலையில் அ.தி.மு.க இறங்கியது. அந்தக் கட்சியின் முதல் டார்கெட்டாக இருந்த பா.ம.க-வை வழிக்குக் கொண்டுவர பல யுக்திகளைக் கையாண்டு இறுதியில் வெற்றியும் பெற்றது. 
அ.தி.மு.க-வை தங்கள் பிடிக்குள் வைத்திருப்பதாக பி.ஜே.பி டெல்லி நினைத்த நேரத்தில் ஐந்து சீட்களைக் கொடுத்து அ.தி.மு.க ஒன்றும் அடிமைக்கட்சியல்ல என்று எடப்பாடி தரப்பு எக்காளமிட்டது. அதேபோல், முரசு சின்னத்தை வைத்துக்கொண்டு முரண்டு பிடித்த விஜயகாந்த்தையும் கிட்டத்தட்ட வழிக்குக் கொண்டுவந்துவிட்டது. இவர்களைத் தவிர புதிய தமிழகம் மற்றும் புதிய நீதிக்கட்சி போன்றவற்றையும் கூட்டணியில் இணைத்து, தி.மு.க கூட்டணிக்கு இணையாக ஒரு வலுவான கூட்டணியை அ.தி.மு.க கட்டமைத்துள்ளது. இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்று கணக்குப்போட்ட தி.மு.க-வை தனது கூட்டணி வியூகத்தால் திணறடித்துள்ளது அ.தி.மு.க.

ஆனால், அ.தி.மு.க போட்ட இந்தக் கூட்டணி ஸ்கெட்சே நாடாளுமன்றத் தேர்தலுக்கு அல்ல, 21 சட்டமன்றத் தேர்தலுக்கு மட்டும்தான் என்று சொல்கிறார்கள் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள். எடப்பாடிக்கு நெருக்கமான சில மூத்த நிர்வாகிகள் நம்மிடம், ``அ.தி.மு.க-வில் இப்போது 37 எம்.பி-க்கள் லோக்சபாவில் இருக்கிறார்கள். இத்தனை எம்.பி-க்களை வைத்து என்ன காரியத்தை மத்திய அரசிடம் சாதிக்க முடிந்தது. அம்மா இருந்தபோதாவது பயத்தில் பலர் இருந்தார்கள். இப்போது டெல்லிக்கு விமானம் ஏறியதும், தமிழகத்தில் ஒரு தலைமை இருப்பதையே பலர் மறந்துவிட்டார்கள். இந்தத் தேர்தலில் பல கோடி ரூபாய் செலவு செய்து, இருபது தொகுதிகளில் ஜெயித்தாலும் அதனால் தனக்கு என்ன பயன் என்று எடப்பாடி யோசிக்கிறார். அவருடைய ஒரே நோக்கம், அடுத்த இரண்டாண்டுகள் இந்த ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பது மட்டுமே.


`சரி, அதற்கு ஏன்?’ என்று யதார்த்தமாக விட்டுச் செல்ல முடியாது. கூட்டணிக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்ததன் பின்னால்   எடப்பாடி பழனிசாமியின் சூட்சுமம் இருக்கிறது. லோக்சபாவுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தப்போகிறது தேர்தல் ஆணையம். அந்த விவரம் தெரிந்தே லோக்சபா தேர்தல் பெயரில் கூட்டணியை அமைத்துவிட்டு, அந்தக் கூட்டணிக் கட்சிகளை வைத்தே 21 தொகுதிகளிலும் இடைத்தேர்தலைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார். கூட்டணிக் கட்சிகள் இதில்தான் ஏமாற்றமடையப் போகின்றன. பி.ஜே.பி, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் அ.தி.மு.க-வின் ரத்தத்தின் ரத்தங்கள் தேர்தல் களத்தில் தங்களுக்குத் துணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆனால், எடப்பாடி போடும் கணக்கு வேறுமாதிரியாக உள்ளது. அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களை 21 தொகுதிகளையும் குறிவைத்து களத்தில் இறக்க உள்ளார். 21 தொகுதிகளில் வெற்றியை ஈட்டும் திட்டம் மட்டுமே, எடப்பாடி பழனிசாமியிடம் பிரதானமாக உள்ளது. அ.தி.மு.க போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதிகளில் மாவட்ட நிர்வாகிகள் மூலம் பணிகள் நடைபெறும். அதே நேரம் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதியில் லோக்கல் நிர்வாகிகள் சிலர் மட்டுமே, களத்தில் இருப்பார்கள். முக்கிய நிர்வாகிகள் அனைவரும் இடைத்தேர்தல் தொகுதிக்கு மடைமாற்றம் செய்யப்பட உள்ளார்கள். இதுவே, கூட்டணி ஒப்பந்தம் போடும்போதே தெளிவாக இடைத்தேர்தலுக்கு ஆதரவு என்று கோடிட்டுக் காட்டியதன் பின்னணி. ஒருவேளை லோக்சபா தேர்தல் முடிந்து, இடைத்தேர்தல் வந்தால் இவர்கள் கழன்றுகொள்ள வாய்ப்புண்டு என்று எடப்பாடிக்குத் தெரியும். அதனால் டெல்லி மேலிடத்திடம் சொல்லி லோக்சபா தேர்தலோடு, 21 தொகுதிக்கான இடைத்தேர்தலையும் அறிவிக்கச் சொல்லியிருக்கிறார். 

வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக இருந்தாலும் சரி, பூத் கமிட்டி அமைத்து கொடி கட்டுவதாக இருந்தாலும் அந்தந்தக் கட்சியே பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைதான் வரப்போகிறது. அ.தி.மு.க-வை நம்பி தேர்தல் களத்தில் நிற்கும் கூட்டணிக் கட்சிகள் எடப்பாடியின் வியூகத்தில் ஏமாறப்போகிறது. எடப்பாடி தரப்பில் ஒரு விசயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். நீங்கள் கேட்ட தொகுதியை கொடுத்துவிட்டோம். பணமும் செலவு செய்கிறோம். வெற்றிபெறுவது உங்கள் பொறுப்பு என்று நழுவிக்கொள்ளும் முடிவில் இருக்கிறார்கள். எங்களுக்குத் தேவை 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்ல, 21 சட்டமன்ற உறுப்பினர்கள்தாம். 39 இடங்களில் தி.மு.க கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் 10 தொகுதிகளில் நாங்கள் எப்படியும் வெற்றிபெற்றுவிடுவோம். கூட்டணிக் கட்சிகள் வெற்றியை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்” என்கிற மூடில் இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமியின் அரசியல் சதுரங்கத்தில் இனி யார் வீழப்போகிறார்கள்... யார் வெல்லப்போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இன்னும் இரு மாதங்களாவது பொறுத்திருக்க வேண்டும்.