Published:Updated:

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை திடீரென நீக்கிய பின்னணி என்ன?

பொள்ளாச்சி கோஷ்டியைச் சேர்ந்தவர். ஆனால், மாவட்டச் செயலாளர் என்கிற முறையில் உடுமலையுடன் அடிக்கடி உரசல் ஏற்பட்டது.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை திடீரென நீக்கிய பின்னணி என்ன?
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை திடீரென நீக்கிய பின்னணி என்ன?

திருப்பூர் புறநகர் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை திடீரென நீக்கிவிட்டு அவருக்குப் பதில் புதிய மாவட்டச் செயலாளராக சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமனை நியமித்துள்ளது அ.தி.மு.க தலைமை.

கட்சியின் மாநில அமைப்புச்  செயலாளர்களில் ஒருவராக உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்க இருக்கும் இந்தச் சூழ்நிலையில், உடுமலை ராதாகிருஷ்ணன் தூக்கியடிக்கப்பட்டது பற்றி திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. பொள்ளாச்சி ஜெயராமனும் உடுமலை ராதாகிருஷ்ணனும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தாம். இருந்தாலும், அரசியலில் அக்னி நட்சத்திரங்கள். சமீபத்தில்,  திருப்பூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட விழா ஒன்றின் மேடையில் தனக்கு உரிய மரியாதையை உடுமலை ராதாகிருஷ்ணன் தரவில்லை என்று கூறி பொள்ளாச்சி ஜெயராமன் டென்ஷன் ஆக, பதிலுக்கு உடுமலை ராதாகிருஷ்ணன் எகிற... முதல்வர் தலையீட்டு இருவரையும் அமைதிப்படுத்தினார்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை திடீரென நீக்கிய பின்னணி என்ன?

பொள்ளாச்சி தொகுதியில் தற்போது எம்.பி-யாக இருப்பவர் மகேந்திரன். பொள்ளாச்சி ஜெயராமன் கோஷ்டியைச் சேர்ந்தவர். ஆனால், மாவட்டச் செயலாளர் என்கிற முறையில் உடுமலை ராதாகிருஷ்ணனுடன் அடிக்கடி உரசல் ஏற்பட்டது. ஆனால், தொகுதியில் நல்ல பெயர் இருப்பதால், இவருக்கே வரும் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்க எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துவிட்டார். தேர்தல் வேலையையும் ஆரம்பித்துவிட்டார் மகேந்திரன். இங்குதான் பிரச்னை வெடித்தது.

உடுமலை ராதாகிருஷ்ணனின் வேட்பாளர் சாய்ஸ் வேறு! இப்படியிருக்கும் போது, என்னால் எப்படித் தேர்தல் வேலை செய்யமுடியும் என்று மகேந்திரன் நேரிடையாக முதல்வர் எடப்பாடியிடம் புகார் செய்ததாக தெரிகிறது. அதையடுத்துதான், மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து உடுமலை ராதாகிருஷ்ணன் கழற்றி விடப்பட்டுள்ளார். மகேந்திரன் விருப்பப்படியே, பொள்ளாச்சி மாவட்டச் செயலாளராக அறிவித்தார் எடப்பாடி. இதைச் சற்றும் எதிர்பார்க்காத உடுமலை கோஷ்டியினர் சுமார் 200 பேர் சென்னைக்குப் படையெடுத்தனர்.

ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழகத்தில் மனு கொடுத்தனர். பிறகு, எடப்பாடியையும், ஓ.பி.எஸ்-ஸையும் தனித்தனியாகச் சந்தித்து உடுமலையை மீண்டும் நியமிக்கும்படி கேட்டுக்கொண்டனர். இவர்களை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று குழம்பிக்கிடக்கிறது கட்சி மேலிடம். 

திருப்பூர் ரெவின்யூ மாவட்டம் மற்றும் அ.தி.மு.க அமைப்பு ரீதியான மாவட்டம் என்று இரண்டு கோணத்தில் பார்த்தால்... ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகள் வருகின்றன. திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த அதிருப்தி ஐந்திலும் எதிரொலிக்க வாய்ப்புகள் உண்டு. பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரம், வீடியோ பதிவு.. பணம் பறிப்பு...என்கிற பகீர் குற்றச்சாட்டில் ஆளுங்கட்சியில் சில புள்ளிகளின் வாரிசுகளின் பெயர்கள் அடிபடும் இந்த நேரத்தில், அ.தி.மு.க–வில் நடந்துள்ள இந்த மாற்றம், மேலும் கோஷ்டிப் பூசலைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.  

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை திடீரென நீக்கிய பின்னணி என்ன?

ஜெயராமன் ஜெயித்த பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி கோவை ரெவின்யூ மாவட்டத்தில் வருகிறது. முன்பு ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக இருபது வருடங்கள் பதவியில் இருந்திருக்கிறார். எம்.ஜி.ஆர். காலத்து அரசியல் பிரமுகர். அ.தி.மு.க–வின் தேர்தல் பிரிவு மாநிலச் செயலாளர். சட்டசபை உறுப்பினர்களின் உரிமைகளையும் மாண்புகளையும் காப்பாற்றும் வகையில் செயல்படும் அவை உரிமை குழுவின் தலைவராகவும் பொள்ளாச்சி ஜெயராமன் இருக்கிறார். அவைக்குள் போதை பாக்குப் பொட்டலத்தை அனுமதி இல்லாமல் எடுத்து வந்ததாகச் சொல்லி, 21 தி..மு.க எம்.எல்.ஏ–க்கள் மீது பிரச்னை எழுப்பப்பட்டது. இதை விசாரித்தவர் பொள்ளாச்சி ஜெயராமன். கடுமையான தண்டனை தரவேண்டும் என்கிற ரீதியில் இறுதி அறிக்கையைச் சபாநாயகரிடம் அளித்துவிட்டார். தற்போது இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், பிரச்னை அமுங்கிக்கிடக்கிது.  

இன்னொரு புறம்.. அமைச்சர் ஜெயித்த உடுமலை சட்டமன்றத் தொகுதி, திருப்பூர் ரெவின்யூ மாவட்டத்தில் வருகிறது. தற்போது கால்நடைத்துறை அமைச்சராகப் பதவியில் இருக்கிறார்.  இவரது துறையின் சார்பில்  77,000 ஏழைப் பெண்களுக்கு 50 கோடி ரூபாய் செலவில் நாட்டுக்கோழி வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கிவைத்தார். ஒவ்வொரு பயனாளிக்கும் 50 கோழிக்குஞ்சுகள் கொண்ட செட் (ஒரு கோழிக்குஞ்சுவின் விலை ரூ.73), கோழி வளர்க்கும் கூண்டுச் செலவிற்காக ரூ.2,500.. கோழி வளர்க்கும் பயிற்சித்தொகை, கையோடு...என்று ரூ.6,300 அளவுக்கு உதவித்தொகை தரப்படுகிறது. இந்த வகையில், சுமார் 30 லட்சம் நாட்டுக்கோழிகள் இதுவரை தரப்பட்டிருக்கின்றன. இதேபோல், ஒன்றரை லட்சம் விலையில்லா வெள்ளாடுகள் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. 12,000 கறவைப் பசுக்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவையும் குறுகிய காலத்தில் நிறைவேற்றியவர் உடுமலை ராதாகிருஷ்ணன். 

பொள்ளாச்சி ஜெயராமன் ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டபோது, ``உடுமலை ராதாகிருஷ்ணனின்  நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்கள் தினகரனுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இதை அவர் மறுக்கமுடியுமா? பொள்ளாச்சி ஜெயராமன் கோஷ்டியினரை எதிரியாக நடத்தினார். அனுசரித்துப்போகவில்லை. அதனால்தான் அவர் தூக்கியடிக்கப்பட்டார்" என்கிறார்கள். 

உடுமலை ராதாகிருஷ்ணன் ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டபோது, ``ஜெயராமன், திருப்பூரைச் சேர்ந்தவரில்லை. கோவைக்காரர். இதைச் சுட்டிக்காட்டி திருப்பூர் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து பொள்ளாச்சி ஜெயராமனை அம்மாவே மாற்றினார். அவரை இப்போது எடப்பாடி எந்த வகையில் திருப்பூருக்கு மீண்டும் நியமித்தார் என்று தெரியவில்லை.. திருப்பூரைப் பூர்வீகமாக கொண்ட ஒருவரை மாவட்டச் செயலாளராக நியமித்திருந்தால், உடுமலை ராதாகிருஷ்ணன்  அமைதியாக இருந்திருப்பார். பொறுத்திருந்து பாருங்கள். திருப்பூரில் நிறைய திருப்பங்கள் நடக்கலாம்" என்றார். பொள்ளாச்சி, உடுமலைக்கு இடையே தொடங்கியுள்ள யுத்தம் பொள்ளாச்சி தொகுதியில் ஆளுங்கட்சிக்கு என்னென்ன சிக்கலை ஏற்படுத்தப் போகிறதோ?