Published:Updated:

"ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை?" - மனம் திறக்கிறார் விஜயசாந்தி #VikatanExclusive

``தமிழ்நாட்டு மக்கள் எப்படி இருக்கிறார்கள்? தமிழ்நாடு என் தாய்வீடு மாதிரி. தமிழ் மக்களை எப்போதும் நான் மறக்க மாட்டேன். என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள். பதில் சொல்ல நான் தயார்!"

"ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை?" - மனம் திறக்கிறார் விஜயசாந்தி #VikatanExclusive
"ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை?" - மனம் திறக்கிறார் விஜயசாந்தி #VikatanExclusive

ந்தியத் திரையுலகில், `லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற புகழைப் பெற்ற முதல் நடிகை. நேரடித் தமிழ்ப் படங்களில் குறைவாக நடித்தாலும், இவரின் தெலுங்குப் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு, அதிரிபுதிரி ஹிட்டடித்தன. ஆக்‌ஷன் நாயகியாவும் புகழ்பெற்றார். அரசியல் பயணத்துக்காக சினிமாவிலிருந்து விலகினார். தெலங்கானா மாநிலக் காங்கிரஸ் பிரசாரக் குழுத்தலைவராக இருக்கிறார். தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், ஹைதராபாத்திலுள்ள வீட்டில் விஜயசாந்தியைச் சந்தித்தோம். 

``உங்களுடைய பேட்டிக்காக இன்று ஒருநாள் முழுக்க ஒதுக்கியிருக்கிறேன். தமிழில் நான் பேட்டிக்கொடுத்து பல வருடங்களாகிவிட்டன. தமிழ்நாட்டு மக்கள் எப்படி இருக்கிறார்கள்? தமிழ்நாடு என் தாய்வீடு மாதிரி. தமிழ் மக்களை எப்போதும் நான் மறக்க மாட்டேன். என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள். பதில் சொல்ல நான் தயார்!’’ - உற்சாகமாகப் பேசத்தொடங்கினார் விஜயசாந்தி.

``நடந்து முடிந்த தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில், தெலுங்கு தேசக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நீங்கள் பிரசாரம் செய்யவில்லை. இதுவும் உங்கள் கூட்டணி வெற்றிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறதே...’’

``இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். மக்களுக்குப் பிடிக்காத சந்திரபாபு நாயுடுவுடன் எங்கள் கட்சி, கூட்டணி அமைத்ததில் எனக்கு விருப்பமில்லை. எனவே, அக்கட்சியின் வேட்பாளர்களுக்குப் பிரசாரம் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. என் முடிவை மக்கள் வரவேற்கிறார்கள். எங்கள் கட்சி வேட்பாளர்களுக்காகக் கடுமையாகப் பிரசாரம் செய்தேன். என் கட்சியின் வெற்றிதான் எனக்கு முக்கியம்.’’


 

``சந்திரசேகர ராவின் கட்சி இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால், அக்கட்சியின் வெற்றி போலியானது எனத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறீர்கள். `எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரம் இல்லை’ எனச் சந்திரசேகர ராவ் சொல்கிறாரே...’’

``பணப்பட்டுவாடா, பிரதமர் மோடி, காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் உடந்தையால்தான் சந்திரசேகர ராவ் போலியாக வெற்றி பெற்றுள்ளார் எனக் குற்றம் சாட்டுகிறோம். அதற்கு ஆதாரங்கள் உள்ளன.  

வாக்குப்பதிவு நாளில், மாலை 4 மணிவரை பதிவான வாக்குகளைவிட, அடுத்த ஒரு மணிநேரத்தில் வாக்குப்பதிவு சதவிகிதம் இரு மடங்காக உயர்ந்தது. இது எப்படிச் சாத்தியம்? தேர்தல் முடிந்ததும் சில மணிநேரத்திலேயே மொத்த வாக்குப்பதிவு சதவிகிதத்தை தேர்தல் ஆணையம் அறிவிப்பது வழக்கம். ஆனால், 36 மணிநேரம் கழித்து அறிவிக்கிறார்கள். வாக்குப்பதிவு நடந்தது கடந்த ஆண்டு, டிசம்பர் 7-ம் தேதி. வாக்கு எண்ணிக்கையின்போது பல வாக்குப்பதிவு இயந்திரங்களில் 6-ம் தேதி வாக்குப்பதிவானதாக இருந்தது. ஒரு வாக்குச்சாவடியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையைவிட, பல இடங்களில் அதிகளவில் வாக்குப்பதிவாகியுள்ளது. டி.ஆர்.எஸ் கட்சியின் ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்த நிலையில், அக்கட்சியினர் பல இடங்களில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது எப்படி? இப்படிப் பல மோசடிகளைச் செய்தே, சந்திரசேகர ராவ் போலியாக வெற்றி பெற்றுள்ளார்.’’

``தேர்தல் தோல்வியில், உங்கள் கட்சியின் தரப்பில் எந்தத் தவறுமே இல்லையா?’’

``நான் நினைத்ததுபோலவே... `காங்கிரஸ் கட்சி, தெலங்கானாவுக்கு எதிரான சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைத்துள்ளது. அக்கூட்டணியை வெற்றிபெறச் செய்தால், வேலைவாய்ப்புகள், கிருஷ்ணா மற்றும் கோதாவரி நீரை ஆந்திரா மாநிலத்துக்குச் சந்திரபாபு நாயுடு கொண்டுசென்றுவிடுவார். தெலுங்கானா மாநிலம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுவிடும்’ எனச் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்தார். இதை அப்பாவி மக்கள் பலரும் நம்பினர். எனவே,  தெலுங்கு தேசம் கட்சியுடனான கூட்டணியே, எங்கள் தோல்விக்கு முதல் காரணம். வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி; உட்கட்சிக்குள்ளேயே நிகழ்ந்த சூழ்ச்சிகள் ஆகியவையெல்லாம் எங்கள் பலவீனங்கள். காங்கிரஸ் கட்சி தனித்து நின்று, ஒற்றுமையுடன் பணிசெய்திருந்தால், நேர்மையாகத் தேர்தல் நடைபெற்றிருந்தால் நிச்சயம் நாங்கள் ஆட்சியைப் பிடித்திருப்போம்.’’

``நடந்து முடிந்த தெலங்கானா தேர்தலில் நீங்கள் போட்டியிடாதது ஏன்?’’

`` `இப்போது கட்சியின் வெற்றியே முக்கியம். நான் போட்டியிட்டால் எல்லா இடங்களிலும் பிரசாரம் செய்ய நேரமிருக்காது’ என்று ராகுல் காந்தியிடம் சொல்லிவிட்டுத்தான் நான் போட்டியிடவில்லை. வரும் தேர்தல்களில் நிச்சயம் போட்டியிடுவேன்.’’ 

``வரவிருக்கும் ஆந்திர சட்டமன்றம் மற்றும் இரு மாநில நாடாளுமன்றத் தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சியுடன், காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்காது என்பதை உங்களால் உறுதியாகக் கூற முடியுமா?’’

``தெலுங்கு தேசம் கட்சியுடனான கூட்டணி, நடந்து முடிந்த தெலங்கானா தேர்தலுடன் முடிந்துவிட்டது. அக்கட்சியுடன் மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பில்லை. ஒருவேளை அப்படியான சூழல்கள் உருவானால், கடுமையாக எதிர்ப்பேன்.’’

``ஆட்சி முடிவடையவுள்ள நிலையில், தலைநகர் அமராவதி இன்னும் உருவாக்கப்படவில்லை. ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடுவின் ஐந்தாண்டுக்கால ஆட்சியைப் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?’’

``தெலங்கானாவுக்கு எதிரானவர் என்பதால்தான், அரசியல் ரீதியாகவே சந்திரபாபு நாயுடுவை நான் எதிர்க்கிறேன். தனிப்பட்ட முறையில் எந்தத் தலைவர்களையும் நான் எதிரியாகக் கருதுவதில்லை. ஆந்திராவின் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடு நல்ல முன்னேற்றங்களைக் கொடுத்திருக்கிறார். அமராவதி தலைநகரை உருவாக்குவதிலும், நீர் மேலாண்மையிலும் நன்றாகக் கவனம் செலுத்துகிறார். இதைவிடவும் காங்கிரஸ் கட்சியால் முன்னேற்றங்களைக் கொடுக்க முடியும். மோடியுடன் கூட்டணி அமைத்து ஏமாற்றம் கண்ட சந்திரபாபு நாயுடு, இனி தவறான முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது.’’  

``வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய தமிழகம் வருவீர்களா?’’

``அந்த நேரத்தில் இங்குள்ள இரண்டு மாநிலத்தில் மூன்று தேர்தல்கள் நடைபெறுகின்றன. பணிகள் அதிகம் இருக்கும் என்பதால், தமிழகத்தில் நான் பிரசாரம் செய்ய வர வாய்ப்பில்லை.’’

``முதல்வராகும் ஆசை உங்களுக்கு உண்டா, அப்படி நடந்தால் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள்?’’

``என் வாழ்வின் அர்த்தம், தனித் தெலங்கானா உதயம். அது நிறைவேறிவிட்டது. அடுத்து, தெலங்கானா மாநிலத்தின் வளர்ச்சி. அதைச் சந்திரசேகர ராவ் செய்யப்போவதில்லை. ஆட்சியமைத்துப் பல மாதங்கள் ஆகியும், இன்னும் அமைச்சர்களைக்கூட முழுமையாக நியமிக்காமல், மக்கள் பணியைச் சரியாகச் செய்யாமல் இருக்கிறார். அவர் முதல்வர் பதவியை பவராக நினைக்கிறார். எனக்கு அந்தப் பொறுப்பு கிடைத்தால், சேவையாக நினைத்து மக்களுக்குப் பணியாற்றுவேன். தெலங்கானாவை முன்னேறிய மாநிலமாக மாற்றிக்காட்டுவேன். தெலங்கானா மக்கள்தான் என் குழந்தைகள். அவர்களுக்குப் பணி செய்யவே, நான் குழந்தைப் பெற்றுக்கொள்ளவில்லை.’’

``பிரமானந்த ரெட்டி, சென்னா ரெட்டி, ஜனார்தன ரெட்டி, ராஜசேகர ரெட்டி வரிசையில் பலமான ஒரு காங்கிரஸ் தலைவர் இன்னும் இங்கு உருவாகவில்லை. அந்த வரிசையில் நீங்கள் இடம்பெறுவீர்களா?’’

``பல போராட்டங்களைக் கடந்துதான் சினிமா மற்றும் அரசியலில் தனக்கான இடத்தைப் பெற்றேன். அதனால் எனக்குள் பலமடங்கு பலம் கூடியிருக்கிறது. நிச்சயம் நீங்கள் கூறிய வரிசையில் நானும் இடம்பெறுவேன்.’’

ஆனந்த விகடனில், வெளியாகியிருக்கும், விஜயசாந்தியின் விரிவான அரசியல் பேட்டியைப் படிக்க : “என்னை முதல்வராக்க நினைத்தார் ஜெயலலிதா!”  - இந்த டைட்டிலை கிளிக் செய்யவும்  

அவள் விகடனில் வெளியாகியிருக்கும் சினிமா வெற்றி குறித்த விஜயசாந்தியின் விரிவான பேட்டியைப் படிக்க : ``பயம்கிறதே என் அகராதியில் இல்லை!’’ - இந்த டைட்டிலை க்ளிக் செய்யவும்.