Published:Updated:

திருநாவுக்கரசருக்காக பலிகடா ஆக்கப்பட்டாரா வைகோ? - பின்னணியில் ராகுல் காந்தி

திருநாவுக்கரசருக்காக பலிகடா ஆக்கப்பட்டாரா வைகோ? - பின்னணியில் ராகுல் காந்தி
திருநாவுக்கரசருக்காக பலிகடா ஆக்கப்பட்டாரா வைகோ? - பின்னணியில் ராகுல் காந்தி

திருச்சி தொகுதியைக் குறிவைத்து காய் நகர்த்திய வைகோவுக்கு, ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை என இரண்டு தொகுதிகளைக் கொடுத்துள்ளது தி.மு.க தலைமை. முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசருக்கு ஆதரவாக ராகுல் காந்தியே தி.மு.க தலைமையிடம் பேசியதால்தான், திருச்சி தொகுதி வைகோவிடமிருந்து கைநழுவியதாகக் கூறப்படுகிறது.

திருச்சி தொகுதியில் போட்டியிடுவதற்காக, கடந்த சில மாதங்களாக கல்லூரி கூட்டங்கள், சொற்பொழிவுகள் என திருச்சியில் தொடர்ந்து வலம் வந்தார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. அவரது கட்சியினரும் முகவர் கூட்டங்களை முழுவீச்சில் நடத்தத் தொடங்கினர். இந்த நிலையில், ம.தி.மு.க.வுக்கு ஒரு மக்களவை தொகுதி மட்டும் தி.மு.க கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தியைப் போட்டியிட வைத்துவிட்டு, மாநிலங்களவைக்கு வைகோ செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பின்னால் ராகுல்காந்தியின் அழுத்தம் இருப்பதாக ம.தி.மு.க-வினர் கூறுகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ம.தி.மு.க. உயர்மட்ட நிர்வாகிகள், ``திருநாவுக்கரசரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டைக்கு எம்.பி. தொகுதி இல்லை. தொகுதி வரையறையில், திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்குள் புதுக்கோட்டை மாவட்டம் பிரித்து அடக்கப்பட்டுள்ளது. சிவகங்கை தொகுதியை கார்த்திக் சிதம்பரம் எதிர்பார்ப்பதால், திருச்சி தொகுதியில் போட்டியிட திருநாவுக்கரசர் விருப்பம் தெரிவித்தார். அதே தொகுதியை குறிவைத்து வைகோவும் களமிறங்கியதால் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. 

திருநாவுக்கரசரின் சொந்த ஊரான அறந்தாங்கி, ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. அதை எடுத்துக் கொள்ளுமாறு தி.மு.க. கூறியதை திருநாவுக்கரசர் மறுத்துவிட்டார். ராகுல் காந்தியை நேரில் சந்தித்து தனக்கு திருச்சி தொகுதியைப் பெற்றுத் தருமாறு முறையிட, ராகுலும் உறுதியளித்துள்ளார். இத்தகவல் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டது. 

ராகுல் காந்தியின் சிபாரிசு என்பதால், வைகோவிடம் சமாதானம் பேசிய ஸ்டாலின், `திருமாவளவன் சிதம்பரத்தில் போட்டியிடுகிறார். நீங்களும் தேர்தலில் போட்டியிடப் போய்விட்டால், பிரசாரத்துக்கு ஆள் எங்கே இருக்கிறார்கள்? வெறும் தி.மு.க., காங்கிரஸ் தலைவர்களை மட்டுமே வைத்து பிரசாரம் செய்ய முடியாது. உங்களுடைய குரல் தமிழ்நாடு முழுவதும் ஒலிக்க வேண்டும். மாநிலங்களவைக்கு எம்.பி.யாக செல்லுங்கள். ஆறு வருடத்தில் நீங்கள் நினைத்ததை சாதித்துவிட்டு வாருங்கள்!' என்று கூறியுள்ளார். இதை முதலில் ஏற்றுக்கொள்ளாத வைகோ, ஸ்டாலினின் தொடர் வற்புறுத்தலால் சம்மதித்தார்" என்றனர். 

கடந்த மாதம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற 'தமிழேந்தல் தலைவர் கலைஞர் புகழ் போற்றும் விழா'வில் பேசிய ஸ்டாலின், ``நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் 40-க்கு 40 தொகுதிகளைப் பெறப் புயல்வேகப் பயணத்துக்கு வைகோ தயாராகி விட்டார்'' என்று தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய வைகோ தயாராக இருக்க வேண்டும் என்பதை சூசகமாக அன்றே சொல்லிவிட்டாராம். திருச்சி தொகுதிக்கான போட்டியிலிருந்து வைகோ விலகியதால், அத்தொகுதி திருநாவுக்கரசருக்கு ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.