Published:Updated:

`இருவரும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லட்டும்!’ - பொன்முடி, துரைமுருகன் கூட்டணியால் கலங்கும் தி.மு.க

ஆ.விஜயானந்த்

கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்த இந்திய ஜனநாயகக் கட்சி, தற்போது பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தி.மு.க தலைமையிடம் தெரிவித்துள்ளது.

`இருவரும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லட்டும்!’ - பொன்முடி, துரைமுருகன் கூட்டணியால் கலங்கும் தி.மு.க
`இருவரும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லட்டும்!’ - பொன்முடி, துரைமுருகன் கூட்டணியால் கலங்கும் தி.மு.க

ள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், இப்போது பெரம்பலூர் தொகுதியைக் கேட்கிறார். `கள்ளக்குறிச்சியில் தன்னுடைய மகனை நிறுத்த விரும்புகிறார் பொன்முடி. இதுதொடர்பான மோதல்கள் அறிவாலயத்தில் வெடிக்கத் தொடங்கிவிட்டன’ என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில். 

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிகளை இறுதி செய்வதைவிடவும் கட்சிகளுக்கான இடப்பங்கீட்டை அறிவிப்பதில்தான் திராவிடக் கட்சிகள் திணறி வருகின்றன. தி.மு.க தலைமையிலான அணிக்குள் இடப்பங்கீடு சர்ச்சைகள் ஓரளவுக்கு முடிவுக்கு வந்துவிட்டன. காங்கிரஸ் கட்சிக்குப் பத்து இடங்கள், வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய கட்சிகளுக்குத் தலா 2 இடங்கள், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஓர் இடம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஓர் இடம், ம.தி.மு.க-வுக்கு ஒரு மக்களவைத் தொகுதியுடன் ஒரு மாநிலங்களவைத் தொகுதிகள் என 20 தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளது தி.மு.க. ` 20 தொகுதிகளில் போட்டியிட்டாலும் எங்களுடன் இருக்கும் சில கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளன. இதுவும் எங்களுக்குக் கூடுதல் பலம்தான்' என்ற குரல்களும் அறிவாலயத்தில் இருந்தே எதிரொலிக்கின்றன. 

கடந்த மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான அணியில் அங்கம் வகித்த பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, தற்போது தி.மு.க கூட்டணிக்குள் வந்துவிட்டது. அந்தக் கட்சிக்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டதில் ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி அதிருப்தியில் இருக்கிறது. நேற்று மண்ணடியில் நடந்த ம.ம.க நிர்வாகிகளின் ஆலோனைக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய பேராசிரியர் ஜவாஹிருல்லா, ` தி.மு.க சார்பில் எங்களுக்கு ஓர் இடம் ஒதுக்கப்படாதது தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது' எனக் குறிப்பிட்டார். இதன்பிறகு வரும் 9-ம் தேதி நடக்க உள்ள செயற்குழு கூட்டத்தில் ம.ம.க நிலைப்பாட்டை அறிவிக்க இருக்கிறார் பேராசிரியர்.ஜவாஹிருல்லா. 

இந்தநிலையில், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்த இந்திய ஜனநாயகக் கட்சி, தற்போது பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தி.மு.க தலைமையிடம் தெரிவித்துள்ளது. `` இப்படியொரு திடீர் முடிவு ஏன்?'' என்ற கேள்வியை தி.மு.க நிர்வாகிகளிடம் விசாரித்தோம். `` அறிவாலயத்தில் ஸ்டாலினுடன் தொகுதி ஒப்பந்தம் முடிந்த பிறகு பேட்டி கொடுத்த ஐ.ஜே.கே தலைவர் ரவி பச்சமுத்து, கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விரும்புவது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, தொகுதியிலும் களவேலைகளைத் தொடங்க ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால், கள்ளக்குறிச்சி தொகுதி நிலவரத்தை அறிந்த பாரிவேந்தர், பெரம்பலூரில் போட்டியிடுவதே சிறந்தது என்ற மனநிலைக்கு வந்துவிட்டார். தவிர, தி.மு.க தலைமையிலான அணியில் நிற்பதை மிக முக்கியமானதாகக் கருதுகிறார் பாரிவேந்தர். கடந்த தேர்தல்களில் களவேலை பார்த்தாலும் அவருக்கு வெற்றி வந்து சேரவில்லை. இந்தமுறை நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் தொகுதி மாறி போட்டியிட விரும்புகிறார். அவர் இப்படியொரு முடிவை எடுத்ததில் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பொன்முடி அதிக உற்சாகத்தில் இருக்கிறார். அந்தத் தொகுதியில் தன்னுடைய மகன் கௌதம் சிகாமணியைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளார். 

இதனால் கள்ளக்குறிச்சி உடன்பிறப்புகள் அதிருப்தியில் உள்ளனர். `அப்பாவுக்குப் பிறகு, மகன் என சீட் கொடுப்பது எந்தவகையில் சரியானது... இங்கு நல்ல வேட்பாளர்கள் யாருமே இல்லையா?’ என அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சியில் பொன்முடி மகனுக்கு சீட் கொடுப்பதற்கு துரைமுருகனும் எதிர்ப்பு காட்டவில்லை. இதுதொடர்பாக, இருவரும் பேசி சமரச முடிவுக்கு வந்துவிட்டனர். `வேலூரில் கதிர் ஆனந்தும் கள்ளக்குறிச்சியில் கௌதம் சிகாமணியும் நிற்கட்டும். இருவரும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லட்டும்' என உற்சாகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் துரைமுருகன். இந்தத் தேர்தலில் வாரிசுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை கீழ்மட்ட நிர்வாகிகள் ரசிக்கவில்லை’’ என்கின்றனர் மௌனமாக.