Published:Updated:

``அ.தி.மு.க கூட்டணியில் நாங்களும் இருக்கிறோமா?’’ - ஜான்பாண்டியன் அதிர்ச்சி

``அ.தி.மு.க கூட்டணியில் நாங்களும் இருக்கிறோமா?’’ - ஜான்பாண்டியன் அதிர்ச்சி
``அ.தி.மு.க கூட்டணியில் நாங்களும் இருக்கிறோமா?’’ - ஜான்பாண்டியன் அதிர்ச்சி


நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் இன்று சென்னையில் நடைபெறும் கூட்டத்தில், பிரதமர் மோடி தலைமையில் பங்கேற்கவிருக்கின்றன என்ற முழுப்பக்க விளம்பரங்கள் நாளிதழ்களை அலங்கரித்துவருகின்றன. ஆனால், இந்த விளம்பரத்தில் அ.தி.மு.க கூட்டணிக் கட்சியாக அறிவிக்கப்பட்டிருக்கும் `தமிழக மக்கள் முன்னேற்றக் கழக’த்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியனோ, ``அ.தி.மு.க கூட்டணியில் நாங்களும் இருக்கிறோம் என்பதையே பேப்பர் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்'' என்கிறார் அதிர்ச்சியாக...


அவரது பேட்டி இங்கே... 
``பட்டியல் இனத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற டாக்டர் கிருஷ்ணசாமியின் கோரிக்கையில் நீங்களும் உடன்படுகிறீர்களா?’’

``பட்டியல் இனத்திலிருந்து வெளியேற வேண்டும். எங்களைத் `தேவேந்திர குல வேளாளர்’ என்று அறிவிக்க வேண்டும். இதுதான் எங்களது நோக்கம்.’’

``அப்படியென்றால், `இட ஒதுக்கீடு’ உரிமையையும் இழக்க நீங்களும் தயாராகிவிட்டீர்களா?’’

``இல்லை.... பட்டியல் இனத்திலிருந்து வெளியேறி, `வேளாண் மரபினர்’ என்ற அடையாளத்தில் எங்களுக்கென தனி ஒதுக்கீடும் வேண்டும்!’’ 

``புரியவில்லையே...?’’

`ஏற்கெனவே, `பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப்பட்டவர்’ என்றெல்லாம் இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வரும் சூழலில், வேளாண் தொழில் செய்துவரும் எங்கள் இன மக்களின் ஜனத்தொகையைக் கணக்கிட்டு `வேளாண் மரபினர்’ என்று எங்களுக்கென தனி அடையாளத்தை அரசு அளிக்க வேண்டும். பின்னர், இந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் எங்களுக்கு எந்த அளவில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதையும் அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும்!’’

`` `எஸ்.சி என்று அடையாளப்படுத்துவதே எங்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது. அதனால் எங்களை பி.சி-யாக அங்கீகரிக்க வேண்டும்' என்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. இதில் உங்களது நிலைப்பாடு என்ன?’’

``ஸ்டேட்டஸ் அடிப்படையில், `பி.சி, எம்.பி.சி, ஓ.பி.சி’ என இவற்றில் ஓர் அடையாளத்தைத்தான் அவர் கேட்டு வருகிறார். நான் கேட்பது `வேளாண் மரபினர்’ என்ற அடையாளம் மட்டும்தான். மற்றபடி இந்த வேளாண் மரபினர் எவ்வகையான இட ஒதுக்கீட்டுக்குள் வருவார்கள் என்பதையெல்லாம் அரசுதான் முடிவு செய்ய வேண்டும்!’’ 

'தற்போது பெற்றுவரும் இட ஒதுக்கீட்டு உரிமைகள் அப்படியே தொடர வேண்டும் என்று விரும்புகிறீர்களா..?’’

``ஆமாம்... இந்த இனத்தில் உள்ள உட்பிரிவுகள் அனைத்தையும் உள்ளடக்கி, `தேவேந்திர குல வேளாளர்’ என்று உடனடியாக அரசு ஆணை வெளியிடப்பட வேண்டும். தற்போது பட்டியல் இனத்தவர்களுக்கென வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு உரிமைகள், `வேளாண் மரபினர்’ இனத்துக்கும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன்.’’

`` `தேவேந்திர குல வேளாளர்’ கணக்கெடுப்பு பணிக்காகத் தமிழக அரசு புதிதாக ஓர் ஆய்வுக் குழுவை அமைத்திருக்கிறதே...?’’

``ஏற்கெனவே இதுபோன்ற ஆய்வு எல்லா மாவட்டத்திலும் நடத்தி முடிக்கப்பட்டு ஆவணங்கள் அனைத்தும் முதல்வர் டேபிளிலேயே இருக்கிறது. அதையே இந்த அரசு உடனடியாக அமல்படுத்தலாம். எனவே, இப்போது மறுபடியும் இப்படியொரு குழு அமைக்கப்பட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை. இது தேவையற்றது என்பது என் கருத்து.
சமீபத்தில் இதுவிஷயமாக நான் முதல்வரைச் சந்தித்துப் பேசியபோது, `தேர்தல் முடிந்ததும் தேவேந்திர குல வேளாளர் என்ற அறிவிப்பை நாங்கள் அறிவித்துவிடுவோம்’ என்று என்னிடம் தெரிவித்துள்ளார்.’’

``நீட் தேர்வு விஷயத்தில், மத்திய பி.ஜே.பி அரசை மிகக் கடுமையாக விமர்சித்துவந்தவர் நீங்கள். இப்போது பி.ஜே.பி கூட்டணியில் இணைந்திருக்கிறீர்களே..?’’

``பி.ஜே.பி கூட்டணியில் இணைந்திருப்பதாக நான் எங்கேயும் சொல்லவில்லையே...’’

``அ.தி.மு.க தலைமையிலான நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் நீங்களும் பங்கேற்க இருப்பதாக இன்றைய நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் வெளிவந்திருக்கிறதே...?’’


``எங்கள் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டமே இனிமேல்தான் நடைபெறப்போகிறது. அதில் என்ன முடிவு எடுக்கப்படும் என்று தெரியவில்லை. அது தெரியாமல், நான் எப்படி இன்றைய கூட்டத்தில் பங்கேற்க முடியும்? எனவே, நான் கலந்துகொள்ள வாய்ப்பில்லை!’’

``தற்போது அ.தி.மு.க கூட்டணியில் நீங்கள் இருக்கிறீர்களா இல்லையா?’’

``பேப்பரைப் பார்த்துதான் நாங்களும் அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதாகத் தெரிந்துகொண்டேன். (சிரிக்கிறார்) நாங்கள் ஏற்கெனவே அ.தி.மு.க கூட்டணியில் இருந்தோம். அந்த நம்பிக்கையில் தற்போதும் நாங்கள் அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிப்பதாக அவர்களாகவே விளம்பரம் வெளியிட்டுள்ளார்கள். ஆனால், நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை. நிர்வாகக் குழு முடிந்ததும், எங்கள் கட்சி முடிவைத் தெரிவிக்கிறேன்.’’