Published:Updated:

சாதித்துக் காட்டிய செளக்கிதார்!

சாதித்துக் காட்டிய செளக்கிதார்!
பிரீமியம் ஸ்டோரி
சாதித்துக் காட்டிய செளக்கிதார்!

சாதித்துக் காட்டிய செளக்கிதார்!

சாதித்துக் காட்டிய செளக்கிதார்!

சாதித்துக் காட்டிய செளக்கிதார்!

Published:Updated:
சாதித்துக் காட்டிய செளக்கிதார்!
பிரீமியம் ஸ்டோரி
சாதித்துக் காட்டிய செளக்கிதார்!

2017, மார்ச் 11-ம் தேதி.

- இன்றைய மோடியின் வெற்றிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தேதி குறிக்கப்பட்ட நாள் இது! உ.பி உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ‘2024-ம் ஆண்டு பொதுத் தேர்தல்வரை எதிர்க்கட்சிகள் வெற்றியை மறந்துவிட வேண்டியதுதான்’ என அன்றைய தினம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா. 

சாதித்துக் காட்டிய செளக்கிதார்!

இந்தியாவை ஆளப்போகும் வசீகரமான தலைவர்களை டெல்லி ஜன்பத் ரோட்டிலிருந்துதான் தேர்வுசெய்து கொண்டிருந்தார்கள் இந்தியர்கள். நேரு குடும்பத்திலிருந்த அந்தக் கவர்ச்சிக்கு இப்போது மவுசு போய்விட்டது. இதை இப்படியும் சொல்லலாம்... `நரேந்திர மோடிக்கு நிகராக இந்தியர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைவர்கூட இங்கில்லை’ என்பதுதான் 17-வது நாடாளுமன்றத் தேர்தல் எழுதியிருக்கும் தீர்ப்பு. தலைவர் மட்டுமா... பி.ஜே.பி-க்கு நிகரான கட்சியும் இங்கே கிடையாது. பி.ஜே.பி-க்கு பக்கத்தில்கூட அல்ல... நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில்கூட அமர முடியாத அளவுக்குக் காங்கிரஸை கதறவிட்டிருக்கிறது தேர்தல் முடிவு. அதனால்தான், ‘2019-ம் ஆண்டுத் தேர்தலை மறந்துடுங்க... 2024-ம் ஆண்டு தேர்தலில் நம்பிக்கைகொள்ளலாம்’ எனச் சரியாக கணித்திருக்கிறார் உமர் அப்துல்லா.

விவசாயிகள் பிரச்னை, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., ரஃபேல் விவகாரம், வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரப் பின்னடைவு, கடனை வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு ஓடிய தொழிலதிபர்கள்... எனத் தேர்தலின் பேசுபொருளாக பிரதான பிரச்னைகள் உருவெடுத்தபோதும், அவை திசை மாறின அல்லது தாக்கத்தை ஏற்படுத்தாமல் போயின. `தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ., உச்ச நீதிமன்றம், அமலாக்கத் துறை, வருமானவரித் துறை போன்ற தன்னாட்சி அமைப்புகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள்வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகளைப் பந்தாடியது’ என்ற குற்றச்சாட்டு மோடி அரசின் மீது எழுந்தது. ஐந்தாண்டுகள் பத்திரிகையாளர்களையே சந்திக்காமல் ஆட்சி நடத்தினார் மோடி. அத்தனையும் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் புல்வாமா படுகொலையும் அதற்கு பதிலடியாக நடந்த பாலக்கோட் தாக்குதலும் முக்கிய பிரச்னைகளை மூழ்கடித்தன. மக்கள் பிரச்னையைப் பேச வேண்டிய எதிர்க்கட்சிகள் புல்வாமாவையும் பாலக்கோட்டையும் கேலி பேசிக்கொண்டிருந்தன. அது, எதிர்மறையான விளைவை வாக்காளர்களிடம் விதைத்தது.

எரிவாயு இணைப்பு, தூய்மை இந்தியா, சொந்த வீடு, வங்கிக் கணக்கு என ஐந்தாண்டு சாதனைகளை அதிகமாக முழங்காமல் ராணுவ நடவடிக்கையையும், விண்வெளி ஆய்வையும் பேசின பி.ஜே.பி-யின் உதடுகள். காஸ் அடுப்பும் `தூய்மை இந்தியா’வைத் தாண்டியும் சொல்ல பி.ஜே.பி அரசுக்கு சாதனைகள் இல்லையா... ஆனாலும், இந்தியாவின் பாதுகாப்பை மட்டுமே பேசினார்கள். ‘காவலாளி’ போர்வையை போர்த்திக்கொண்டவர்களை, ‘கள்வர்கள்’ என ராகுல் காந்தி அழைத்தபோது, ரஃபேல் அஸ்திரம் அழிந்துபோனது. 2014-ம் ஆண்டுத் தேர்தலில்,  “கறுப்புப் பணத்தை மீட்டால், இந்தியர் ஒவ்வொருவரின் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போட முடியும்’’ என்று சொன்ன மோடியை நம்பியவர்கள், 2019-ம் ஆண்டில் “விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் அளிப்போம்” என்ற ராகுல் காந்தியின் வாக்குறுதியை நம்பாமல் போனதற்கு மோடி எழுப்பிய பாதுகாப்பு இந்தியாதான் காரணம்.

சாதித்துக் காட்டிய செளக்கிதார்!

“ஒருவேளை பாலகோட் சம்பவம் நடைபெறாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என யாருக்கும் தெரியாது. உண்மையில், பாலகோட் சம்பவத்துக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் தங்கள் வேகத்தை இழந்துவிட்டன. ‘காவலரே திருடன்’ என்ற கோஷம் சரியானது என்றால், ரஃபேலில் மேலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்’’ என்கிறார் உமர் அப்துல்லா.

தேர்தல் வெற்றிக்குப் பிறகும்கூட, ‘இந்தியா’, ‘தேசியம்’, ‘பாதுகாப்பு’ போன்ற சொல்லாடல்களை மோடி கைவிடவில்லை. “பி.ஜே.பி-யின் வெற்றி மோடிக்கானது அல்ல, இந்தியாவுக்கானது. இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி’’ என அழுத்தமாகப் பதிவு செய்துகொண்டே இருக்கிறார். ஆனால், இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காங்கிரஸ், இந்தியாவைப் பேசாமல் போனது மைனஸ்.

“வேலையின்மை, விலைவாசி உயர்வு பற்றி எதிர்க்கட்சிகள் தீவிர பிரசாரம் செய்தன. ஆனால், பி.ஜே.பி-யின் தேசியவாத பிரசாரத்தின் முன்னால் இந்தப் பிரச்னைகள் தோற்றுவிட்டன. தேசியவாதமே பி.ஜே.பி-யின் வெற்றிக்குக் காரணம்’’ எனக் காலம் கடந்த பிறகு கணித்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை பி.ஜே.பி எதிர்கொண்டபோது, அன்றைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மீது ஊழல் புகார்கள் படிந்திருந்தன. `குஜராத்தில் சிறந்த ஆட்சியைக் கொடுத்தவர்’ என்கிற இமேஜ் மோடி மீது விழுந்திருந்தது. மோடியின் அன்றைய தேசிய அரசியல் நுழைவு, எல்லையில்லா எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. காங்கிரஸ் எதிர்ப்பும் மோடி மீதான எதிர்பார்ப்பும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க... நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார் மோடி. அந்தத் தேர்தலில் வீசிய மோடி அலை இந்தத் தேர்தலில் இல்லை. மாறாக, மோடியின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனாலும், அதைவிடக் கூடுதல் பலத்தோடு ஜெயித்திருக்கிறார் மோடி.

சில தேர்தல்களைத் தவிர, ‘இந்தியாவை வழிநடத்தப் போகும் ஆற்றல் உள்ள கட்சி எது?’ என்ற விஷயம்தான் நாடாளுமன்றத் தேர்தல்களைத் தீர்மானித்தது.  பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்தபோது, அதற்காக எதிர்க்கட்சிகள்தாம் களத்துக்கு வந்தன. புல்வாமா, பாலக்கோடு விவகாரத்தில் ‘நாட்டுப்பற்று’ எதிரொலித்ததால், கட்சி சாராதவர்களே வீதிக்கு வந்து குரல் கொடுத்தார்கள். இந்த ஃபார்முலா பி.ஜே.பி-க்கு புரிந்திருக்கிறது. அதற்குக் கடந்தகால வரலாறும் காரணம்.

1998-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, வாஜ்பாய் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தபோது, அது ஐந்தாண்டுகளைக் கடக்கவில்லை. பி.ஜே.பி கூட்டணியில் அங்கம் வகித்திருந்த ஜெயலலிதா, நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வாஜ்பாய் அரசைக் கவிழ்த்தார். இரண்டாண்டுகளில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. இடைக்கால பிரதமராக வாஜ்பாய் இருந்தபோதுதான், 1999, மே - ஜூலை காலகட்டத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் போர் நடைபெற்றது. கார்கில் வெற்றி கொண்டாட்டத்துக்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களைப் பிடித்து, வாஜ்பாய் மீண்டும் பிரதமர் ஆனார். அன்றைக்கு கார்கில். இன்றைக்கு பாலக்கோட்.

ரஃபேல் ஊழல், நீரவ் மோடி உள்ளிட்ட விஷயங்களைச் சொல்லி மோடியை, ‘காவலாளியே திருடன்’ என ராகுல் காந்தி சொன்னபோது,  தன் பெயருக்கு முன்னால் ‘சௌக்கிதார்’ பட்டத்தை சூட்டிக்கொண்டார் மோடி. ரஃபேலுக்கு பதில் சொல்லாமல் நாட்டின் காவலாளி என கர்ஜித்தார். அதையொட்டியே ‘நானும் நாட்டின் காவலாளி’ எனச் சொல்லி பி.ஜே.பி-யினர் பிரசாரம் மேற்கொண்டனர். தேர்தல் முடிந்த பிறகு, ட்விட்டரிலிருந்து அந்தப் பட்டத்தை மோடி துறந்துவிட்டார். மோடியைக் கடுமையாக விமர்சிக்க ராகுல் வைத்த ‘காவலாளி ஒரு திருடன்’ என்ற கோஷமும் மக்களிடம் தோல்வி அடைந்ததாகவே காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள். ராகுல் சொன்ன அந்தக் குற்றச்சாட்டை மற்ற காங்கிரஸ் தலைவர்கள்கூட வழிமொழியவில்லை. அதனால்தான், தோல்வி குறித்து ஆராய கூட்டப்பட்ட காரிய கமிட்டி கூட்டத்தில், “காவலாளியே திருடன் என்கிற என் பேச்சை மற்ற தலைவர்கள் ஆதரித்துக்கூடப் பேசவில்லை’’ என ஆதங்கப்பட்டிருக்கிறார் ராகுல் காந்தி.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற வெற்றிக் களிப்பில் நாள்களைக் கடத்தாமல், கட்சிக்கு நங்கூரம் பாய்ச்சும் வேலையைக் கட்டமைத்தது பி.ஜே.பி. மிஸ்டு கால் கொடுத்து, கட்சியில் தொண்டர்களை இணைப்பது தொடங்கி ஒவ்வொரு படியாக முன்னேற ஆரம்பித்தது. ஆர்.எஸ்.எஸ் பிரசாரகர்கள் இளைஞர்களைத் திரட்டினார்கள். அவர்கள் மூலமாக மக்களை ஒருங்கிணைத்தார்கள். மாநில சட்டமன்றத் தேர்தல்களில் களமாடி, நாடாளுமன்றத் தேர்தல்வரை வகுத்த வியூகம் வெற்றிகளைக் குவிக்க உதவியது. இதற்கு ‘இந்துத்துவம்’ என எதிர்க்கட்சிகள் சாயம் பூசிக்கொண்டிருக்க, வாக்குச் சாவடி வரை கிளை பரப்பியது பி.ஜே.பி. ஒவ்வொரு வாக்குச் சாவடியையும் பலமான வாக்குச் சாவடியாக மாற்றி, முகவர்களை நியமித்து, வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு வரவழைக்கும் பொறுப்பாளர்கள்வரை நேர்த்தியான திட்டமிடலைச் செய்தது பி.ஜே.பி.

சாதித்துக் காட்டிய செளக்கிதார்!

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, “நாட்டிலுள்ள ஒவ்வொரு  வாக்குச் சாவடி அளவிலும் கட்சியை வலுப்படுத்தியதில் பி.ஜே.பி தொண்டர்கள் முக்கியப் பங்காற்றினர். அவர்களின் அயராத உழைப்பு பி.ஜே.பி-யை பல மடங்கு வலுப்படுத்தியிருக்கிறது’’ எனச் சொன்னார் அமித் ஷா.  

கடந்த ஆண்டு இறுதியில் எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைக்க முயன்றபோது,
“பத்து பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால், யார் பலசாலி என்று நீங்கள் சொல்லுங்கள்” எனக் கேள்வி எழுப்பினார் ரஜினி. ‘நாங்கள் பலசாலிகள்தாம்’ என அமித்ஷாவும் மோடியும் நிரூபித்திருக்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான மே 23-ம் தேதி இன்னொரு முக்கியமான தினம். சரியாக ஓராண்டுக்கு முன்னர் அதே மே 23-ம் தேதியில்தான் கர்நாடக முதல்வர் குமாரசாமி அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சிகள் எல்லாம் அணி திரண்டிருந்தன. புதிய கூட்டணிக்கான அடித்தளம் உருவாக்கப்பட்டது. ஆனால், உருப்பெறவில்லை. கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாத பி.ஜே.பி ஆட்சியமைக்க முயன்றபோது அதை முறியடித்தது காங்கிரஸ். ஆட்சி அமைக்க பி.ஜே.பி எடுத்த நடவடிக்கையை மாநிலக் கட்சிகள் அனைத்தும் எதிர்த்தன. காங்கிரஸின் முயற்சிக்கு முட்டுக் கொடுத்தன. மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவை பதவியேற்றபோது சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன், அகிலேஷ் யாதவ், மாயாவதி, தேவ கவுடா, சரத்பவார், சரத்யாதவ், டி.ராஜா, லாலுவின் மகன் தேஜஸ்வினி, சீதாராம் யெச்சூரி என இந்தியாவின் முக்கியத் தலைகள் எல்லாம் ஒன்று கூடினர். `நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கான விதை இது’ என ஆரூடங்கள் எழுந்தன. தி.மு.க., இடதுசாரிகள்,  திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ராஷ்டிரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தெலங்கானா ராஸ்ட்ரிய சமிதி, மதச் சார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மாநிலக் கட்சிகள் அனைத்தும் பி.ஜே.பி-க்கு எதிராகக் குரல் கொடுத்துக்கொண்டிருந்தன. ஆனால் கூட்டணி, கரம் கொடுக்கவில்லை. ஆளுக்கு ஒரு திசையில் தேர்தலை எதிர்கொண்டனர். கடந்த காலங்களில் இப்படி பயணம் செய்து பாடம் கற்றுக் கொண்டவர்கள், கர்நாடகாவில் ஒன்றுகூடிய பிறகு ஒன்றாவார்கள் என்கிற எண்ணத்தைத் தகர்த்தார்கள்.

உமர் அப்துல்லா கணிப்பு மட்டுமல்ல... ஊடகங்கள் வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பும் உண்மையாகின. ‘மீண்டும் ஆட்சியமைப்போம்’ என்பதில் பி.ஜே.பி உறுதியாக இருந்தது. வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு நடக்கவேண்டிய விருந்தை முன்பே நடத்தியது பி.ஜே.பி. மோடியின் அடுத்த ஆட்சி அமைவதற்கான அடிநாதமாக அந்த விருந்து நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கதவுகளை தட்டிக்கொண்டி ருந்தன எதிர்க்கட்சிகள். தேர்தலுக்குப் பிறகு சேர்ந்துகொண்ட இந்தக் கட்சிகள் தேர்தலுக்கு முன்னர் அணி சேரவில்லை.
காங்கிரஸ் கூட்டணியில் சேர்வதற்குத் தயங்கிய கட்சிகள் பலவும், பி.ஜே.பி எதிர்ப்புக் கொள்கையில் ஒன்றாக இருந்தன. காங்கிரஸும் அதேநிலையில் இருந்தபோதும், அதனோடு மாநிலக் கட்சிகள் நட்போடு இருந்தபோதும் கூட்டணி மட்டும் சாத்தியப்படவில்லை. அதற்குக் காரணம் மாநிலங்களில் தங்களுக்கான தனித்துவத்தைக் காப்பாற்ற நினைத்து, காங்கிரஸுடன் கரம் கோக்க மறுத்தன. ஒத்த கருத்துக்கொண்டவர்களை இணைக்கும் முயற்சியைக்கூட காங்கிரஸ் முன்னெடுக்கவில்லை. அதற்கு ஓர் உதாரணம் ஆம் ஆத்மி. காங்கிரஸுடன் அணி சேர அரவிந்த் கெஜ்ரிவால் தயாராக இருந்தபோதும் காங்கிரஸ் தட்டிக் கழித்தது. ‘`மோடி ஆட்சிக்கு வந்தால், அதற்குக் காங்கிரஸ்தான் காரணம்’’ எனத் தேர்தலுக்கு முன்னர் கெஜ்ரிவால் சொன்னது நிஜமானது. 

சாதித்துக் காட்டிய செளக்கிதார்!

மம்தாவோ, சந்திரபாபு நாயுடுவோ, சந்திரசேகர ராவோ, அகிலேஷ் யாதவோ, மாயாவதியோ மோடியை வீழ்த்த முடியாது. மோடிக்கு எதிரான நேரடி போட்டியாளரான ராகுல் காந்தியால்தான் அது சாத்தியப்படும். அதற்கு காங்கிரஸ் கொஞ்சமாவது தன் பலத்தை உயர்த்தியிருக்க வேண்டும். அதை காங்கிரஸ் செய்யவில்லை. 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்காத அளவுக்குப் படுதோல்வி அடைந்த பிறகு, இந்த ஐந்தாண்டு காலத்தில் கட்சியை வலுப்படுத்தும் பணியைப் பத்து சதவிகிதம்கூட காங்கிரஸ் செய்யவில்லை. 2014-ம் ஆண்டுத் தேர்தலில்
464 தொகுதிகளில் போட்டியிட்டு, 178 இடங்களில் டெபாசிட்டை இழந்து, வெறும் 44 இடங்களில் மட்டுமே ஜெயித்த காங்கிரஸ், இந்த ஐந்தாண்டு காலத்தில் கற்றுக்கொண்ட பாடம் என்ன...
44 தொகுதிகளிலிருந்து இப்போது 52 தொகுதிகளாக உயர்ந்தது மட்டும்தான் கதர்ச் சட்டைக்காரர்களின் சாதனை. 

‘அமேதியில் தோற்போம்’ என கணிக்கத் தெரிந்து, வயநாடு தாவ முடிந்த ராகுல் காந்தியால், மோடியை வீழ்த்துவதற்கான வியூகத்தை வகுக்கத் தெரியாமல் போய்விட்டது. “பி.ஜே.பி வெற்றி பெற்றதற்கு சரியான கூட்டணி இல்லாததும், எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமையில்லாததுமே காரணம். தமிழகத்தில் கூட்டணி சரியாக இருந்ததால், பி.ஜே.பி-யைத் தோற்கடிக்க முடிந்தது. அதனால் அடுத்துவரும் தேர்தல்களில் தலைவர்கள் சரியான கூட்டணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’’ என சொல்லியிருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ராஜா.

எதிர்க்கட்சிகளெல்லாம் காலம் கடந்து சுயவிமர்சனம் செய்துகொண்டிருக்க, இதோ கம்பீரமாக நாற்காலியில் அமர்ந்து... மீண்டும் சௌக்கிதார் சர்க்கார்!

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி