Published:Updated:

அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்ற 34 மாதங்கள் போதும்! - எல் அண்டு டி நிறுவனம்

எம்.குமரேசன்
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்ற 34 மாதங்கள் போதும்! - எல் அண்டு டி நிறுவனம்
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்ற 34 மாதங்கள் போதும்! - எல் அண்டு டி நிறுவனம்

மேற்குத் தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றும் டெண்டர் மும்பையைத் தலைமையகமாக கொண்ட  லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 34 மாதங்களில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்.

பவானி ஆற்றில் பில்லூரிலிருந்து 2,000 கன அடி நீர் திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் வறட்சி பாதித்த பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் திட்டம்தான் அத்திக்கடவு -அவினாசி திட்டம். இந்தத் திட்டத்தால் 5 லட்சம் மக்கள் குடிநீர் வசதி பெறுவார்கள். 1.30 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும். 60 ஆண்டுக்காலமாக இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமெனக் கொங்கு மண்டல விவசாயிகள் போராடி வந்தனர்.  2016-17ம் ஆண்டு பட்ஜெட்டில் இந்தத் திட்டத்துக்குத் தமிழக அரசு நிதி ஒதுக்கியது. கடந்த ஜனவரி மாதத்தில் தமிழக அரசு இந்தத் திட்டத்துக்காக டெண்டர் கோரியிருந்தது. தொடர்ந்து, பிப்ரவரி  28- ந் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். 

இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் வாய்ப்பு  புகழ்பெற்ற லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.1,652 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதற்காக 115 கி.மீ தொலைவு பிரமாண்டமான பைப்லைன் அமைக்கப்படுகிறது. இடையில் 7 இடங்களில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்படுகின்றன. பெருந்துறை அருகே 30 மெகாவாட் சூரிய ஒளி மின்சார உற்பத்தி மையமும் கட்டப்படுகிறது. பணிகள் முடிந்த பிறகு எல் அண்டு டி நிறுவனமே முதல் 60 மாதங்களுக்குப் பராமரிக்கும். பிறகு, பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்படும். 

இது குறித்து எல் அண்டு டி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``அத்திக்கடவு -அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டால் 32 பொதுப்பணித்துறை குடிநீர்த் தொட்டிகள், 42 பஞ்சாயத்து குடிநீர்த் தொட்டிகள், 971 குளங்களுக்குக் குடிநீர் கிடைக்கும். அவினாசி, அன்னுர், திருப்பூர், நம்பியூர், சூலுர், பெருந்துறை பகுதி மக்களின் குடிநீர் தேவைத் தீர்க்கப்படும்'' என்று தெரிவித்துள்ளது. 

எல் அண்டு டி நிறுவனம் முதற்கட்ட ஆய்வை விரைவில் தொடங்கவுள்ளது. சுற்றுச்சூழல் துறையிடமிருந்து முறையாக அனுமதி வாங்க வேண்டிய அவசியமும் உள்ளது.