அரசியல்
அலசல்
Published:Updated:

அன்று ‘இன்குலாப் ஜிந்தாபாத்’... இன்று ‘ஜெய் ஸ்ரீராம்’! - என்ன செய்யப்போகிறார்கள் இந்திய இடதுசாரிகள்?

அன்று ‘இன்குலாப் ஜிந்தாபாத்’... இன்று ‘ஜெய் ஸ்ரீராம்’! - என்ன செய்யப்போகிறார்கள் இந்திய இடதுசாரிகள்?
பிரீமியம் ஸ்டோரி
News
அன்று ‘இன்குலாப் ஜிந்தாபாத்’... இன்று ‘ஜெய் ஸ்ரீராம்’! - என்ன செய்யப்போகிறார்கள் இந்திய இடதுசாரிகள்?

அன்று ‘இன்குலாப் ஜிந்தாபாத்’... இன்று ‘ஜெய் ஸ்ரீராம்’! - என்ன செய்யப்போகிறார்கள் இந்திய இடதுசாரிகள்?

நாடாளுமன்றத் தேர்தலில், தங்களுக்குக் கிடைத்துள்ள படுதோல்வியால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் இந்திய இடதுசாரி தோழர்கள். ‘மேற்கு வங்கத்தைப் பார்… திரிபுராவைப் பார்… கேரளத்தைப் பார்…’ என்று சொல்லிக்கொண்டிருந்த இடதுசாரிகளுக்கு, ‘தமிழ்நாட்டைப் பார்’ என்று சொல்ல வைத்திருக்கின்றன தேர்தல் முடிவுகள்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில், நாடு முழுவதும் இடதுசாரிகள் வென்றிருப்பது, ஐந்தே ஐந்து இடங்களில்தான். தமிழகத்தில் நான்கு இடங்கள், கேரளாவில் ஓர் இடம். 34 ஆண்டுகள் ஆட்சிபுரிந்து தங்களின்  எஃகு கோட்டையாக இடதுசாரிகள் கட்டிக்காத்த மேற்கு வங்கத்தில், 39 இடங்களில் இடது முன்னணிக்கு டெபாசிட் போய்விட்டது. ஏற்கெனவே திரிபுராவும் கைநழுவிப்போய், கடைசியாக நம்பிக்கொண்டிருந்த கேரளமும் இடதுசாரிகளைக் கைவிட்டுவிட்டது.

2004-ல் 59 இடங்களில் வெற்றிபெற்ற இடதுசாரிகளின் தயவுடனேயே, காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு கூட்டணி ஆட்சி அமைத்தது. அவ்வளவு செல்வாக்குடன் இருந்த இடதுசாரிகள், இன்றைக்கு வெறும் ஐந்து இடங்களுக்குள் சுருங்கிவிட்டார்கள். மேற்கு வங்கத்தில் 2009-ல் 33.1 என்றிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் வாக்கு சதவிகிதம், 2014-ல் 21 சதவிகிதமாகக் குறைந்து, இப்போது 6.28 சதவிகிதமாகச் சரிந்துவிட்டது. இந்திய இடதுசாரிகளின் வரலாற்றில் இதற்கு முன் இப்படியொரு மோசமான தோல்வி  ஒருபோதும் ஏற்பட்டதில்லை. இந்தத் தோல்வியை, ‘பேரழிவு’ என்று குறிப்பிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான சுதாகர் ரெட்டி, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

அன்று ‘இன்குலாப் ஜிந்தாபாத்’... இன்று ‘ஜெய் ஸ்ரீராம்’! - என்ன செய்யப்போகிறார்கள் இந்திய இடதுசாரிகள்?

தங்களின் பிரதான எதிரியான பி.ஜே.பி, பிரமாண்டமான வெற்றியைப் பெற்று இரண்டாவது முறையாக அரியணை ஏறுகிற வேளையில், இடதுசாரிகள் தங்கள் கட்சிகளின் அங்கீகாரத்தையே இழக்கின்றனர். “கம்யூனிஸ்ட்கள் பலமிழப்பது தேசத்துக்கு நல்லதல்ல” என்று கவலையுடன் குறிப்பிடும் இடதுசாரி எழுத்தாளர் அ.மார்க்ஸ், “விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட சாமானிய மக்களின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலித்தவர்கள் கம்யூனிஸ்ட்கள். அவர்களின் எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் கணிசமாகக் குறைந்திருப்பது  கவலைக்குரியது” என்கிறார்.

“கம்யூனிஸ்ட்கள் வலுவிழப்பதை, இந்தியாவில் மட்டுமே நடக்கும் ஒரு பிரச்னையாகப் பார்க்க முடியாது. பல்வேறு காரணங்களால், உலக அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்னடைவைச் சந்திக்கின்றன. இன்றைக்கு உலகமே பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக் காடாக மாறியுள்ளது. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் எல்லாமே எளிய மக்களுக்கு எட்டாத உயரத்துக்குச் சென்றுகொண்டுள்ளன. நிரந்தர வேலை, ஓய்வூதியம் என்பதெல் லாம் பழங்கதை ஆகிவிட்டன. தொழிலாளி வர்க்கம் இன்று போராடும் சக்தியை இழந்து கிடக்கிறது. கம்யூனிஸ்ட் கள் முன்வைத்து வந்த வர்க்கப்போராட்டம் என்கிற அடித்தள மக்களின் உரிமைகளுக் கான போராட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. அந்த இடத்தை மத, இன வெறுப்புகள் நிரப்புகிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை வரவேற்கத் தக்கதல்ல.

மேற்கு வங்கத்தில் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த இடது முன்னணியினர் நிலச்சீர்திருத்தம் போன்ற முக்கியமான நடவடிக்கைகளை மிகச் சிறப்பாக நிறைவேற்றினர். அப்படியிருந்தும் இன்று அங்குள்ள விவசாயிகள், தொழிலாளிகள், சிறுபான்மை மக்கள் ஆகியோரால் வெறுக்கப்படும் நிலைக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர். இது ஏன் என்பதை, இடதுசாரிகள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்று வேண்டுகோள் விடுக்கிறார் அ.மார்க்ஸ்.

“இடதுசாரிகள் பலமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. ஆனால், அவர்கள் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறார்கள். அடிப் படையில், எதிரி யார் என்று முடிவுசெய்வதில் இடதுசாரிகளுக்குக் குழப்பம் இருந்தது” என்று சொல்லும் மூத்த பத்திரிகையாளரான ஆர்.விஜயசங்கர், இடதுசாரிகளின் தோல்விக்கான காரணங்களை விமர்சன ரீதியில் முன்வைக்கிறார்.

“காங்கிரஸ், பி.ஜே.பி என இரண்டு கட்சிகளையும் எதிரி என்று பார்த்தனர் இடதுசாரிகள். ஆனால், இந்த இரு கட்சிகளையும் எதிர்க்கக்கூடிய வலு, கம்யூனிஸ்ட்களுக்கு இல்லை. பாசிசமா... எதேச்சதிகாரமா என்று மிகப்பெரிய விவாதத்தை நடத்தினார்கள். இந்தியாவுக்கு வேறொரு வடிவத்தில் பாசிசம் வந்துள்ளது என்று பார்த்திருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. பட்டியல் சமூகத்தினருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி-யால் பொருளாதாரமே நசுக்கப்படுகிறது. இத்தகையச் சூழலில், மற்றக் கட்சிகளை ஒன்றுதிரட்டி பலமான ஓர் அணியைக் கட்டுகிற மிகப் பெரிய கடமை இடதுசாரிகளின் முன் இருந்தது. அதை செய்யத் தவறிவிட்டனர்” என்று குற்றம்சாட்டுகிறார் ஆர்.விஜயசங்கர்.

மேற்கு வங்க மாநிலத்தில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் பி.ஜே.பி-க்கும் இடையேதான் போட்டி. அங்கு, 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட், மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது. ஜோதிபாசுவுக்கு அடுத்துவந்த புத்ததேவ் பட்டாச்சார்யாவின் ஆட்சியில், சிங்கூர், நந்திகிராம் பிரச்னையில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள், இடது முன்னணி அரசுக்கு எதிராகத் திரும்பின. அந்தப் பிரச்னையை ஆயுதமாகக் கையிலெடுத்த மம்தா, ஆட்சியைப் பிடித்து அசைக்க முடியாத சக்தியாக மாறினார். இந்த நிலையில், அங்கு இடது முன்னணியின் வீழ்ச்சிக்கான பிற காரணங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார், தொழிற்சங்கத் தலைவர் ஆர்.இளங்கோவன்.

அன்று ‘இன்குலாப் ஜிந்தாபாத்’... இன்று ‘ஜெய் ஸ்ரீராம்’! - என்ன செய்யப்போகிறார்கள் இந்திய இடதுசாரிகள்?

“2011-ல் மம்தா ஆட்சிக்கு வந்தப் பிறகு, காவல் துறையை வைத்து மார்க்சிஸ்ட் கட்சியினர்மீது கடும் அடக்குமுறைகள் ஏவப்பட்டன. காவல்துறையின் ஆதரவுடன், திரிணாமுல் கட்சியினரும் வன்முறையில் இறங்கினர். அதில், ஏராளமான மார்க்சிஸ்ட் தொண்டர்கள் கொல்லப்பட்டனர். அந்த அடக்குமுறைகளை மார்க்சிஸ்ட்களால் எதிர்கொள்ள முடியவில்லை. மத்தியில் ஆட்சியில் இருந்த பி.ஜே.பி-யானது, மம்தா கட்சிக்கு எதிரானதாக இருந்தது. எனவே, பி.ஜே.பி-யால்தான் தங்களைப் பாதுகாக்க முடியும் என, மார்க்சிஸ்ட் கட்சியின்  ஏராளமான தொண்டர்கள் பி.ஜே.பி-க்குப் போய்விட்டனர். திரிணாமுல் கட்சிக்கும் பலர் போய்விட்டனர். அதை, ‘திரிணாமுல் காங்கிரஸ் என்கிற சுடுகிற சட்டியிலிருந்து, பி.ஜே.பி என்கிற நெருப்பில் விழுந்துவிடாதீர்கள்’ என்று தன் கட்சியினரை எச்சரித்தார் புத்ததேவ். ஆனால், காலம் கடந்து விட்டது” என்கிறார் ஆர்இளங்கோவன்.

கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. அங்குள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளில், ஒரே ஒரு தொகுதியைத்தான், மார்க்சிஸ்ட் கட்சியால் பிடிக்க முடிந்துள்ளது. 19 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே வென்றுள்ளது. பி.ஜே.பி-க்கு ஓர் இடம்கூட கிடைக்கவில்லை. இந்தத் தோல்விக் கான காரணங்களை விளக்கும் ஆர்.இளங்கோவன், “நாடாளுமன்றத் தேர்தலில், சபரிமலை விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியிருக்கிறார். ஆனால், சபரிமலை தாக்கம் இருந்திருக்கிறது. சபரிமலை விவகாரத்தில் பி.ஜே.பி என்ன நிலைப்பாடு எடுத்ததோ, அதே நிலைப்பாட்டைத்தான் காங்கிரஸ் கட்சியும் எடுத்தது. தாங்கள் வாக்களிக்கும் கட்சியானது... இந்து பாரம்பர்யத்தைக் காப்பாற்றுகிற ஒரு கட்சியாகவும் இருக்க வேண்டும்; தேசியக் கட்சியாகவும் இருக்க வேண்டும்; மதச்சார்பற்ற கட்சியாகவும் இருக்க வேண்டும் என்பது கேரள மக்களின் எதிர்பார்ப்பாக இருந்துள்ளது. அந்த வகையில், காங்கிரஸை வெற்றிபெறச் செய்துவிட்டார்கள்” என்கிறார்.

இடதுசாரிகளின் இந்தத் தோல்வியை மிகவும் சீரியஸான பிரச்னையாகப் பார்க்கிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணன். “மேற்கு வங்கத்தில், 2014-ல் இரண்டு இடங்களில் வென்ற பி.ஜே.பி, தற்போது 18 இடங்களைப் பிடித்துள்ளது. அங்கு 2014-ல் 17.2 ஆக இருந்த பி.ஜே.பி-யின் வாக்கு சதவிகிதம், 2019-ல் 40.23 சதவிகிதமாக உயர்ந் துள்ளது. மேற்கு வங்க மண்ணிலும் வகுப்புவாதம் எடுபட்டிருப்பதை, இடதுசாரிகளால் முறியடிக்க முடியவில்லை. இந்தச் சூழலில், இடதுசாரிகளுக்கு வெறும் தேர்தல் பரிசீலனை, தோல்வி குறித்த ஆய்வு, தேர்தல் உடன்பாடு உத்தி பற்றிய ஆய்வு ஆகியவை மட்டுமே போதாது. ஒட்டுமொத்த இந்தியச் சமூகம் குறித்து ஆழ்ந்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அந்த ஆய்வானது, மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்ற நோக்கிலிருந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

இங்கு சாதியம் இருக்கிறது. இது, பல தேசிய இனங்களின் கூட் டமைப்பு. இந்தியாவைப்போல, கோடிக்கணக்கான மக்களைக் கொண்ட மொழிவழி தேசிய இனங்கள் இருக்கக்கூடிய நாடு வேறு எங்கும் கிடையாது. மொழிவழி தேசிய இனங்களின் உரிமைகள், அவற்றின் நியாயமான கோரிக்கைகள் ஆகியவற்றில் கம்யூனிஸ்ட் இயக்கம் அழுத்தமாக வெளிப்பட வேண்டும். அந்த வகையில், மண்ணுக்கேற்ற மார்க் சியம் என்பதை ஆய்வுசெய்ய வேண்டும். ரஷ்யப் பாதையா… சீனப் பாதையா என்று விவாதங்கள் நடந்து, இந்தியப் புரட்சிக்கு இந்தியப் பாதைதான் சரி என்று 1951-லேயே ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது. அந்தப் பாதை இன்னும் துல்லியமாகக் கண்டறியப்படவில்லை. அதற்கான ஆய்வு இப்போது மிக அவசியம்” என்கிறார் அருணன்.

செங்கொடியேந்தி ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என முழக்கமிட்ட மேற்கு வங்க கம்யூனிஸ்ட் தொண்டர்களில் பெரும்பாலானவர்கள், இன்றைக்கு காவிக்கொடியேந்தி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிடுகிறார்கள். சமூக மாற்றத்துக்கான கட்சி என்று பேசப்படும் இடதுசாரிக் கட்சிகள்... இந்தியத் தன்மைக்கு ஏற்ப மார்க்சியம் பேசாதது இந்த மாபெரும் சறுக்கலுக்குக் காரணம்!

- ஆ.பழனியப்பன்