அரசியல்
அலசல்
Published:Updated:

தமிழகத்திலேயே அதிக வாக்குகள்... திண்டுக்கல் வேட்பாளர் சாதனை!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள்... திண்டுக்கல் வேட்பாளர் சாதனை!
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழகத்திலேயே அதிக வாக்குகள்... திண்டுக்கல் வேட்பாளர் சாதனை!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள்... திண்டுக்கல் வேட்பாளர் சாதனை!

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து அ.தி.மு.க-வின் கோட்டையாக இருந்த திண்டுக்கல்லை, தமிழகத்திலேயே அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் தன்வசமாக்கியிருக்கிறது தி.மு.க!

திண்டுக்கல் மாவட்ட தி.மு.க-வினருக்கே அதிகம் அறிமுகம் இல்லாதவர், வேலுசாமி. கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாமல் சாதாரணத் தொண்டராக இருந்தவர். முதன்முறையாகத் தேர்தலில் போட்டியிட்ட இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் ஜோதிமுத்துவைவிட 5,38,972 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். தி.மு.க பிரபலங்கள்கூட இந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை. இத்தனைக்கும் திண்டுக்கல், எப்போதுமே அ.தி.மு.க-வுக்கு ராசியான தொகுதி. கட்சி ஆரம்பிக்கப்பட்ட பிறகு, அ.தி.மு.க தனது முதல் தேர்தலையும் இந்தத் தொகுதியில்தான் சந்தித்தது. அப்போதுதான் இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்தது. அப்போதிருந்தே, அ.தி.மு.க-வின் கோட்டையாக மாறியது திண்டுக்கல். 

தமிழகத்திலேயே அதிக வாக்குகள்... திண்டுக்கல் வேட்பாளர் சாதனை!

திண்டுக்கல் தொகுதியில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் வேட்பாளர் மாயத்தேவர். பிறகு அவர் தி.மு.க-வில் இணைந்து, 1980-ம் ஆண்டு நடந்த தேர்தலில், போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பிறகு, இந்தத் தொகுதியில் ஒருமுறைகூட தி.மு.க வெற்றி பெறவில்லை. ஒருகட்டத்தில், தி.மு.க இந்தத் தொகுதியில் நேரடியாகப் போட்டியிடுவதை நிறுத்திவிட்டு, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க ஆரம்பித்தது. தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ் கட்சி இங்கு வெற்றி பெற்றுள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் திண்டுக்கல் தொகுதியில், தி.மு.க நேரடியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. அதிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதால், மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள் தி.மு.க-வினர். இதுகுறித்துப் பேசிய திண்டுக்கல் தி.மு.க நிர்வாகிகள், “மொத்தம் பதிவான 11,55,438 வாக்குகளில் 7,46,523 வாக்குகள் தி.மு.க-வுக்குக் கிடைத்திருக்கின்றன. தொகுதியில் உள்ள அ.தி.மு.க-வினரே தி.மு.க-வுக்கு வாக்களித்திருக் கிறார்கள். அமைச்சர் சீனிவாசன் வீடு உள்ள இரண்டாவது வார்டு பகுதியிலேயே தி.மு.க-வுக்கு 1,960 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இந்த வார்டில், பா.ம.க 569 வாக்குகள்தான் பெற்றிருக்கிறது. இனி திண்டுக்கல் தி.மு.க-வின் கோட்டை” என்கிறார்கள்.

வெற்றிகுறித்துப் பேசிய வேலுசாமி, “இத்தனை பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. இது தி.மு.க மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தொகுதி மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். சிறந்த எம்.பி என்று பெயர் வாங்குவேன். எனக்கு அதிக வாக்குகள் கிடைக்கக் காரணம், துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, மாவட்டச் செயலாளர்களான சக்கரபாணி, ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர்தான்” என்றார்.

சாதனையில் மக்கள் பணிகள் செழிக்கட்டும்!

- ஆர்.குமரேசன்