Published:Updated:

நீடிக்கும் இழுபறி! - என்ன நடக்கிறது அ.தி.மு.க - தே.மு.தி.க பேச்சுவார்த்தையில்?!

நீடிக்கும் இழுபறி! - என்ன நடக்கிறது அ.தி.மு.க - தே.மு.தி.க பேச்சுவார்த்தையில்?!
நீடிக்கும் இழுபறி! - என்ன நடக்கிறது அ.தி.மு.க - தே.மு.தி.க பேச்சுவார்த்தையில்?!

தி.மு.க பொருளாளர் துரைமுருகனை சந்தித்து, தே.மு.தி.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் சந்தித்துப் பேசினர். இதன் காரணமாக, தேர்தல் கூட்டணியில் குழப்பம் நீடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

`தே.மு.தி.க கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை; சுமூகமாக பேச்சுவார்த்தை நடந்துவருகிறது' என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று காலை பேசியிருந்தார். அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெறுமா என்ற கேள்வி மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் கேட்கையில், `ஆச்சர்யம் நிகழும் பாருங்கள். ஆச்சர்யங்களுடன் அமைவதுதான் தேர்தல் கூட்டணி' என ட்விஸ்ட் வைத்தார். `தே.மு.தி.க-வுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக' அ.தி.மு.க-வை சேர்ந்தவர்களே கூறியிருந்தனர். எப்படியும் தே.மு.தி.க தங்கள் கூட்டணியில் இணையும் என்பது அவர்களின் கணக்கு. மோடியை தமிழகத்துக்கு வரவழைத்து, அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சியினரை ஒன்றாக மேடை ஏற்றலாம் என நினைத்துதான், இன்றைய மேடையில் விஜயகாந்த் புகைபடத்தை பேனரில் சேர்ந்திருந்தனர். 

மோடி பங்கேற்கும் விழாவில் காலையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் இருந்த விஜயகாந்த் புகைப்படம், தற்போது அகற்றப்பட்டுள்ளது. அவரது கட்சிக்கொடிகளும் அகற்றப்பட்டுள்ளன. `பா.ம.க-வுக்கு இணையான தொகுதிகள் வேண்டும்' என்ற தே.மு.தி-வின் வலியுறுத்தலுக்கு அ.தி.மு.க போக்குக்காட்டியே வந்தது என்கிறார்கள். எப்படியும் தே.மு.தி.க தங்கள் கூட்டணிக்கு வந்துவிடும் என்று அ.தி.மு.க - பா.ஜ.க தலைவர்கள் நினைத்திருந்தனர். இந்த நிலையில், தே.மு.தி.க-வைச் சேர்ந்த அழகாபுரம் மோகன்ராஜ், அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்டோர் தி.மு.க பொருளாளர் துரைமுருகனை சந்தித்துப் பேசியது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்த சந்திப்பு தொடர்பாகப் பேசிய துரைமுருகன்,  `விஜயகாந்தின்  மைத்துனர் சுதீஷ் தொலைபேசியில் என்னிடம் பேசினார். என்ன என்று நான் அவரிடம் கேட்டேன். `நாங்கள் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி உங்களோடு வர விரும்புகிறோம்’ என்றார். நான், `எங்களிடம் சீட் இல்லை. எங்கள் தலைவர் ஊரில் இல்லை. நீங்கள் அ.தி.மு.க-வுடனும் பேசிவிட்டு எங்களிடமும் பேசினால் என்ன செய்ய முடியும், எங்களிடம் சீட் இல்லை. இப்போ கேட்டு என்ன பயன்? ஏன் நீங்கள் அங்கிருந்து வருகிறீர்கள்’ என்று கேட்டேன். அவர்களின் பேச்சில் சரியான பதில் இல்லை. நான் தெளிவாகக் கூறிவிட்டேன். சீட் இல்லை என்றேன். நீங்கள் முடிவு எடுத்தது சரிதான். ஆனால், எங்களிடம் உங்க கௌரவத்தைக் காக்கும் சீட் இல்லை என்றேன். `எப்படியாவது நீங்கள் பண்ணித் தரணும்’ என்றனர். பங்கிட்டுக் கொடுத்த சீட்டை திரும்பி வாங்க முடியாது. நாங்களே குறைவாகத்தான் வைத்துள்ளோம். அவர்கள் ரொம்ப நேரம் பேசினர்.

எங்ககிட்ட எங்க சீட் இருக்கு. நாங்களே 20 சீட்லதான் நிக்குறோம். பங்கிட்டுக் கொடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. தலைவர்கிட்ட இத சொல்லுவேன். லைன் கிடைக்கல. தூங்குறார் டிஸ்டர்ப் வேண்டாம். எழுப்பி சொல்ற அளவுக்கு ஒன்னும் முக்கியமான விஷயம் இல்லைன்னு போனை வெச்சுட்டேன். அவர்களுக்காகப் பரிசீலிக்கக்கூட சீட் இல்லையே.

அந்தக் கூட்டணி பிரசாரக் கூட்டத்தின் ஸ்டேஜ் பேனர்ல போட்டோ இருக்கே என அவர்களிடம் கேட்டேன். கழற்றிவிட்டதாகக் கூறுகின்றனர். இப்போ மட்டும்தான் சீட் குறித்து பேச வந்திருக்கின்றனர். அவர்கள் ஒரு நிலையான முடிவுக்கு வரவேண்டும். மாறி மாறிப் பேசினால், அவர்களிடம் நாங்கள் எதை நம்பி பேச முடியும்’’ என்றார்.

அதேநேரம், சென்னையில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்து தே.மு.தி.க துணைச் செயலாளர் சுதீஷ் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ்,``பியூஸ் கோயல் நேற்று இரவு மும்பையிலிருந்து தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டார். இன்று சென்னை வருவதாகவும், தன்னைச் சந்திக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் அவரை சந்திக்க இருந்தோம். அமாவாசை என்பதால் வேலை இருந்தது. முன்னதாகவே சந்திக்க முடியவில்லை. எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்தும் பேசினோம். மோடி வருவதால் நேரமில்லை என அவர்கள் சென்றுவிட்டனர். பேச்சுவார்த்தை தொடரும்.

முதலிலிருந்து ஒரே நிலைப்பாடுதான் எங்களுக்கு. பா.ஜ.க-வுடன் கூட்டணி என முடிவு செய்யும்போது, அவர்களுடன் பேசினோம். அ.தி.மு.க கூட்டணி சேர்ந்ததும் அவரிடம் பேசினோம். அப்போது, கூட்டணியில் பா.ம.க இணைந்தது குறித்து எங்கள் வருத்ததை தெரிவித்தோம். அப்போது, தி.மு.க. சார்பில் அழைப்பு வந்தது. துரைமுருகனிடம் தொலைபேசியில் பேசியது உண்மைதான். பா.ம.க-வுக்கு 7+1 தொகுதிகள் ஒதுக்கியது அ.தி.மு.க கூட்டணியின் தனி விருப்பம். எங்கள் கட்சிக்குத் தனி பலம் உண்டு. அதற்கான சீட்டுகளைக் கேட்கிறோம். பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை. நாளை அல்லது மறுநாள் கூட்டணி முடிவாகும். தொகுதி முடிவான பின் பா.ஜ.க கூட்டத்தில் கலந்துகொள்வோம்’’ என்றார்.