அரசியல்
அலசல்
Published:Updated:

காங்கிரஸுக்கு ‘கை’ கொடுத்த சபரிமலை... பி.ஜே.பி-யைக் கைவிட்டது ஏன்?

காங்கிரஸுக்கு ‘கை’ கொடுத்த சபரிமலை... பி.ஜே.பி-யைக் கைவிட்டது ஏன்?
பிரீமியம் ஸ்டோரி
News
காங்கிரஸுக்கு ‘கை’ கொடுத்த சபரிமலை... பி.ஜே.பி-யைக் கைவிட்டது ஏன்?

காங்கிரஸுக்கு ‘கை’ கொடுத்த சபரிமலை... பி.ஜே.பி-யைக் கைவிட்டது ஏன்?

கேரளத்தில் 20 நாடாளுமன்றத் தொகுதிகளில் 19 தொகுதிகளைக் கைப்பற்றி கெத்துகாட்டியிருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி. தேர்தல் முடிவால் ஆளும் சி.பி.எம் கூட்டணி அதிர்ச்சியடைந்துள்ளது. ‘சபரிமலை சன்னிதானத்துக்கு பெண்கள் வரலாம்’ என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்து, அரசியல்செய்த பி.ஜே.பி-யின் கணக்கு தவிடுபொடியாகியுள்ளது.

கேரளத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்.டி.எஃப் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான யூ.டி.எஃப் ஆகியவை சம பலத்தில் இருந்தன. கேரளத்தைப் பொறுத்தவரை, இந்த இரு கூட்டணிகள்தான் மாறிமாறி ஆட்சி அமைத்து வருகின்றன. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், கேரளத்தில் எட்டு இடங்களைப் பிடித்த எல்.டி.எஃப், இந்தத் தேர்தலில் ஆலப்புழா தொகுதியில் மட்டுமே வென்றுள்ளது. கடந்த தேர்தலைவிட இடது முன்னணி 5.01 சதவிகிதம் வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளது. குறிப்பாக, 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் வசமிருந்த ஆற்றிங்கல், ஆலத்தூர், பாலக்காடு, காசர்கோடு ஆகிய நான்கு தொகுதிகள் பறிபோயிருக்கின்றன. இது, ஆளும் எல்.டி.எஃப்-ஐ அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

காங்கிரஸுக்கு ‘கை’ கொடுத்த சபரிமலை... பி.ஜே.பி-யைக் கைவிட்டது ஏன்?

“சபரிமலை விவகாரத்தை சி.பி.எம் சரியாகக் கையாளவில்லை. அதனால்தான் எல்.டி.எஃப் கூட்டணி படுதோல்வி அடைந்திருக்கிறது” என்று எல்.டி.எஃப் கூட்டணியில் உள்ள கேரள காங்கிரஸ் (பி) கட்சியின் தலைவர் பாலகிருஷ்ண பிள்ளை குற்றம்சாட்டியுள்ளார். இன்னொரு பக்கம், “முதல்வர் பினராயி விஜயனின் செயல்பாட்டில் மாற்றம் தேவை; அதுகுறித்து அவரிடம் கூறுவதற்கு யாருக்கும் தைரியம் இல்லை” என்ற கருத்தும் சொந்தக் கட்சியிலேயே எழுந்துள்ளது. “கேரளத்தில் இடதுசாரிக்கு வலுவான அஸ்திவாரம் இருக்கிறது. தோல்விக்கான காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்வோம். சபரிமலை விவகாரத்தைக் கையிலெடுத்துக் கேரளத்தில் கலவரம் உண்டாக்க முயன்ற பி.ஜே.பி-யை மண்ணைக் கவ்வ வைத்துள்ளோம்” என்கிறார் சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன்.

கேரள முதல்வர் பினராயி விஜயனோ, “மோடி தலைமையிலான பி.ஜே.பி ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்று ஒரு பகுதி மக்கள் நினைத்தனர். அதனால் காங்கிரஸுக்கு வாக்களிப்பதுதான் நல்லது என்று சிந்தித்திருக்கிறார்கள். சபரிமலை விவகாரத்தால் நாங்கள் தோற்கவில்லை. அந்த விவகாரம் பிரதிபலித்திருந்தால், அதற்கான பலன் பி.ஜே.பி-க்குக் கிடைத்திருக்க வேண்டுமே?’’ என்கிறார்.

காங்கிரஸுக்கு ‘கை’ கொடுத்த சபரிமலை... பி.ஜே.பி-யைக் கைவிட்டது ஏன்?

கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி சார்பில், நேமம் தொகுதியில் ஓ.ராஜ கோபால் வெற்றிபெற்றதன் மூலம் கேரள சட்டசபையில் கணக்கைத் தொடங்கியது அந்தக் கட்சி. ஆனால், இந்தத் தேர்தலில், நாடாளுமன்றத்தில் புதிய கணக்கு தொடங்க சபரிமலை விவகாரம் வாய்ப்பாகக் கிடைத்திருக் கிறது என்று உற்சாகத்துடன் எதிர்பார்த்த பி.ஜே.பி-யின் நிலை பரிதாபமாகிவிட்டது. திருவனந்தபுரம் மற்றும் சபரிமலை இருக்கும் பத்தனம்திட்டா தொகுதிகளை நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்த பி.ஜே.பி-க்கு ஏமாற்றமே மிஞ்சியது. ‘நாயர் சமுதாய அமைப்பான என்.எஸ்.எஸ் வாக்குகள்கூட எனக்குக் கிடைக்க வில்லை’ என்று திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்ட  பி.ஜே.பி தலைவர் கும்மனம் ராஜசேகரன் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

“சபரிமலை விவகாரத்தால் கோபத்தில் இருந்த பெரும்பான்மையினர், காங்கிரஸ் கட்சிக்கு ஒரேமுகமாக வாக்களித்தனர். பி.ஜே.பி-யில் உள்ள தலைவர்கள் இடையே கோஷ்டிப்பூசல் காரணமாகப் பத்தனம்திட்டா தொகுதியில் வேட்பாளராக கே.சுரேந்திரனை அறிவிப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டது. மாநில நிர்வாகிகளின் உள்ளடி வேலைகளாலும் தோல்வி ஏற்பட்டுள்ளது” என்று குமுறுகிறார்கள் பி.ஜே.பி தொண்டர்கள்.

காங்கிரஸுக்கு ‘கை’ கொடுத்த சபரிமலை... பி.ஜே.பி-யைக் கைவிட்டது ஏன்?

தோல்வி குறித்து கேரள பி.ஜே.பி தலைவர் ஸ்ரீதரன் பிள்ளையிடம் பேசினோம். “கேரளத்தில் எங்கள் கட்சி தோல்வி அடைந்தது குறித்து ஆய்வுசெய்வோம். சி.பி.எம் கூட்டணியை மக்கள் புறக்கணித் ததால், முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும். இதுவரை நடந்த தேர்தல்களைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் பி.ஜே.பி-க்கு வாக்குச் சதவிகிதம் அதிகரித்திருக் கிறது, குறிப்பாகக் கடந்த 2014 தேர்தலை ஒப்பிடும்போது, மாநில அளவில் 1.64 சதவிகித வாக்குகளை அதிகம் பெற்றுள் ளது பி.ஜே.பி” என்றார்.

காங்கிரஸின் வெற்றியால் உற்சாகத் திலிருக்கும் கேரள எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதலாவிடம் பேசினோம். “கேரளத்தில் நாங்கள் வெற்றி பெற்றதற்கு சபரிமலை விவகாரம் முக்கியக் காரணம். சபரிமலைப் பிரச்னை, மத்திய மோடி அரசுக்கு எதிரான அலை, மாநில அரசு மீதான அதிருப்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிட்டது ஆகிய நான்கு காரணங்களும் எங்களுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளன. சபரிமலை விவகாரத்தில் இடதுசாரி அரசு எடுத்த முடிவு தவறானது. அதை பி.ஜே.பி ஆதாயம் தேடும் அரசியல் ஆக்கியது. எனவே, அந்த இரண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள்” என்றார்.

கடவுளின் தேசம் பி.ஜே.பி-யையும் சி.பி.எம் கூட்டணியையும் கைவிட்டுவிட்டது. எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது போகப்போகத் தெரியும்!

- ஆர்.சிந்து