Published:Updated:

``பதவி, பணத்துக்காக ராமதாஸ் என்ன வேண்டுமானாலும் செய்வார்!” - வெடித்த வேல்முருகன்

``பதவி, பணத்துக்காக ராமதாஸ் என்ன வேண்டுமானாலும் செய்வார்!” - வெடித்த வேல்முருகன்
``பதவி, பணத்துக்காக ராமதாஸ் என்ன வேண்டுமானாலும் செய்வார்!” - வெடித்த வேல்முருகன்

"பா.ம.கா.வில் ஒருவர் அடிப்பதுபோல் அடிப்பார், இன்னொருவர் அணைப்பதுபோல் அணைத்து தங்கள்மீது வரும் விமர்சனங்களிலிருந்து தற்காத்துக் கொள்வார்கள். ராஜ தந்திர யுக்தி அது."

க்களவைத் தேர்தலின் கூட்டணி பரபரப்புகள் தமிழகத்தையும் தொற்றிக்கொண்டுள்ளது. பாம்பு விடும் போராட்டம், சுங்கச் சாவடி உடைப்பு எனத் தமிழகப் போராட்டக் களத்தில் அதிரடி காட்டும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூட்டணி குறித்து அமைதி காக்கும் நிலையில், அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

`` `பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணியை எதிர்த்துப் போட்டியிடுவேன்' எனக் காடுவெட்டி குருவின் தாயார் கூறியுள்ளார். அப்படியானால், அவருக்கு ஆதரவு அளிப்பீர்களா?"

``குருவின் அம்மா 80 வயதை நிரம்பியவர். அவர்மீதும் அவருடைய ரத்த உறவுகள்மீதும் பா.ம.க-வினர் கொலை முயற்சி உள்ளிட்ட பொய் வழக்குகளைத் கொடுத்தும், குரு குடும்பத்தை நெருக்கடிக்கும், உயிருக்கு அச்சுறுத்தும் நிலைக்கும் உள்ளாக்கியுள்ளனர். இந்தச் சூழலில், குருவின் அம்மா வயது மூப்பு காரணமாகத் தேர்தலில் போட்டியிடுவது சாத்தியமில்லாதது. அதற்குப் பதில் குருவின் குடும்பத்திலிருந்து யாராவது அவரின் இறப்புக்கு நியாயம் கேட்டு அன்புமணியை எதிர்த்துப் போட்டியிட்டால் அவர்களுக்கு நிச்சயம் என் ஆதரவு உண்டு."

``அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பதில் அன்புமணிக்குத் துளியும் விருப்பமில்லை என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?"

``இதை நம்ப முடியாது. ஏனெனில், மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவதாக இருந்தாலும், என்னைப் போன்ற உறுப்பினர்களைக் கட்சியிலிருந்து நீக்குவதாக இருந்தாலும் சரி, கூட்டணி குறித்த முடிவுகளும் சரி... ஒருவர் அடிப்பதுபோல் அடிப்பார், இன்னொருவர் அணைப்பதுபோல் அணைத்து தங்கள்மீது வரும் விமர்சனங்களிலிருந்து தற்காத்துக் கொள்வார்கள். ராஜ தந்திர யுக்தி அது."

``13 ஆண்டுகளாக பா.ம.க மீது கடும் கோபத்தில் இருந்த அமைச்சர் சி.வி.சண்முகம், இப்போது சமாதானமாகி இருக்கிறாரே?"

``தைலாபுரம் தோட்டத்தில் 80 வகையான உணவுகள் பரிமாறப்பட்ட விருந்தில் பங்கேற்க சி.வி.சண்முகத்துக்கு விருப்பமில்லை. ஆனால், துணை முதல்வரும் முதல்வரும் கட்டாயப்படுத்தி அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பதவி, பணத்துக்காக ராமதாஸ் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்ற அவருடைய சுபாவம் இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது."

``பெரிய கட்சிகளிலிருந்து வெளியேறி, புதுக்கட்சி தொடங்கி, அரசியலில் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல்போன காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ போன்றவர்களின் நிலைதானா உங்கள் நிலையும்?"

``ஓட்டு அரசியலில் வெற்றியை நோக்கி நாங்கள் பயணிக்கவில்லை என நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், தமிழகத்தில் இருக்கிற தமிழ் அமைப்புகள், பெரியாரிய இயக்கங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என மக்களுக்காக உழைக்கிறவர்களின் மனங்களை வென்றிருக்கிறேன். தேர்தல் வெற்றிதான் முக்கியம் என்று நினைத்திருந்தால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த 2 சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு ஓர் அடிமை எம்.எல்.ஏ-வாக இருந்திருப்பேன். கடலூர் மாவட்டத்தில் மட்டும் அறியப்பட்ட வேல்முருகன், இன்று கன்னியாகுமரிவரை புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறான்".

``பெருவாரியான வன்னியர் சமூக மக்கள், ராமதாஸ் பின்னால்தான் இருக்கின்றனர் எனச் சொல்லப்படுகிறதே... அது உண்மைதானா?"

``அது முழுமையான வடிகட்டிய பொய். தமிழகத்தில் பெருவாரியான மக்கள்தொகை கொண்ட சமூகம் வன்னியர்கள்தான். குறைந்தபட்சம் 2 கோடி மக்களை கொண்ட சமூகத்தில், வெறும் 22 லட்சம் வாக்குகளைப் பெறக்கூடிய ஒரு தலைவர்தான் ஒட்டுமொத்தமாக அந்தச் சமூகத்துக்குத் தலைவர் எனச் சொல்லிக்கொண்டிருக்கிறார். பெரும் மக்கள் எண்ணிக்கையை வைத்து பேரம் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் 1989-ல் தொடங்கி இன்றுவரை அவர்களுடைய மொத்த வங்கியில் எந்த முன்னேற்றமும் இல்லை."

``இந்த மக்களவைத் தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? பி.ஜே.பி. இடம்பெற்றுள்ள அ.தி.மு.க கூட்டணிக்கா... இல்லை, காங்கிரஸ் உள்ள தி.மு.க கூட்டணிக்கா?"

``அடுத்து, சமூக ஆர்வலர் முகிலனுக்காகத் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளோம். அதன்பிறகு, கட்சியின் செயற்குழுக் கூடி கூட்டணி குறித்த முடிவை எடுப்போம். கண்டிப்பாக இந்த நாட்டை, நீட், ஜி.எஸ்.டி, எட்டு வழிச் சாலை, அணு உலை விரிவாக்கம், டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் போன்ற நாசகாரத் திட்டங்களால் என் தமிழ்ச் சமூகத்திற்குத் தீங்கு செய்ததை எதிர்த்துக் கேட்க துப்பில்லாத எடப்பாடி அரசை வைத்து மக்களின் வாழ்வைப் பாழாக்கிய மத்திய அரசுக்கு என் ஆதரவு இல்லை. மோடி அரசு இறக்கப்பட வேண்டும். அதுபோல எல்லா இடங்களிலும் லஞ்சம் லாவண்யம் இருக்கிற இந்த அ.தி.மு.க அரசு தூக்கி எறியப்பட வேண்டும். இதற்கான வலுவான பிரசாரத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். இவை அனைத்திற்கும் மேலாக  பேரறிவாளனின் விடுதலையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்."

`` `தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்ய வேண்டும்' என நீங்கள் நடத்திவரும் போராட்டம் எந்த நிலையில் உள்ளது?"

``மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற நிலம் கொடுத்த மக்களுக்கு, அதில் பணிபுரிய வாய்ப்பு இல்லை. தமிழர்களுக்குத் தமிழகத்தில் உள்ள அரசு உயர்பதவிகளில் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் வேலைவாய்ப்பைக் கபளீகரம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுச் செயல்படுகிறார். இவற்றுக்கு எதிராகத்தான் மக்களைத் திரட்டி உரிமையைக் கேட்கிறோம். தமிழ்நாட்டில் எதற்கு ஒடிசா பவன், அசாம் பவன்? இவற்றுக்காகப் போராடினால் நாங்கள் ஆன்டி இந்தியனா?"

அடுத்த கட்டுரைக்கு