Published:Updated:

``தாக்குதலில் இறந்த கொசுக்களை எண்ணிக்கொண்டிருக்க முடியுமா?" - மத்திய அமைச்சர் வி.கே. சிங்

``தாக்குதலில் இறந்த கொசுக்களை எண்ணிக்கொண்டிருக்க முடியுமா?" - மத்திய அமைச்சர் வி.கே. சிங்
``தாக்குதலில் இறந்த கொசுக்களை எண்ணிக்கொண்டிருக்க முடியுமா?" - மத்திய அமைச்சர் வி.கே. சிங்

`புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடிகொடுத்த தாக்குதலில், தீவிரவாதிகள் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்று கேள்வி கேட்கும் எதிர்க்கட்சியினரைத் தாக்கும் வகையில், ``அதிகாலை 3.30 மணிக்கு, அதிக அளவில் நிறைய கொசுக்கள் வந்தன. அவற்றைக் கொசு விரட்டியால் தாக்கினேன். இப்போது, செத்த கொசுக்களை எண்ணுவதா அல்லது கொசு ஒழிந்தது என அமைதியாகத் தூங்குவதா" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

புல்வாமா தாக்குதலில், 40-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடிகொடுக்கும் விதமாக, பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தீவிரவாத முகாம்களின்மீது  இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாகச் செய்தி வெளியானது. ஆனால், எவ்வளவு பேர் உயிரிழந்தனர் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

எவ்வளவு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என எதிர்க்கட்சிகள் இதுகுறித்து கேள்வி எழுப்பிவரும் வேளையில், மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங், ``விமானப்படை தாக்குதலில் எவ்வளவு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பதுகுறித்து கேள்வி கேட்பவர்களை, விமானத் தாக்குதல் நடத்தப்படும் விமானத்திலேயே கட்டி அனுப்பிவிட்டால், தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது,  எங்கு நடத்தப்பட்டது என்று தெரிந்துகொள்ள முடியும். தாக்குதலில் எவ்வளவு பேர் இறந்தார்கள் என்பதைக் கணக்கிட்ட பின்பு அவர்கள் திரும்பினால் போதும்" என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

அதன்பின்பு ட்விட்டரில், ``இரவு நேரத்தில் 3.30 மணி அளவில் நிறையக் கொசுக்கள் வந்தன. நான், அவற்றைக் கொசுவிரட்டிகொண்டு அடித்தேன். நான் இப்போது, எத்தனைக் கொசுக்கள் செத்துள்ளன என்பதை எண்ண வேண்டும் அல்லது அமைதியாகத் தூங்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

ட்விட்டர் பதிவுகுறித்துப் பேசிய வி.கே.சிங், ``இந்தியாவின் பதிலடித் தாக்குதலில், குண்டு வெடித்தது. கட்டடங்கள் பாதிப்படைந்துள்ளன. 1000 கிலோ வெடிமருந்து வெடித்து யாரும் இறக்கவில்லை என்று சொல்ல முடியுமா, எவ்வளவு பேர் இறந்திருக்கிறார்கள் என்பதைக் கணக்கு  கேட்பது  சரியில்லை" என்று தெரிவித்துள்ளார். வி.கே.சிங், ராணுவத் தளபதியாக  இருந்து ஓய்வுபெற்ற பின்பு, பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தலில் நின்று வெற்றிபெற்று, அமைச்சராகப் பதவி வகித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.