அரசியல்
அலசல்
Published:Updated:

‘கிங்மேக்கர்’ சந்திரபாபு நாயுடு வீழ்ந்தது எப்படி?

‘கிங்மேக்கர்’ சந்திரபாபு நாயுடு வீழ்ந்தது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
‘கிங்மேக்கர்’ சந்திரபாபு நாயுடு வீழ்ந்தது எப்படி?

‘கிங்மேக்கர்’ சந்திரபாபு நாயுடு வீழ்ந்தது எப்படி?

“அப்பாவின் மரணம் பல கலவரங்களை ஏற்படுத்திவிட்டது. ஆனால், அவரின் தொண்டர்கள் எங்கள் பக்கம் வருவார்கள். அப்பாவுக்கு விசுவாசமான தொண்டர்கள் அவரின் இறப்புக்குப் பிறகும், அவருக்கு விசுவாசமாக இருப்பார்கள். நாங்கள் திரும்பி வருவோம்” - காங்கிரஸ் கட்சியைவிட்டு நீக்கப்பட்டபோது ஜெகன்மோகன் ரெட்டி சொன்ன வார்த்தைகள் இவை. சொன்னபடி, ஆந்திர அரசியலில் சிம்ம சொப்பனமாக விளங்கிய கட்சிகளுக்கு மரணஅடி கொடுத்து, பிரமாண்டமான வெற்றியுடன் திரும்பி வந்திருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி!

முக்கியமாக, ஆந்திர அரசியலின் ராஜதந்திரியான சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தியது அவரது பெரிய சாதனை யாகப் பார்க்கப்படுகிறது. இப்போது ஆந்திரத்தின் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 151 தொகுதிகளும், மக்களவைத் தேர்தலில், 25 தொகுதிகளில் 22 தொகுதிகளும் ஜெகன்மோகன் வசமாகியிருக்கின்றன. 1995 முதல் 2004-ம் ஆண்டுவரை தொடர்ந்து 3,378 நாள்கள் ஆந்திரத்தின் முதல்வராக இருந்தவர், சந்திரபாபு நாயுடு. ஆந்திர அரசியலில் அதிக நாள்கள் தொடர்ந்து அரியணையில் இருந்தவரும் அவரே. 2004-ம் ஆண்டிலிருந்து இடையில் பத்து ஆண்டுகள் காத்திருந்து, 2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் சந்திரபாபு நாயுடு. கடும் போட்டிகளுக்கு இடையே பிடித்த ஆட்சியைத்தான், இப்போது முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகனிடம் பறிகொடுத்திருக்கிறார் நாயுடு. ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றிக் குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், சந்திரபாபு நாயுடுவின் தோல்விக்கு முக்கிய மாக சில காரணங்கள் வைக்கப்படுகின்றன.

‘கிங்மேக்கர்’ சந்திரபாபு நாயுடு வீழ்ந்தது எப்படி?

ஆந்திரத்தின் முக்கிய தொழில் வாய்ப்பு கள் நிறைந்த நகரமாக ஹைதராபாத் விளங்கியது. தெலங்கானா பிரிக்கப்பட்டு, ஹைதராபாத் தெலங்கானா வசம் ஒப்படைக்கப்பட்டபோது, ‘ஹைதரா பாத்தைவிடச் சிறந்த தலைநகராக அமராவதியைக் கட்டமைப்பேன்’ என்று உறுதிகொடுத்தார் சந்திரபாபு நாயுடு. ஆனால், அமராவதி நகரை அவரால் முழுமையாகக் கட்டமைக்க முடியவில்லை. தலைமைச் செயலகம் மட்டுமே அமராவதி யில் அமைந்திருக்கிறது. அதற்கான சாலை வசதிகள்கூட இன்னும் முழுமையாகச் செய்துகொடுக்கப்படவில்லை. தலைமைச் செயலகம் அமையும் முன்னரே, அமராவதிக்குப் பக்கத்தில் இருக்கும் குண்டூர், விஜயவாடா பகுதிகளில் சந்திர பாபு நாயுடுவுக்கு நெருக்கமான தொழிலதிபர்கள், நிலங்களை வாங்கிக் குவித்தனர். அவர்களின் பட்டியலை அப்போதே ஆதாரங்களுடன் வெளியிட்டார் ஜெகன்மோகன்.

போதாக்குறைக்கு தெலுங்கு தேசம் கட்சியின் பரம எதிரியும் ஆந்திரத்தின் பிரிவுக்குக் காரணமான கட்சியுமான காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து, மக்கள் மன உணர்வுகளில் காயம் ஏற்படுத்தினார் நாயுடு. இதை ‘வரலாற்றுக் கட்டாயமான கூட்டணி’ என்று சந்திரபாபு சமாளித்தாலும் அவரால் மக்களை நம்பவைக்கச் சரியான காரணத்தைச் சொல்ல முடியவில்லை. இன்னொரு பக்கம் தனது ஆட்சிக் காலத்தில், காபு சமூக மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் சந்திரபாபு நாயுடு. இதனால் கோபம் அடைந்த பின்தங்கிய வகுப்பு மக்கள், ஜெகன்மோகன் பக்கம் சாய்ந்தனர். போலாவரம் நீர்ப்பாசனத் திட்டத்தையும் முழுமையாக அவரால் முடிக்க முடியவில்லை. இதில் நூற்றுக் கணக்கான பழங்குடி கிராம மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்ததுதான் மிச்சம். வழக்கம்போல அவர் விவசாயிகளுக்கும் சொல்லிக்கொள்ளும்படியான திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. பட்டிசீமா என்னும் இடத்தில் நீரேற்று நிலையம் அமைத்து விவசாயிகளின் தோழன் என்ற பிம்பத்தை கட்டமைக்க முயன்றார். அந்த வியூகமும் ஆந்திர விவசாயிகளிடம் எடுபடாமல் போனது. ஆந்திரத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால், சந்திரபாபு நாயுடு இன்றுவரைக்கும் ஐ.டி துறையை மேம்படுத்துவதிலேயே கவனத்தை செலுத்தி வருகிறார். இதையும் மக்கள் பெரும் குறையாகவே கருதுகின்றனர்.

ஐ.டி துறை வளர்ச்சி பெற்றாலும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க மறந்துவிட்டார் நாயுடு. தன்மீது மக்களுக்கு இருக்கும் எதிர்ப்பைப் போக்க இலவச ஸ்மார்ட்போன், வீடு கட்ட ஏழு லட்சம் ரூபாய் நிதியுதவி, விவசாய முதலீட்டு திட்டம் மூலம் விவசாயிகளுக்கு வருடம் 10,000 ரூபாய் என சலுகைகளை வாரி வழங்கினார். ஆனால், அது காலதாமதமாக கொடுக்கப்பட்டதால், மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாமல் போனது. அதேபோல அரசுப் பணிகளில் அதிகமான இடங்கள் கம்மா சமூகத் தினருக்குக் கொடுக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. ‘அரசு ஒப்பந்தப் பணிகளையும் கம்மா சமூகத்தினருக்கே ஒதுக்கி, குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆதரவாகச் செயல்பட்டார்’ என்ற குற்றச்சாட்டும் இவர் மீது கிளம்பியது. ஓய்வு பெற்ற தலைமைச் செயலர் கிருஷ்ணா ராவ் ‘குறிப்பிட்ட சமூகம் சார்ந்து செயல்படுகிறார் நாயுடு’ என்று பகிரங்கமாக கருத்து தெரிவித்திருந்ததும் அந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும்விதமாக அமைந்தது.

‘கிங்மேக்கர்’ சந்திரபாபு நாயுடு வீழ்ந்தது எப்படி?

போலாவரம் நதிநீர் இணைப்புத் திட்டத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சில பணி ஒப்பந் தங்களைத் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் சாம்பசிவ ராவுக்கு வழங்கியதும் ஊழலைப் பற்றிய விவாதத்தைப் பெரிதாக்கியது. இதுபோக, மோடி பிரசாரம் மேற்கொண்டபோது போலாவரம், அமராவதி திட்டங்களில் ஊழல்கள் இருப்பதாகக் குற்றச்சாட்டை முன்வைத்தார். சாதி மற்றும் ஊழல் என்ற இரண்டு காரணங்கள் மக்களை நேரடியாகப் பாதித்தன. தவிர, தன்னை மட்டும் எல்லாவற்றிலும் முன்னிலைப்படுத்திக் கொண்டது, தானாக முடிவெடுக்கும் தன்மை, அதிகார மிடுக்கு உள்ளிட்ட எல்லாமே மக்கள் மத்தியில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தின. இப்படி அடுக்கடுக்கான பல குற்றச் சாட்டுகள் ஒன்றாகச் சூழ்ந்து மோசமான தோல்வியை சந்திரபாபு நாயுடுவுக்குக் கொடுத் திருக்கிறது. ஜெகன்மோகன் ரெட்டி தன் தந்தை யைப் போலவே, ‘மக்கள் தீர்மானப் பயணத்தை’ 2017 நவம்பர் 6 - ம் தேதி தொடங்கி 3,648 கி.மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டார். 13 மாவட்டங்களில், 125 சட்டமன்றத் தொகுதிகளில் 430 நாட்கள் நடைபெற்ற இந்தப் பயணம், 2019 ஜனவரி 9-ம் தேதி நிறைவடைந்தது. இது மக்கள் மத்தியில் இவருக்கு நற்பெயரை வாங்கிக் கொடுத்தது. அதுவும் சந்திரபாபு நாயுடுவுக்கு பெரும் சறுக்கலை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா உட்பட கிட்டத்தட்ட 22 தலைவர்களை ஒருங்கிணைத்து கிங்மேக்கர் ஆக நினைத்தவர், சொந்த மாநிலத்திலேயே ஆட்சியைப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறார்.

“ஜெகன்மோகன் ரெட்டி எதையும் சாதிக்க வில்லை. அவரது கட்சிக்கும் எந்த எதிர்காலமும் இல்லை.” - 2011-ம் ஆண்டு புலிவெந்துலாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில், சந்திரபாபு நாயுடு உதிர்த்த வார்த்தைகள்தான் இது. இப்போது அதை அடித்து நொறுக்கி அரியணை ஏறியிருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி!

- துரை.நாகராஜன்