Published:Updated:

`நிச்சயமாக மோடிதான் மீண்டும் பிரதமர்!’ - கிளாம்பாக்கம் கூட்டத்தில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்

`நிச்சயமாக மோடிதான் மீண்டும் பிரதமர்!’ - கிளாம்பாக்கம் கூட்டத்தில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்
`நிச்சயமாக மோடிதான் மீண்டும் பிரதமர்!’ - கிளாம்பாக்கம் கூட்டத்தில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்

`மோடி ஆட்சியில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். 5 ஆண்டுகளில்  சிறுபான்மையினருக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் பாதுகாத்தவர் மோடி'' என்று ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் புகழாரம் சூட்டினர்.

அ.தி.மு.க-வின் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இன்று பிற்பகல் 4 மணி அளவில் சென்னை வந்தார் மோடி. இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், `ஜெயலலிதா, நரேந்திரமோடிக்கு மூத்த சகோதரிபோல. பல்வேறு திட்டங்களுக்கு அவர் உறுதுணையாக இருந்தார். இந்தியத் திருநாட்டின் நன்மைக்குப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் மோடி தான் மீண்டும் பிரதமர். எதிர்க் கட்சிகளைப் பார்த்து கேட்கிறேன், உங்கள் கூட்டணியில் யார் பிரதமர் என்று சொல்ல முடியுமா?. முடியாது. உங்கள் கூட்டணியில் யாரும் தகுதியானவர்கள் இல்லை. யார் பிரதமர் எனச் சொல்ல உங்களுக்குத் தைரியமும் இல்லை.

பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால், மதச்சார்புக்கு ஆபத்து எனக் கூறுவது தவறு. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியத் திருநாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை, இதற்குக் காரணம், பிரதமர் மோடியின் நடவடிக்கைகள்தான். சிறுபான்மை மக்களுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக இருப்பது அ.தி.மு.க தான். இந்தத் தேர்தல், தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல். தர்மத்தைக் காக்க நினைக்கும் தலைவர்கள் எல்லாம் மேடையில் அமர்ந்துள்ளனர். வெற்றியும் நம் பக்கம்தான். நாடாளுமன்றத் தேர்தலிலும், 21 சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி நமதுதான். மீண்டும் மோடியை பிரதமராக அமரவைப்போம்!'' என்றார்.

பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, `நாடே வியக்கும் அளவுக்கு மெகா கூட்டணி அமைத்துள்ளோம். இந்திய நாட்டை ஆளக்கூடிய தகுதியுடைய ஒரே பிரதமர் மோடி தான். நாம் பத்திரமாக, நிம்மதியாக வாழ்கிறோம் என்றால், அதற்குக் காரணம் மோடி தான். அவருடைய தலைமையால்தான் நமக்கு நிம்மதி. அ.தி.மு.க, பா.ம.க, புதியதமிழகம் உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் பா.ஜ.க-வை இதனால்தான் ஆதரிக்கிறோம். அண்டை நாடுகள் நமக்குத் தரும் பிரச்னைகளிலிருந்து தற்காத்துக்கொள்ள, திறமையான ஒரு நபர் வேண்டும். அதனால் தான் மோடியைத் தேர்வுசெய்தோம். நரேந்திர மோடிதான் பிரதமர் என்று மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். 40 ராணுவ வீரர்கள் உயிரிழப்புக்கு உடனடி தீர்வு கண்டவர் மோடி. பயங்கரவாதி முகாம்களை அழித்தவர், நம் மோடி தான். பிரதமர் 5 ஆண்டுக்காலம் உழைத்ததால்தான், உலக நாடுகள் நமக்கு ஆதரவளித்துவருகின்றன.

அபிநந்தன் மீட்கப்பட்டதும் மோடியால் தான். வரலாற்றைப் படைத்தவர் அவர். சட்டம் ஒழுங்கைப் பேணிக் காப்பதில் தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த மாநிலம். 5 ஆண்டுகளில் விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டார். மத்தியில் பா.ஜ.க, தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியால் ஏழை மக்கள் நிம்மதியாக உறங்குகின்றனர். கோதாவரி, காவிரித் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றித் தரவேண்டும். மெட்ரோ ரயில் சேவையை முடித்துத் தரவேண்டும். விவசாயிகளைக் காத்தவர் மோடி. ஏழைக் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் வழங்கப்படும் என்றோம். தேர்தலுக்காகக் கொடுக்கப்படும் தொகை இல்லை. ஏழைகள் நலனுக்காகச் செய்வது தவறா?. எண்ணிப்பாருங்கள். தி.மு.க-வினர் இதைத் தடுக்க சதி செய்கிறார்கள். நானும் ஒரு விவசாயி, பிரதமர் மோடியும் விவசாயி, ராமதாஸ் விவசாயி. இது மக்கள் விரோத ஆட்சியா?. நம் கூட்டணியைக் கண்டு ஏன் பயப்படுகிறார்கள்?. இது மக்களுக்கு சேவைசெய்யும் கூட்டணி' என்றார்.