
ஓவியங்கள்: அரஸ்
தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்துவிட்டாலும் இனி எழமுடியுமா என்கிற அளவுக்குத் தமிழகத்தில் பலத்த அடி வாங்கியிருக்கிறது பி.ஜே.பி. தோல்வியை அடுத்து ‘தமிழகத்துக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை’ என்று கோபம் கொப்பளிக்க சொல்கிறார்கள் அந்தக் கட்சியின் பிரமுகர்கள். அப்படியா ஆகிவிடும் அடுத்த ஐந்தாண்டுகளும்? இந்தக் கேள்விக்கு பதில் தேடுவதற்குக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்க வேண்டியிருக்கிறது.
அண்ணா... கட்டுக்கடங்காத கூட்டத்தையும் தன் பேச்சால் கட்டிப்போடுபவர், எழுத்துக் கூட்டிப் படிப்பவரையும் ஈர்க்கும் எழுத்தாற்றல் கொண்டவர். நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள்தான், அவருக்கான முதல் தேசிய அடையாளம். கருணாநிதியின் காலத்திலும் பல முக்கிய ஆளுமைகள் நாடாளுமன்ற உறுப்பினராகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். முரசொலி மாறன், வைகோ, என்.வி.என்.சோமு, அ.கலாநிதி ஆகியோரை உதாரணமாகச் சொல்லலாம். எம்.ஜி.ஆர் காலத்தில், நாடாளுமன்றம் சென்றவர்களில் ஜெயலலிதா முக்கியமானவர். 1984-ல் நாடாளுமன்றத்தில் ஜெயலலிதா பேசிய உரையைப் பற்றி இன்றும் மேடைகளில் அ.தி.மு.க-வினர் முழங்குவார்கள். ஆனால், அவர் தலைவரான பின்பு, நாடாளுமன்றத்துக்கு அவரால் அனுப்பி வைக்கப்பட்டவர்களின் தகுதியையும் திறமையையும் செயல்பாடுகளையும் ஆய்வுசெய்து பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மலைச்சாமி, தலித் எழில்மலை, மைத்ரேயன் என வெவ்வேறு தளங்களிலிருந்து பலரையும் எம்.பி-யாக்கி அனுப்பினாலும் அவர்களில் யாரும் சுயமாகச் செயல்படவோ, சொந்தமாகப் பேசவோ இல்லை அல்லது ஜெயலலிதா அதை அனுமதிக்கவில்லை. இதனால் நாடாளுமன்றத் தையும் ஜெயலலிதாவின் புகழ்பாடும் மண்டபமாக மாற்றினார்கள் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள். காவிரிப் பிரச்னைக்காக, ‘அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள் வோம்’ என்று நாடாளுமன்றத்தையே அதிரவிட்ட எம்.பி நவநீதகிருஷ்ணன்தான், காஷ்மீர் பிரச்னையின் ஆழத்தைத் துளியும் அறியாமல், ‘காஷ்மீர்... ப்யூட்டிஃபுல் காஷ்மீர்’ என்று எம்.ஜி.ஆர் பாட்டுப்பாடி, கடுப்பைக் கிளப்பினார்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் 37 இடங்களில் வென்று, நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெரும் பெயரைப் பெற்றது அ.தி.மு.க. ஆனால், வழக்கம்போலவே 37 எம்.பி-க்களில் துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரையைத் தவிர வேறு யாரும் நாடாளுமன்றத்தில் பேசியதாகவோ, போராடி தமிழகத்துக்கான திட்டங்களை வாங்கியதாகவோ தகவல் இல்லை. காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு, இலங்கைத் தமிழர் பிரச்னை, நீட் தேர்வு போன்ற விவகாரங்களிலும் கட்சித் தலைமையின் உத்தரவுக்கேற்ப கூடிநின்று கோஷமிட்டார்கள், கூட்டமாக வெளிநடப்பு செய்தார்கள். ஜெயலலிதா மறைந்த பின்பும் இதே நிலையே நீடித்தது.
ஆனால், நிலைமை இனி அப்படி இருக்கப்போவது இல்லை என்று தெரிகிறது. ஏனெனில், இப்போது இருப்பதைப்போல முன் எப்போதும் தமிழகத்தில் எதிர்க் கட்சி எம்.பி-க்கள் இவ்வளவு பலம் வாய்ந்தவர்களாகவும் பன்முகத்தன்மை கொண்டவர்களாகவும் இருந்ததில்லை. இதுகுறித்துப் பேசிய தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் நம்மிடம், ‘‘டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, திருநாவுக்கரசர் ஆகியோர் மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்களாக இருந்தவர்கள். ஜெகத்ரட்சகன், பழனி மாணிக்கம் ஆகியோர் முன்னாள் இணை அமைச்சர்கள். கனிமொழி ஏற்கெனவே ராஜ்யசபாவில் சிறப்பாகப் பணியாற்றியவர். திருமாவளவன், பாரிவேந்தர் இருவரும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள். சு.வெங்கடேசன், தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி, ரவிக்குமார் ஆகியோர் பரந்துபட்ட சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள். நாடாளுமன்ற நடைமுறைகளை நன்கு அறிந்தவர் கார்த்தி சிதம்பரம். காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள பலரும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள். இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இங்கிருந்தே நான்கு எம்.பி-க்கள் தேர்வாகியுள்ளனர்.

அரசியல், சமூகம், பொருளாதாரம், கலை, பண்பாடு, சுற்றுச்சூழல் என எல்லாத் துறைகளிலும் அனுபவம் பெற்றவர்களாக இவர்கள் இருக்கிறார் கள். இவர்களில் பெரும்பாலானோர் ஆங்கிலத்தில் உரையாற்றக் கூடியவர்கள். அதனால், தமிழகத் துக்கான உரிமைகளையும் கோரிக்கைகளையும் வென்றெடுப்பதில் இவர்களின் குரல் நாடாளு மன்றத்தில் தனித்தும் ஓங்கியும் ஒலிக்கும் என்பது நிச்சயம். வரும் ஐந்தாண்டுகளும் தேசிய ஊடகம் அனைத்தின் கவனமும் தமிழக எம்.பி-க்களின் மீதே இருக்கும். அவர்களின் ஒவ்வொரு வார்த்தை யும் நகர்வும் தேசிய அளவில் கவனம் பெறும்’’ என்றார்.
‘பவர்ஃபுல் பார்லிமென்டேரியன்’கள் என்று இவர்களை ஏற்றுக்கொள்ளும் பி.ஜே.பி நிர்வாகி ஒருவர், ‘‘வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு இப்போது தமிழகத்தில் பன்முகத்திறன் படைத்த பலரும் எம்.பி-க்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால், இவர்கள் வழக்கம்போல நீட் தேர்வு, புதிய திட்டங்கள் போன்றவற்றை எதிர்ப்பதிலேயே காலத்தைக் கடத்திவிடாமல், நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். துறைரீதியாக அனுபவம் பெற்றவர்கள் என்ற முறையில், நல்ல ஆலோசனைகளையும் வழங்கலாம். அதைவிடுத்து வெறும் அரசியல் செய்து காலத்தை ஓட்டக் கூடாது!’’ என்றார்.
தமிழகத்தின் குரல் இந்தியாவுக்காக ஒலிக்க வேண்டிய காலகட்டம் இது!
- சேவியர் செல்வகுமார்