அரசியல்
அலசல்
Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

வெஸ்ட் இண்டீஸ் அணிபோல ஆகிவிட்டது தே.மு.தி.க. இருபெரும் கட்சிகளுக்கும் சவால்விட்டுக் கொண்டிருந்த முரசு, இப்போது அடிக்க ஆளில்லாமல் மூலையில் கிடக்கிறது. ‘அவரு இருந்தப்போ என்னமா இருக்கும் தெரியுமா?’ என கேப்டனின் ஃபார்ம் அவுட்டை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் தொண்டர்கள். அதைப் பற்றியெல்லாம் அண்ணியாரே கவலைப்படப் போவதில்லை. நமக்கென்ன? இந்தத் தேர்தலில், சிறப்பாகச் செயல்பட்டு கொஞ்ச நஞ்ச கட்சியையும் காலி செய்த அண்ணியாரும் சுதீஷும் அடுத்து என்ன செய்யலாம்?

ஐடியா அய்யனாரு!

• அடிக்க ஆளே இல்லாவிட்டால், நமக்கு நாமே முரசடித்துக்கொள்ள வேண்டியதுதான். கேப்டன் நியூஸில், ‘தே.மு.தி.க-வின் எதிர்காலமான சுதீஷை உகாண்டா வட்டச் செயலாளர் பிளாக் பேந்தர் நேரில் சந்தித்து அன்பும் ஆசீர்வாதங்களும் கைநிறைய வாங்கிச் சென்றார்’ என்று அவ்வப்போது பிரேக்கிங் நியூஸ் போட்டு விளையாடலாம். அதான் பிரேக்கிங் நியூஸுக்கான மரியாதை போய் பலநாள்கள் ஆச்சே!

• தேர்தலுக்குப் பின் ஏகப்பட்ட கட்சிகள் ஆதரவற்ற பழைய பங்களாபோல ஆகிவிட்டன. அந்தக் கட்சிகளை எல்லாம் ஒன்றுசேர்த்து தே.மு.தி.க தலைமையில் கூட்டணி வைக்கலாம். வேறு யாரும் ஆதரவு தரப்போவதில்லை என்பது வேறு விஷயம். அரிதினும் அரிதாக ஆட்சியையே பிடித்து விட்டாலும் மக்களின் முதல்வராக கேப்டனும் ஆக்டிங் + ஆக்‌ஷன் முதல்வராக பிரேமலதாவும் இருப்பார்கள் என்று அறிவிக்கலாம்.

• கட்சியின் அமைப்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தடி தண்ணீர்போல காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. இப்போதைக்குக் கட்சி வாழ்வது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் மட்டும்தான். எனவே, ட்ரெண்டிங்கில் இருக்க, அண்ணியார் தலைமையில் அடுத்தடுத்து பிரஸ்மீட்கள் நடத்தி அனல் கிளப்பலாம்.

ஐடியா அய்யனாரு!

• மாநில அந்தஸ்தை இழந்துவிட்டது தே.மு.தி.க. எனவே, முரசு சின்னமும் கையைவிட்டுப் போய்விடும். எனவே, வேறென்ன சின்னங்கள் கேட்கலாம் எனப் பட்டியல் போடலாம். சூரியன் உதிர்க்க இலை துளிர்க்கும் ‘காடு சின்னம்’, ஒரே நேரத்தில் இருவரோடு கைகுலுக்கும் ‘ஆளின் சின்னம்’ என நிறைய ஆப்ஷன்கள் இருக்கின்றன!

• இரண்டு பெரிய கட்சிகளிடம் மட்டும் பேசினால்தானே விமர்சனங்கள் வரும்? பேசாமல் இருக்கும் அத்தனை கட்சிகளுடனும் பேரம் பேசத் தொடங்கினால்? வசதியாக இப்போது கேப்டனின் பிள்ளைகளும் களத்தில் இருக்கிறார்கள். ஆளுக்கொரு கட்சியாகப் பிரித்துக்கொண்டு வேலை பார்த்தால் நேரமும் போகும்; அடுத்தத் தேர்தலுக்குள் கூட்டணியும் முடிவாகும்.