அரசியல்
அலசல்
Published:Updated:

சோனியாவுக்கும் சந்திரபாபுவுக்கும் எங்கள் பலம் புரிந்திருக்கும்!

சோனியாவுக்கும் சந்திரபாபுவுக்கும் எங்கள் பலம் புரிந்திருக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
News
சோனியாவுக்கும் சந்திரபாபுவுக்கும் எங்கள் பலம் புரிந்திருக்கும்!

ரோஜா அதிரடி

ட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் இமாலய வெற்றிபெற்று, எதிர்க் கட்சிகளை அலறவிட்டிருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாகியிருக்கும் நடிகை ரோஜா, ஜெகனின் புதிய ஆட்சியில் அமைச்சராகவிருக்கிறார். சினிமா நாயகியாகக் கலக்கிய ரோஜா, தற்போது நகரி தொகுதியின் நாயகி. பரபரப்பான சூழலுக்கு இடையே, பொறுமையாக பதில் அளித்தார் ரோஜா.

“இந்த வெற்றியை எதிர்பார்த்தீர்களா?”

``எங்கள் கட்சிக்கு 130 இடங்கள் கிடைக்கும் என்றுதான் நினைத்தோம். ஆனால், 151 இடங்களில் வென்றிருக்கிறோம். இன்ப அதிர்ச்சி இது.”

சோனியாவுக்கும் சந்திரபாபுவுக்கும் எங்கள் பலம் புரிந்திருக்கும்!

``கட்சியைத் தொடங்கி ஒன்பதே ஆண்டுகளில் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வர் ஆகியிருக்கிறார். இந்த வெற்றி எப்படிச் சாத்தியமானது?”

``ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி ஜெகன் அண்ணாவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால், அவர் ஆந்திரத்தைப் பிரிக்கவிட்டிருக்க மாட்டார். தனிக்கட்சியையும் தொடங்கியிருக்க மாட்டார். மாறாக, வருமானவரித் துறை மூலம் தொந்தரவு கொடுத்தார்கள்; பொய் வழக்குப் போட்டார்கள்; சிறையில் அடைத்தார்கள். அதை எல்லாம் கடந்துவந்தவர், மக்கள் நலனில் மட்டுமே அக்கறைச் செலுத்தினார். மாநிலம் முழுக்க நடைப்பயணம் சென்று, மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்தார். இதுவே எங்கள் வெற்றிக்குக் காரணம். சோனியாவுக்கும் சந்திரபாபுவுக்கும் இப்போது எங்கள் பலம் புரிந்திருக்கும்.”

``சந்திரபாபு நாயுடுவின் தோல்வி எதை உணர்த்துகிறது?”

``சந்திரபாபு நாயுடு இந்த முறை தனித்துப் போட்டியிட்டார். அது பிரச்னை இல்லை. ஆனால், மக்களுடன் எப்போதுமே அவர் கூட்டணி வைக்கவில்லை. மக்கள் மன உணர்வுகளுக்கு எதிராகச் செயல்பட்டார். இப்போது சட்டமன்றத் தேர்தலில் 23 தொகுதிகளிலும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார். இதுதான் அவருடைய உண்மையான பலம். அவருடைய தவறுகளுக்கு மக்கள் கொடுத்த தண்டனை இது.”

``நகரித் தொகுதியில், இரண்டாவது முறையாக வெற்றிப் பெற்றிருக்கிறீர்களே?”

``சந்திரபாபு நாயுடுவின் கோட்டையாகக் கருதப்பட்ட இந்தத் தொகுதியில், என் வெற்றியைத் தடுக்க நாயுடுவின் கட்சி பெரிய பெரிய சதிகளை எல்லாம் செய்தது. அதை இப்போது சொன்னால், அரசியல் காழ்ப்பு உணர்வு என்பார்கள். நாகரிகம் கருதி வெளியே சொல்லவில்லை. அதை எல்லாம் மீறி வெற்றி பெற்றிருக்கிறேன். சொந்தச் செலவில் என் தொகுதி மக்களுக்குச் செய்துவரும் மலிவு விலை உணவகம், குடிநீர் பணிகளால் எனக்கு மக்களின் ஆதரவு அதிகரித்தது. அந்தப் பணிகள் இனியும் தொடரும்.”

சோனியாவுக்கும் சந்திரபாபுவுக்கும் எங்கள் பலம் புரிந்திருக்கும்!

``தற்போதைய வெற்றி குறித்து ஜெகன் மோகன் ரெட்டி என்ன சொன்னார்?”

``தேர்தல் முடிவுகள் வெளியான தருணத்தில், ஜெகன் அண்ணாவைச் சந்தித்து வாழ்த்தினேன். `நம் உழைப்புக்கும் கஷ்டங்களுக்கும் பலன் கிடைத் திருக்கிறது’ என்று நெகிழ்ச்சியாகக் கூறினார். எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது. அவர் கரங்களைப் பற்றி, `நாம் ஜெயித்துவிட்டோம்; மகிழ்ச்சியாக இருங்கள் அண்ணா’ என்று சொன்னேன்.”

``உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவிருக்கிறதே... எதிர்பார்த்தீர்களா?” 

``எந்தப் பொறுப்பையும் எதிர்பார்த்து நான் பணியாற்றுவதில்லை. என் திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பதவி எது வந்தாலும் திறம்படப் பணியாற்றுவேன். அமைச்சர் பொறுப்புக்குரிய மாண்புடன் நல்ல முறையில் செயல்படுவேன்.”

``நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறதே?”

``எங்கள் கட்சியின் வாக்குகளைப் பிரிப்பதுதான் பவன் கல்யாணின் நோக்கம். அவரது கட்சிக்கு மக்களிடம் சிறிதும் செல்வாக்கு இல்லை. அவருக்குச் செல்வாக்குக் கூடியிருப்பதாகப் பொய்ப் பிரசாரங்கள் செய்யப்பட்டன. ஆனால் அவரே, தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வி அடைந்திருக்கிறார். பவனுடைய கட்சி ஒரு சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அவரின் அரசியல் பயணம் முடிவடைந்துவிட்டது.”

``வரும் தேர்தல்களில் உங்கள் கட்சி, தனித்தே களம் காணுமா?”

``கூட்டணி அமைக்கமாட்டோம். எங்கள் தலைவர் ஜெகன்மீது மக்கள் மிகப் பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதைக் காப்பாற்றுவோம். அமராவதியில் புதிய தலைநகரம் அமைக்கும் பணிகளை சந்திரபாபு நாயுடு செய்து முடிக்கவில்லை. இரண்டு லட்சம் கோடிக்கும் மேல் மாநிலத்தின்மீது கடன் சுமையை ஏற்றியிருக்கிறார். இதை எல்லாம் சரிசெய்து, ஆந்திரத்தை முன்னணி மாநிலமாக மாற்றிக் காட்டுவோம்.”

- கு.ஆனந்தராஜ்