Published:Updated:

எடப்பாடிக்கு ஏன் தேவைப்படுகிறது தே.மு.தி.க.?

தனது கூட்டணி பேர குட்டு வெளிப்பட்டுவிட்டதால், தே.மு.தி.க தனித்துவிடப்படும் சூழலை நோக்கி நகர்கிறது.

எடப்பாடிக்கு ஏன் தேவைப்படுகிறது தே.மு.தி.க.?
எடப்பாடிக்கு ஏன் தேவைப்படுகிறது தே.மு.தி.க.?

ணப்பெண்ணை மேடையில் ஏற்றிவிட்டு, ``இவ்வளவு வரதட்சணை கொடுத்தால்தான் மாப்பிள்ளை தாலி கட்டுவார்’’ என மாப்பிள்ளை வீட்டார் நெருக்கடி கொடுப்பதுபோல, அ.தி.மு.க-வினரிடம் கடைசி நேரக் கூட்டணிப் பேரத்தை தே.மு.தி.க நடத்தியுள்ளது. ராஜதந்திரம் என நினைத்து, ஒருபக்கம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் பேசிக்கொண்டே, மறுபக்கம் தி.மு.க பொருளாளர் துரைமுருகனுக்கும் தூது அனுப்பியதால், இப்போது குட்டு வெளிப்பட்டு விழிபிதுங்கியுள்ளது விஜயகாந்த்தின் கட்சி.

செப்டம்பர் 2005-ல் கட்சி ஆரம்பித்தபோதே அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டவர் விஜயகாந்த். 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 232 தொகுதிகளில் போட்டியிட்டு 8.4 சதவிகித வாக்குகளை தே.மு.தி.க பெற்றது. அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் 10.1 சதவிகித வாக்குகளைப் பெற்ற விஜயகாந்த், 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் கைகோத்தார். அந்தத் தேர்தலில் 29.02 லட்சம் வாக்குகளைப் பெற்ற தே.மு.தி.க 29 எம்.எல்.ஏ-க்களுடன் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றது. 

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததில் தொடங்கி, விஜயகாந்த்தின் வாக்குச் சதவிகிதம் சரிவைச் சந்திக்கத் தொடங்கியது. 2014 தேர்தலில் 5.2 சதவிகிதமும் 2016 தேர்தலில் 2.4 சதவிகிதமும் தே.மு.தி.க. பெற்றது. அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்னதாக தே.மு.தி.க. பெற்ற வாக்குச் சதவிகிதத்தில் பாதிக்கும் குறைவாகவே அக்கட்சியால் பிந்நாளில் பெற முடிந்தது.  

தற்போது அ.தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்திவரும் தே.மு.தி.க 7 மக்களவை, 1 மாநிலங்களவை கொடுத்தால் கூட்டணி  என்று `டிமாண்ட்’ செய்கிறது. அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும்விதமாக பி.ஜே.பி-க்கு 5, பா.ம.க-வுக்கு 7, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சிக்கு 1 எனத் தொகுதிப் பங்கீட்டில் அ.தி.மு.க வேகம் காட்டியவுடன் தே.மு.தி.க தரப்பு உஷ்ணமானது. 

விஜயகாந்த்தை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தித்ததை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட தே.மு.தி.க, தி.மு.க-வைக் கைகாட்டி அ.தி.மு.க-வை மிரட்ட ஆரம்பித்தது. ``விஜயகாந்த்தை நலம் விசாரிக்கத்தான் சென்றேன்’’ என ஸ்டாலின் கூறிய அடுத்தநாளே, ``இந்தச் சந்திப்பில் அரசியலும் பேசப்பட்டது’’ என்று விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா போட்டு உடைத்ததற்கான காரணம், அ.தி.மு.க-வுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேரத்தை உயர்த்தத்தான் என்கிறார்கள். இதை, தாமதமாகப் புரிந்துகொண்ட தி.மு.க தரப்பு, விஜயகாந்த்தை உதறிவிட்டு கூட்டணி இறுதிப்பட்டியலை அறிவித்துவிட்டது. 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விஜயகாந்த்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தபோது, கூட்டணி தொடர்பாகவும் சில விஷயங்களைப் பேசினார். ``நீங்கள் எதிர்பார்க்கும் 7 தொகுதிகளை ஒதுக்க முடியாது. 5 மக்களவை, 1 மாநிலங்களவை ஒதுக்கத் தயார்’’ என அவர் உறுதியளித்ததை விஜயகாந்த் குடும்பம் ஏற்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் உடன்படிக்கை கையெழுத்தாகும்போதே 21 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஆதரவுக் கடிதத்திலும் அ.தி.மு.க கையெழுத்து பெறுகிறது. பிரேமலதாவுக்கு இதில் உடன்பாடு இல்லை. குறைந்தது 4 சட்டமன்றத் தொகுதிகளாவது ஒதுக்கினால் மட்டுமே ஆதரவளிக்க முடியும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதால், பேச்சுவார்த்தை இழுபறியாகியுள்ளது.

இப்போது கட்சிகள் அமைத்திருக்கும் கூட்டணி வெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டுமல்ல, எதிர்வரும் 21 சட்டமன்ற இடைத்தேர்தலுக்காகவும்தான். தற்போது இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் சோளிங்கர், ஆம்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, நிலக்கோட்டை, ஓசூர் ஆகிய தொகுதிகளில் சராசரியாக 5 சதவிகித வாக்குகளை 2016 தேர்தலில் தே.மு.தி.க பெற்றுள்ளது. ஒட்டப்பிடாரத்தில் மட்டும் 9 சதம் வாக்குகள் பெற்றுள்ளனர். அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் சராசரியாக 1,500 வாக்குகளையே தே.மு.தி.க பெற்றுள்ளது. 

ஆட்சியைத் தக்கவைக்க குறைந்தபட்சம் 8 எம்.எல்.ஏ-க்கள் அவசியம் என்பதால், இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் தொகுதிகளில், ஒரு தொகுதிக்கு சராசரியாக 7,500 வாக்குகளை மட்டுமே வைத்திருந்தாலும் தே.மு.தி.க-வையும் கைக்குள் கொண்டுவந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். நேற்று பிரதமர் மோடி கலந்துகொண்ட பிரசாரப் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த்தை எப்படியாவது மேடையேற்றிவிட வேண்டும் என்று அ.தி.மு.க துடித்தது. இத்துடிப்பை, கூட்டணிப் பேரத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த தே.மு.தி.க, சமகாலத்தில் தி.மு.க-வுடனும் பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்ய, ஒரே பேட்டியில் துரைமுருகன் தே.மு.தி.க-வின் கூட்டணிப் பேரத்தை உடைத்து நொறுக்கிவிட்டார்.

பிரதமர் வந்து சென்றவுடன் நேற்று நள்ளிரவு 12 மணி வரையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அமைச்சர் தங்கமணியுடன் எல்.கே.சுதீஷ் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தும் முடிவு எட்டப்படவில்லை. ``பா.ம.க-வுக்கு இணையாகத் தொகுதிகள் எதிர்பார்ப்பது நியாயமில்லை’’ என்று சுதீஷிடம் தங்கமணி நேரடியாகவே கூறிவிட்டாராம். 5 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என்பதில் அ.தி.மு.க தெளிவாக இருக்கிறது. அ.தி.மு.க-வுடன் கூட்டணி இணைவதை தே.மு.தி.க கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் விரும்பவில்லையாம். 

2016-ல் தி.மு.க-வுக்குப் போக்குக்காட்டிவிட்டு மக்கள்நலக் கூட்டணியுடன் விஜயகாந்த் இணைந்த சில தினங்களிலேயே, எம்.எல்.ஏ-க்கள் சந்திரமோகன், மேட்டூர் பார்த்திபன், கும்மிடிப்பூண்டி சேகர் ஆகிய மூவரும் கட்சியை உடைத்து, மக்கள் தே.மு.தி.க என்கிற அமைப்பை உருவாக்கினர். அடுத்த 24 மணிநேரத்தில் தி.மு.க-வுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தனர். மீண்டும் அந்தக் காட்சிகள் தே.மு.தி.க-வுக்குள் அரங்கேறுமோ என்கிற பதற்றம் விஜயகாந்த் குடும்பத்துக்குள் உதறலை உருவாக்கியுள்ளதாம்.

வரதட்சணையை உயர்த்துவதாக எண்ணி மாப்பிள்ளை வீட்டார் மிரட்டிக்கொண்டே இருந்தால், ஒருகட்டத்தில் மணப்பெண்ணே மாலையைத் தூக்கி எறிந்துவிட்டுப் போய்விடுவார். தனது கூட்டணிப் பேரக் குட்டு உடைந்துவிட்டதால், அ.தி.மு.க அளிக்கும் தொகுதிகளை மறுபேச்சு இல்லாமல் பெறும் நிலையில் தே.மு.தி.க மாட்டியுள்ளது. விஜயகாந்த் குடும்பம் இறங்கி வரவில்லை எனில், தே.மு.தி.க தனித்து விடப்படும் சூழலே அதிகம்.