
“நான் சாதியைக் கேட்டது ஏன்?” - கிருஷ்ணசாமி விளக்கம்...
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசுவதற்காக, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சமீபத்தில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஒரு செய்தியாளரைப் பார்த்து கிருஷ்ணசாமி, ‘நீ எந்த ஊரு... என்ன சாதி?’ என்று கேட்டது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கிருஷ்ணசாமிக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து கிருஷ்ணசாமியிடம் சில கேள்விகளைக் கேட்டோம்.
“அன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில் நடந்தது என்ன, குறிப்பிட்ட ஒரு செய்தியாளரிடம் ஒருமையில், ‘நீ என்ன சாதி’ என்று கேட்டது ஏன், அது எந்த வகையில் நியாயம்?”
“நாடாளுமன்றத் தேர்தலில், தென்காசி தொகுதியில் எனக்கு வாக்களித்த மக்களுக்கும் பிரசாரம் செய்த கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதற்காகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தேன். அப்போது ஒரு நிருபர், இரண்டு சமூகங்களின் பெயர்களைச் சொல்லி ‘அவர்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?’ என்று கேட்டார். எனக்கு வாக்களித்த அனைத்து சமூக மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும்போது, அவரின் இந்தக் கேள்வி எனக்கு அவர்மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இரு சமூகங்களுக்கு இடையில் பிரிவினையைத் தூண்ட முயற்சி செய்வதுபோலவும் தெரிந்தது. அதனால்தான், அந்த நபரின் ஊர், சாதி ஆகிய தகவல்களைக் கேட்டேன். நிருபரின் கேள்வியே என்னை சாதியைக் கேட்கத் தூண்டியது.’’

“தமிழக நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பற்றி?”
“பிரதமர் மோடியின் நல்லாட்சியை, ‘தமிழக மக்களுக்கு எதிரானது’ என்று பொய்ப் பிரசாரம்செய்து, உணர்ச்சியைத் தூண்டி பெறப்பட்ட வெற்றி இது.”
“அப்படியே இருந்தாலும், மொத்தமாக அல்லவா தோற்றிருக்கிறார்கள்... ‘தமிழக மக்கள் பி.ஜே.பி-யை ஏற்றுக்கொள்ளவில்லை’ என்பதைத்தானே இந்த முடிவுகள் காட்டுகின்றன?”
“மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தவறு. பி.ஜே.பி-யை தமிழக மக்கள் 1998–ம் ஆண்டே ஏற்றுக்கொண்டு விட்டார்கள். இன்று தமிழகத்தில் பி.ஜே.பி-யை எதிர்ப்பதாகச் சொல்பவர்களே, அவர்களுடன் கூட்டுவைத்தவர்கள்தானே?”
“ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு, நீட் தேர்வு ஆகியவற்றால் தமிழகம் பாதிக்கப்படவில்லையா?”
“புதிய திட்டங்கள் வரும்போது சில தற்காலிக பாதிப்புகள் ஏற்படும்தான். ஆனால், அதன் நீண்டகால பலன்களை அரசுதான் மக்களிடம் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். பி.ஜே.பி அதைச் செய்யத் தவறிவிட்டது.”
“புதிய தமிழகம் வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க கூட்டணியில் தொடருமா?”
“கண்டிப்பாகத் தொடரும்.”
- இரா.செந்தில்குமார்
படம்: தே.அசோக்குமார்
சம்பந்தப்பட்ட செய்தியாளர் கோகுலரமணன் நம்மிடம், ‘‘கிருஷ்ணசாமியின் தோல்விக்கான காரணத்தைப் பற்றிதான் கேள்வி கேட்டேன். என்னிடம் ஏன் ஊர் மற்றும் சாதியின் பெயரைக் கேட்டார் எனத் தெரியவில்லை. நான் சாதி சார்ந்த எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை.’’ என்றார்.