அரசியல்
அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

@வடபழனி ஆர்.கே.எஸ்.மகேஷ், சென்னை.
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியைக் குமாரசாமி தக்கவைப்பாரா?


அமித் ஷா கொஞ்சம் பிஸி!  

வி.சண்முகம், திருவாரூர்.
அ.தி.மு.க கூட்டணியில், ஒவ்வொரு கட்சியுமே உள்குத்து வேலைகள் செய்ததுதான் தோல்விக்குக் காரணமா?


ஒரேயடியாக அப்படிச் சொல்லிவிட முடியாது. ஓரிரு தொகுதிகளின் தோல்விக்கு அதுவும் கூடுதல் காரணம் என்று சொல்லலாம். தர்மபுரி, சேலம், திருப்பூர், கோவை, சிதம்பரம், மதுரை, விருதுநகர் ஆகிய ஏழு தொகுதிகளில் மட்டுமே தி.மு.க தவிர்த்த மற்ற அனைத்துக்கட்சி/சுயேச்சைகள் வாக்குகளைக் கூட்டினால், தி.மு.க கூட்டணியை வீழ்த்த வாய்ப்பு இருக்கிறது. புதுச்சேரியையும் சேர்த்து தி.மு.க கூட்டணி வெற்றிபெற்ற மற்ற 31 தொகுதிகளிலும் வீழ்த்தவே முடியாத அளவுக்கான வாக்குகள் கிடைத்துள்ளன. மற்றபடி இடைத்தேர்தல் நடை பெற்ற மானாமதுரை, பாப்பிரெட்டிபட்டி, அரூர் என்று சில தொகுதிகளில் நடைபெற்ற உள்குத்துகள் வெளிப்படையாகவே தெரிகின்றன.

@கி.ரவிக்குமார், நெய்வேலி.
‘ரஜினிகாந்த் இன்னொரு எம்.ஜி.ஆராக உருவெடுப்பார்’ என்கிறாரே, பத்திரிகையாளர் குருமுர்த்தி?


ஓ... இனிமேதானா? 

கழுகார் பதில்கள்!

@அ.குணசேகரன், புவனகிரி-1.
உடனடியாகத் தமிழக மக்களைத் திருப்தி செய்ய பி.ஜே.பி என்ன செய்ய வேண்டும்?


ஆளுக்கு ரூ.15 லட்சத்தை அக்கவுன்ட்டில் போட்டுவிடவேண்டும். சந்தோஷம்தானே?

மு.மதிவாணன், காஞ்சிபுரம்.
‘காங்கிரஸின் தோல்விக்குக் காரணம் வாரிசு அரசியல்’ என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாரே?


இந்தத் தேர்தல் முடிவுகள் கொடுத்த படிப்பினை?!

@மல்லிகா குரு, மேற்கு மாம்பலம், சென்னை-33.
கமலுக்கு மக்கள் மத்தியில் ஓரளவு ஆதரவு இருக்கிறது. இனி, அவர் என்ன செய்யவேண்டும்?


அவருடைய டார்ச் லைட்டின் வெளிச்சம் இன்னும் ஆழமாக, அகலமாக ஊடுருவ வேண்டும். அதற்கு அவர் எது தனது கொள்கை, எது தனது இலக்கு என்பதில் தீர்க்கமாக இருக்க வேண்டும்.

கழுகார் பதில்கள்!

தே.ஞானபிரகாஷ், தொம்பக்குளம்.
நாடாளுமன்றத் மக்களின் மனநிலை எதைப் பிரதிபலிக்கிறது?


பணநிலையையும் மிஞ்சியது மனநிலை என்பதைக் காட்டுகிறது. இந்தியாவில் மிகுதியான இடங்களில் பணத்தால் தேர்தல் முடிவுகள் ஏற்படவில்லை என்பதே ஆறுதலான விஷயம்.

‘காட்டாவூர்’ இலக்கியன், செங்குன்றம்.
இந்தத் தேர்தலில் கழுகாரை ஆச்சர்யப்படுத்தியது, நெகிழ வைத்தது மற்றும் சிந்திக்க வைத்தது என்னவென்று சொல்லுங்களேன்?


ஆச்சர்யம் - தர்மபுரி, நெகிழ்ச்சி - பொள்ளாச்சி, சிந்தனை - தேனி.

@ காந்தி, திருச்சி.
பி.ஜே.பி-யின் வெற்றிக்கு ‘இந்துத்துவா பிரசாரமே காரணம்’ என்று சுப்பிரமணியன் சுவாமி கூறுகிறாரே?


எப்போதுமே குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பார். இப்போது தெளிந்த குட்டையிலும் மீன் பிடிக்கப் பார்க்கிறார் சுவாமி. அவருடைய இலக்கு என்ன என்பது அந்த நமோவுக்குத்தான் வெளிச்சம்.

என்.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.
அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி போன்ற பேச்சாளர்கள்போல இப்போது யாரும் இல்லையே?


நீங்கள் ஆரம்பித்த வரிசை, ‘சொல்லின் செல்வர்’ ஈ.வி.கே சம்பத், நாஞ்சில் மனோகரன், கா.காளிமுத்து என்று இன்னும் கொஞ்சம் நீளமானது. இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. அன்று, படித்தவர்கள் குறைவு என்பதால், இவர்களுடைய ஆளுமையும் தேவையும் அதிகமாகவே இருந்தது. அதனால், ஒவ்வொருவரையும் கொண்டாடினார்கள். இன்று, படித்தவர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. அதனால், நன்கு பேசுபவர்களின் எண்ணிக்கையும் பெருகித்தான் இருக்கிறது. என்ன, தனித்தனியாகத் தூக்கிவைத்துக் கொண்டாடுவதில்லை, அவ்வளவுதான்.

@மா.உலகநாதன், திருநீலக்குடி.
சர்ச்சைகளை உருவாக்குவது ஒரு விளம்பர உத்தியோ?

காலாட்டிக்கொண்டே தூங்கவேண்டும். இல்லை என்றால் அடக்கம் செய்வதற்கான வேலையை ஆரம்பித்துவிடுவார்களே! 

@சி. கார்த்திகேயன், சாத்தூர்.
‘தன்னைச் சுற்றிலும் வில்லன் கேரக்டர்களாக வைத்துக்கொண்டு, தான் மட்டும் க்ளீன் இமேஜ் கேரக்டர்களில் நடித்திருக்கிறார்’ என்று எம்.ஜி.ஆரைப் பற்றி சொல்லப்படுவது உண்மைதானா?


உண்மைதான். ஒன்றிரண்டு படங்களில் மட்டும் கொஞ்சம்போல வில்லத்தனமான கேரக்டர்களிலும் நடித்துள்ளார். அவற்றிலும்கூட இமேஜ் பெரிதாக டேமேஜ் ஆகாமல்தான் பார்த்துக்கொண்டார். இதுதான் அவருடைய ப்ளஸ். அதாவது, சுற்றிலும் வில்லன்களால் சூழப்பட்ட மக்கள், ‘இதிலிருந்து விடுதலையே இல்லையா’ என்று ஏங்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அவர் நடித்தார். ‘நம்மால் திருப்பி அடிக்க முடியாத கூட்டத்தை அவர் அடிக்கிறார்’ என்று மக்கள் சிந்தித்த வேளையில் உயர ஆரம்பித்தது அவருடைய இமேஜ்! இன்றைய நாயகர்கள் பலரும் அவருடைய பாதையில்தான் பயணிக்கின்றனர். ஆனால், அன்றுபோல் இன்று இல்லை... மக்களின் தேவை!

கழுகார் பதில்கள்!

தாமஸ் மனோகரன், புதுச்சேரி.
மோடியின் பலம், பலவீனம் இரண்டும் அவருக்குத் தெரியுமா?


நிச்சயமாகத் தெரியும். இல்லையென்றால், நம்மிடம் எல்லாம் குப்பை கொட்ட முடியுமா?

@சு.சேகர், சென்னை-116.
‘தமிழ் அன்னை சிலையை, இத்தாலிய அன்னை சிலையொன்றின் மாதிரியை வைத்து வடிவமைக்கப்போகிறது தமிழக அரசு’ என்கிறதே ஜூ.வி செய்தி?


ஒருவேளை மத்தியில் பி.ஜே.பி ஜெயிக்காமல் போனாலும் போகலாம். எதற்கும் இருக்கட்டும் என்று ‘இத்தாலி அன்னை’க்கு மரியாதை கொடுத்திருப்பார்களோ!

@பார்த்தசாரதி, திருப்பூர்.
மீண்டும் தமிழகத்தை சினிமா ஆளுமா?


எப்போதுமே சினிமாதான் தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கிறது.

@ஜெ.மாணிக்கவாசகம், இடைப்பாடி.
இனிவரும் காலங்களில் வாக்காளர் ஒவ்வொருவருக்கும் இவ்வளவு பணம் தரவேண்டும் என்று தேர்தல் ஆணையமே அரசியல் கட்சிகளுக்கு உத்தரவு பிறப்பித்தால்?


அப்படியே ஸ்பெஷல் வாக்காளர், சாதா வாக்காளர் என்றெல்லாம் கூட தரம் பிரித்து வழங்கவும் உத்தர விட்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும்.

கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி.
‘சட்டசபைக்குள் காலணிகளை அணிந்து செல்லக்கூடாது’ என்று நிபந்தனை விதிக்க வேண்டும் என்கிறேன். இது சரிதானா?

சமீபத்தில் அப்படி எந்த நிகழ்வும் நடந்து விடவில்லை. என்றா லும், சட்டசபை என்பது மக்கள் என்னும் தெய்வங் களுக்கான கோயிலே. அந்த வகையில் உங்களின் ஆலோசனை யைப் பரிசீலிக்கலாம் என்றே தோன்றுகிறது!

@‘பரங்கிப்பேட்டை’ ஹம்துன் அப்பாஸ், சிங்கப்பூர்.
அதீத நம்பிக்கை தேர்தல் அரசியலுக்கு நல்லதா?


சந்திரபாபு நாயுடு, ராகுல் காந்தி, டி.டி.வி தினகரன், சந்திரசேகர ராவ், மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோரிடம் கேட்டுச் சொல்கிறேன்.

@சுந்தரம் மனோகரன்
ஆசிரியர்களுக்குக் குறைந்த சம்பளமே கொடுக்கும் பெரும்பாலான தனியார் பள்ளிகள், ‘அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கொடுக்கிறோம்’ என்று அரசாங்கத்தை ஏமாற்றி, கூடுதல் கல்விக் கட்டணம் பெற்று பெற்றோர்களைச் சுரண்டுகின்றன. இதற்கு விடிவே இல்லையா?


அரசாங்கத்தை ஏமாற்றி என்று சொல்லாதீர்கள். அரசாங்கத்தில் கோலோச்சுபவர்களையும் பங்காளிகளாகச் சேர்த்துக்கொண்டேதான் சுரண்டுகின்றன. பிறகு எப்படி விடிவு வரும்?

@பொன்விழி, அன்னூர்.
எடப்பாடி பழனிசாமி, தினகரன் இருவரிடமிருந்தும் ‘எங்கள் கனவில் அம்மா ஜெயலலிதா வந்தார். கட்சியை ஒன்றுசேர்க்கச் சொன்னார். அதனால் இணைந்தோம்’ என்று ஒரு கூட்டு அறிக்கை விரைவில் வருமா?


இப்போதைய ஆட்சி உடனடியாகக் கவிழ்ந்தாலோ அல்லது சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கினாலோ எதிர்பார்க்கலாம்.

கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!