
ராகுலை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை! - புதுச்சேரி முதல்வர் உருக்கம்
தேசிய அளவில் காங்கிரஸ் சந்தித்த பின்னடைவால் வருத்தத்தில் இருக்கிறார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை அவர். புதுச்சேரியில் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் பெற்ற வெற்றியைக் கூறி, தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். டெல்லி காரியக் கமிட்டிக் கூட்டத்தில் கலந்துகொண்டு, புதுச்சேரி திரும்பிய நாராயணசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.
“புதுச்சேரியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பதைப் பற்றி?”
“பிரதமராக ராகுல் காந்தி வரவேண்டுமா, மோடி வரவேண்டுமா என்று நாங்கள் முன்வைத்த கேள்வியாலும் நிறைவேற்றிய வளர்ச்சித் திட்டங்களாலும் மக்கள் கொடுத்த வெற்றி இது. அதேபோல மத்திய அரசு நிதி தர மறுத்தது, நலத்திட்டங்களைத் துணை நிலை கவர்னர் கிரண் பேடி முடக்கியது, கவர்னர் மாளிகை முன் ஆறு நாள்கள் இரவு பகலாக நாங்கள் போராட்டம் நடத்தியது... இவை எல்லாம் எங்கள் வெற்றிக்கான காரணங்கள்.”

“இரண்டாவது முறையாக மத்தியில் பி.ஜே.பி தனிப்பெரும்பான்மை யுடன் ஆட்சி அமைக்கிறது. இது காங்கிரஸுக்குப் பின்னடைவை ஏற்படுத்துமா?”
“பி.ஜே.பி-யின் வெற்றி காங்கிரஸுக்கு அதிர்ச்சிதான். ஆனாலும் சோதனைகள் எங்களுக்குப் புதிதல்ல. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டவர்கள் கட்சித் தலைவர்களாக இருந்தபோதும் பல சோதனையான கட்டங்களைக் காங்கிரஸ் சந்தித்துள்ளது. அவற்றைக் கடந்து மீண்டும் வெற்றிபெற்றிருக்கிறோம். தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மீண்டும் ஆட்சியில் அமர்வோம்.”
“பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ரஃபேல் ஊழல் என்று காங்கிரஸ் முன்வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தாண்டியும் பி.ஜே.பி வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ்மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்களா?”
“தென் மாநிலங்களில் எங்கள் பிரசாரத்துக்கு ஓரளவு பலன் கிடைத்தது. ஆனால், வட மாநிலங்களில் புல்வாமா தாக்குதல், சர்ஜிகல் ஸ்ட்ரைக் மற்றும் மத உணர்வுகளைத் தூண்டி மக்களைத் திசை திருப்பிவிட்டது பி.ஜே.பி. அதேசமயம் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து சொல்லவும் கடமைப்பட்டிருக்கிறோம். இனியாவது, மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.”
“சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் என காங்கிரஸ் ஆட்சிசெய்யும் மாநிலங்களில்கூட சொல்லிக்கொள்ளும்படியான வாக்குகளைப் பெறவில்லையே?”
“சீதாராம் கேசரி தலைவராக இருந்தபோது காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. அதன் பிறகு இருமுறை நாங்கள் ஆட்சி அமைத்தோம். அரசியலில் வெற்றி தோல்வி சகஜம். இருப்பினும் தோல்வி குறித்து ஆய்வுசெய்து வருகிறோம்.”
“மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு, பி.ஜே.பி முயற்சி செய்வதாகத் தகவல் வெளியாகியிருக்கிறதே?”
“பி.ஜே.பி-யைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். அருணாசலப் பிரதேசம், உத்தரகாண்டில் ஆட்சியைக் கலைத்தார்கள். மணிப்பூரில் எங்களுக்கு மெஜாரிட்டி இருந்தும் ஆட்சியை மாற்றினார்கள். கோவாவிலும் அப்படியே. தற்போது மம்தாவை இலக்காக வைத்து, அவர் கட்சி எம்.எல்.ஏ-க்களை இழுக்கும் வேலையைச் செய்துவருகிறார்கள். இது நாகரிகமான அரசியல் கிடையாது.”

“தேர்தல் தோல்வியால் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை மோடி அரசு புறக்கணிக்குமா?”
“எட்டு வழிச்சாலை, மீத்தேன் எடுக்க அனுமதி, மீனவர்களுக்கு எதிரான பிரச்னை, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யாதது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காதது, நீட் தேர்வு எனத் தொடர்ச்சியாக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால்தான் இந்தத் தேர்தலில் மக்கள் அவர்களைப் புறக்கணித்திருக்கிறார்கள். இதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.”
“தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக ராகுல் காந்தி கூறியிருக்கிறாரே?”
“ஆனால், அவரைவிட்டால் எங்கள் கட்சிக்கு வேறு வழி இல்லை; வேறு தலைவரும் இல்லை. அவர் இருந்தால்தான் காங்கிரஸ் கட்சி உயிரோட்டத்துடன் இருக்கும். அதனால் தலைமைப் பொறுப்பில் அவர்தான் தொடர வேண்டும்.”
“மூன்று ஆண்டுகள் நிறைவு செய்திருக்கும் துணை நிலை கவர்னர் கிரண் பேடி, உங்களுக்கும் அமைச்சர்களுக்கும் நன்றி கூறியிருக்கிறாரே? புதுச்சேரியைவிட்டுக் கிளம்ப முடிவு எடுத்துவிட்டாரா?”
“அது எனக்குத் தெரியாது. அவர் எங்களுக்குக் கூறிய நன்றிக்கு நன்றி.”
“புதுச்சேரிக்குத் தனி மாநில அந்தஸ்தைப் பெற்றுத் தருவோம் என்கிற வாக்குறுதியுடன் தேர்தலைச் சந்தித்து வெற்றிபெற்றீர்கள். ஆனால், மத்தியில் மீண்டும் பி.ஜே.பி வந்துவிட்டதே?”
“புதுச்சேரிக்குத் தனி மாநில அந்தஸ்து என்கிற கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். பிரதமரை நேரில் சந்தித்து அதுகுறித்து வலியுறுத்துவோம்.”
- ஜெ.முருகன்
படம்: எஸ்.தேவராஜன்