

சென்னை: 'அம்மா தான் அடுத்த பிரதமர்' என மேடை தோறும் முழங்கி வரும் அ.தி.மு.க.வினரின் ரகசியத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார் மாநகராட்சி கணக்கு தணிக்கை நிலைக்குழு தலைவர் எம்.பி.முனுசாமி.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புகளுக்கு முன்பே ‘அம்மா தான் அடுத்த பிரதமர்’ என்று அதிரடியாக மேடைதோறும் முழங்கி வருகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். நீலாங்கரையில் நடந்த பட்ஜெட் விளக்க கூட்டத்திலும் அதே பிரச்சாரம்தான். அதுவும் சென்னை மாநகராட்சி கணக்கு தணிக்கை நிலைக்குழு தலைவரும், 192வது வார்டு கவுன்சிலருமான எம்.சி.முனுசாமி பேசியதுதான் ஹைலைட்!
‘‘ஐக்கிய நாடுகள் சபையில் 214 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் அமெரிக்கா, ரஷ்யா, சைனா, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய ஐந்து நாடுகளும் 'வீட்டோ பவர்' எனப்படும் சிறப்பு அதிகாரம் கொண்டுள்ளன. பரப்பளவில் குறைந்த இங்கிலாந்து, பிரான்சு நாடுகள் கூட இதில் இருக்கும்போது, இந்தியாவுக்கு இந்த சிறப்பு அதிகாரம் கிடைக்காததன் காரணம் ஒரு பலமான பிரதமர் இல்லாததுதான். இந்தியா வல்லரசாக மாற வேண்டுமானால் அம்மா பிரதமரானால் மட்டுமே சாத்தியம்.
சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகளாகியும் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஒருவரும் பிரதமராக வந்ததில்லை. பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள்கூட பிரதமராக இருந்திருக்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராகும் சாதனையையும் அம்மா தான் நிகழ்த்தி காட்ட இருக்கிறார். தமிழ், ஆங்கிலம் உள்பட 8 மொழிகள் தெரிந்த அம்மாவுக்கு இந்தியாவை நிர்வகிப்பதில் எவ்வித மொழிச்சிக்கலும் இருக்காது.

அண்டை நாடுகள் இந்தியாவுக்குள் ஊடுருவி தேவையற்ற பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் இலங்கையில் சிங்கள அரசு தமிழர்களை வேதனைப்படுத்தியதோடு, தமிழக மீனவர்களையும் தற்போது அடித்து வருகின்றனர். இதையெல்லாம் தட்டிக் கேட்கும் தைரியமில்லாத பிரதமராகத்தான் மன்மோகன் சிங் இருக்கிறார். அம்மா பிரதமரானால் இந்தப் பிரச்னைகளை எல்லாம் தவிடுபொடியாக்கி விடுவார்.
##~~## |
-எம்.செய்யது முகம்மது ஆசாத்