Published:Updated:

`தே.மு.தி.க-வை ஏன் பயன்படுத்திக் கொண்டார்?’ - துரைமுருகனுக்குக் காத்திருக்கும் 2 சவால்கள் 

`தே.மு.தி.க-வை ஏன் பயன்படுத்திக் கொண்டார்?’ - துரைமுருகனுக்குக் காத்திருக்கும் 2 சவால்கள் 
`தே.மு.தி.க-வை ஏன் பயன்படுத்திக் கொண்டார்?’ - துரைமுருகனுக்குக் காத்திருக்கும் 2 சவால்கள் 

`நம்ம மாவட்டத்துக்காரர் என்ற அடிப்படையில்தான் அவரைச் சந்திக்கச் சென்றோம். இப்படி வெளிப்படுத்துவார் என நினைக்கவில்லை. இதற்கு முன்பு உதயநிதியிடமும் சபரீசனிடமும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினோம். அதைப் பற்றியெல்லாம் அவர்கள் வெளியில் சொன்னார்களா?'

தே.மு.தி.க நிர்வாகிகள் தன்னை சந்திக்க வந்த தகவலை மீடியாக்களிடம் துரைமுருகன் வெளிப்படுத்தியதை பிரேமலதா எதிர்பார்க்கவில்லை. `சபரீசனையும் உதயநிதியையும் தொடர்பு கொண்டும் பேச முடியாததால்தான் துரைமுருகனை சந்திக்கச் சென்றோம். அதை வெளியில் சொல்வார் என எதிர்பார்க்கவில்லை' என ஆதங்கப்படுகின்றனர் தே.மு.தி.க வட்டாரத்தில். 

விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூரில் `முற்றுப்புள்ளி வைக்கும் பேரணி' என்ற தலைப்பில், தி.மு.க-வின் தென்மண்டல மாநாடு நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் கிளாம்பாக்கத்தில் அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்ட மாநாடு நடைபெற்ற அதேநேரத்தில் விருதுநகரில் கூட்டத்தை நடத்தினார் ஸ்டாலின். இந்தக் கூட்டத்துக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பொதுச் செயலாளர் அன்பழகன் கலந்து கொள்ளவில்லை. பொருளாளர் துரைமுருகனும் பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, நேரு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர். இத்தனைக்கும் நேற்று சென்னையில்தான் இருந்தார் துரைமுருகன். ``உடல்நலமில்லாத காரணத்தால் செல்லவில்லை என துரைமுருகன் தரப்பில் உள்ளவர்கள் கூறினாலும், கட்சித் தலைமையோடு கொஞ்சம் மனவருத்தத்தில் இருக்கிறார். அதனை வெளிக்காட்ட முடியாமல் அமைதியாக இருக்கிறார்" என விவரித்த தி.மு.க நிர்வாகிகள் சிலர், 

``கடந்த 10 ஆண்டுகளாக தன்னுடைய மகன் கதிர் ஆனந்த்துக்கு சீட் கேட்டு போராடி வந்தார் துரைமுருகன். இந்த முறை சீட் கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார் ஸ்டாலின். அதேநேரம், இந்தக் கூட்டணிக்குள் பா.ம.க வர வேண்டும் எனவும் விரும்பினார் துரைமுருகன். வன்னிய சமூக வாக்குகளை முழுமையாக அறுவடை செய்வதற்காகத்தான் இந்த முயற்சியை அவர் முன்னெடுத்தார். ஆனால், பா.ம.க முன்வைத்த டிமாண்டுகளை ஏற்றுக் கொள்ள ஸ்டாலின் மறுத்துவிட்டார். இதனை துரைமுருகன் எதிர்பார்க்கவில்லை. `நானும் ஜெகத்தும் சென்றிருந்தால் பா.ம.க வருகையை உறுதி செய்திருப்போம்' என ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். இப்போது அவருக்கு 2 சவால்கள் காத்திருக்கின்றன. ஒன்று வேலூரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போகும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம். இரண்டாவது, துரைமுருகனுக்கு எதிராக வேலூரில் களவேலை செய்வதற்குக் காத்திருக்கும் மனிதநேய மக்கள் கட்சி. தொகுதியில் பெருமளவு பணத்தைச் செலவு செய்து தேர்தலை சந்திக்க இருக்கிறார் சண்முகம். 

அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் செலவு செய்தால்தான், தன்னுடைய மகன் வெற்றி பெற முடியும் என நினைக்கிறார். இதற்காக தி.மு.க தலைமையிடம் நிதி கேட்டிருக்கிறார். இதற்குப் பதில் அளித்த ஸ்டாலின், ` நம்முடைய நிலைமைதான் உங்களுக்குத் தெரியுமே... பிறகு எப்படி நிதி தர முடியும்?' என மறுத்துவிட்டார். இந்த அதிருப்தியை வெளிக்காட்டும் வகையில்தான் விருதுநகர் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை" என்கின்றனர் விரிவாக. 

`விருதுநகர் கூட்டத்தில் துரைமுருகன் ஏன் பங்கேற்கவில்லை?' என்ற அறிவாலய நிர்வாகிகளிடம் கேட்டோம். ``தென்மண்டல மாநாடு என்ற பெயரில் பிரசாரக் கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தென்மண்டலத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தலைமையின் குட்புக்கில்தான் இருக்கிறார் துரைமுருகன். அவர் அதிருப்தியோடு இருக்கிறார் என்பது உண்மையல்ல. சில விஷயங்களில் மனக்கசப்பு ஏற்பட்டாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருப்பதுதான் அவருடைய குணம். தவிர, உடல்நலன் சரியில்லாததால் நேற்று ஓய்வில் இருந்தார். தலைமையோடு முரண்டு பிடித்தால் எதையும் சாதிக்க முடியாது என்ற உண்மையையும் அவர் அறிவார்" என்கின்றனர் இயல்பாக.

துரைமுருகனின் நேற்றைய செயல்பாடுகளால் அதிகம் நொந்து போய் இருப்பது தே.மு.தி.க-தான். "நம்ம மாவட்டத்துக்காரர் என்ற அடிப்படையில்தான் அவரைச் சந்திக்கச் சென்றோம். இப்படி வெளிப்படுத்துவார் என நினைக்கவில்லை. இதற்கு முன்பு உதயநிதியிடமும் சபரீசனிடமும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினோம். அதைப் பற்றியெல்லாம் அவர்கள் வெளியில் சொன்னார்களா?" என சுதீஷ் தரப்பில் நொந்து போய் புலம்பியுள்ளனர். இதுதொடர்பாக, துரைமுருகனை சந்திக்கச் சென்ற தே.மு.தி.க காஞ்சிபுரம் வடக்கு மா.செ அனகை முருகேசனிடம் பேசினோம். ``சார்... நான் ஒரு மீட்டிங்கில் இருக்கிறேன். இதைப் பற்றிப் பிறகு பேசுகிறேன்" என்றதோடு முடித்துக் கொண்டார். 

அடுத்த கட்டுரைக்கு