Published:Updated:

`தேர்தல் நேரத்தில் ராமதாஸ் பற்றிய புத்தகம் வெளியிடுவோம்!'- புகழேந்தி தகவல்

`தேர்தல் நேரத்தில் ராமதாஸ் பற்றிய புத்தகம் வெளியிடுவோம்!'- புகழேந்தி தகவல்
`தேர்தல் நேரத்தில் ராமதாஸ் பற்றிய புத்தகம் வெளியிடுவோம்!'- புகழேந்தி தகவல்

``அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதற்காக பா.ம.க-வுக்கு பணம் கைமாறியுள்ளது. இதில், தே.மு.தி.க-விற்கான பேரம் இன்னும் படியவில்லை. உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா நிரபராதி எனத் தீர்ப்பளித்த பிறகும், பா.ம.க-வினர் கர்நாடக அரசிடம் மனு கொடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவைத்து, ஜெயலலிதாவிற்கு மன  உளைச்சலை ஏற்படுத்தி, தண்டனையும் வாங்கிக் கொடுத்தார்கள். அவர்களுடன் அ.தி.மு.க-வினர் கூட்டணி வைத்துள்ளனர். இதுகுறித்து தேர்தல் நேரத்தில் ராமதாஸைப் பற்றி புத்தகம் வெளியிடுவோம்'' என தஞ்சாவூரில் புகழேந்தி தெரிவித்தார்.

தஞ்சாவூரில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் தொடர் விழா என்கிற பெயரில் சிறப்புப் பட்டிமன்றம்  நடைபெற்றது. `அம்மா வழியில் கழகத்தைக் காப்பது, தினகரனின் ஆற்றல் மிகு பேச்சுக்களே, அதிரடி முடிவுகளே' என்கிற தலைப்பில் நடைபெற்ற இந்தப் பட்டிமன்றத்தில், அ.ம.மு.க-வின் கர்நாடக மாநில பொதுச்செயலாளர் புகழேந்தி, நடிகர் ரஞ்சித், சி.ஆர்.சரஸ்வதி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய அனைவரும் தினகரனைப் புகழ்ந்து பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, `ஜெயலலிதா இருக்கும்போது, கடந்த  நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற 37 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்கு, வேட்பாளர் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. தேர்தல் அறிவித்தவுடன் போட்டியிடுபவர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்படும். அ.தி.மு.க கூட்டணியில் பணம் அதிக அளவுக்கு விளையாடுகிறது. கூட்டணிக்காக பா.ம.க-விற்கு பணம் கை மாறியது. இன்னும் தே.மு.தி.க-விற்கு  பேரம் முடியவில்லை. தேர்தலுக்குப் பின்னால் ஸ்லீப்பர் செல்கள் தங்களது பணியைச் செய்வார்கள். ஏற்கெனவே, உயர் நீதிமன்றம் குக்கர் சின்னத்தை  எங்களுக்கு கொடுக்கச் சொல்லிவிட்டது. இப்போது, அதில் எந்தப் பிரச்னையும் இல்லை.

உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா நிரபராதி எனத் தீர்ப்பளித்த பிறகும் பா.ம.க தான் ராமதாஸ் கூறியபடி கர்நாடக அரசிடம் மனு கொடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதில், ஜெயலலிதாவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதோடு தண்டனையும் வாங்கிக் கொடுத்தவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்கள் அ.தி.மு.க-வினர். இதுகுறித்து தேர்தல் நேரத்தில் புத்தகமாக வெளியிடப்படும். இருட்டில் தனியாகச் செல்பவர்கள் எப்படி வெளிச்சத்திற்கு வருவதற்கு டார்ச் லைட்டைத் தேடுவார்களோ, அதுபோல தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கூட்டணிக்காக துணையைத் தேடி அலைகின்றன. இந்தத் தேர்தலை துணிச்சலாகச் சந்திப்பது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்தான்'' என்றார்.