Published:Updated:

``அமைச்சர் எம்.சி.சம்பத் வளர்ச்சிப் பணிகளைத் தடுக்கிறார்!" - குற்றஞ்சாட்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.

``அமைச்சர் எம்.சி.சம்பத் வளர்ச்சிப் பணிகளைத் தடுக்கிறார்!" - குற்றஞ்சாட்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.
``அமைச்சர் எம்.சி.சம்பத் வளர்ச்சிப் பணிகளைத் தடுக்கிறார்!" - குற்றஞ்சாட்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.

தேர்தல் நேரத்தில் மற்ற கட்சியினர் அனைவரும் எப்படி வாக்குகளைப் பெறுவது என ஆலோசனை நடத்திவரும் நிலையில். ஆளும் கட்சியினர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பண்ருட்டி பகுதியில் பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

``கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத், பண்ருட்டி தொகுதி வளர்ச்சிப் பணிகளைச் செய்யவிடாமல் தடுக்கிறார்" எனப்  பகிரங்கமாக பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். 

கடலூரில் அமைச்சரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.சி.சம்பத் தனியாகவும், மேற்கு மாவட்டச் செயலாளரும், எம்.பி-யுமான அருண்மொழித்தேவன் தலைமையில் எம்.எல்.ஏ-க்கள் சிதம்பரம் பாண்டியன், காட்டுமன்னார்கோயில் முருகுமாறன், பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம் ஆகியோர் ஓர் அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை இலைமறைகாயாக இருந்த இந்தக் கோஷ்டிப் பூசல், அவர் மறைவுக்குப் பிறகு வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த நிலையில், பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.சத்யா பன்னீர்செல்வம், அமைச்சர் எம்.சி.சம்பத் மீது பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவரிடம் பேசினோம். ``தொகுதி மக்களுக்கு நான் செய்து வரும் நலத்திட்டங்களால் எனக்குப் பெருகி வரும் ஆதரவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் மணல் குவாரியை, நான் நடத்துவதாகப் பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இது, அரசு மணல் குவாரி. `மணல் குவாரியை இப்பகுதி மக்கள் விரும்பவில்லை எனவும், இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கும் எனவும், வேறு இடத்தில் மணல் குவாரி அமைக்க வேண்டும்' எனவும் முதல்வரை நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளேன். ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினர் என்றுகூடப் பாராமல் என்னைச் சிறுமைப்படுத்த வேண்டும்; எனக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அதிகாரம் உள்ளவரின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றனர். என் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தென் பெண்ணை ஆற்றில் மேல்குமாரமங்கலம் கிராமத்தையும், விழுப்புரம் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தையும் இணைக்கும் உயர்மட்ட பாலம் அமைக்க நிதி ஒதுக்கி,  அதன் பூமி பூஜை விழாவில் அமைச்சரை அழைக்கவில்லை எனக் கூறி அவரது ஆதரவாளர்கள் தகராறு செய்தனர். 

அதே கிராமத்தில், கடலூர் எம்.பி. அருண்மொழித்தேவன் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடம் பணி பாதியில் நிற்கிறது. கடலூர் முதல் கண்டரக்கோட்டை வரை கஸ்டம்ஸ் சாலைப் பணி கடலூர் முதல் மேல்பாட்டாம்பாக்கம் வரை நிறைவுபெற்ற நிலையில், பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி  என்பதால் மேல்பட்டாம்பாக்கம் முதல் கண்டரக்கோட்டை வரை அமைச்சர் மற்றும் அவரது உறவினர்கள் நிலம் இருப்பதால் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுதவிர, பண்ருட்டியில் அரசுக் கலைக் கல்லூரி, நெல்லிக்குப்பத்தில் நகராட்சி மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படும் அரசு மருத்துவமனையாக மாற்றம் போன்ற பல்வேறு தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் முட்டுக்கட்டையாக உள்ளார். இதையும் மீறி நான் முதல்வரை நேரில் சந்தித்து, அவருடைய நேரடிக் கண்காணிப்பில் மலட்டாறு தூர்வார நடவடிக்கை, தென் பெண்ணை ஆற்றில் தடுப்பணை, அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உட்பட பல்வேறு நலத்திட்டங்களைத் தொகுதிக்குச் செய்து வருகிறேன்" என்றார். 

இதுகுறித்து அமைச்சர் எம்.சி.சம்பத், ``மணல் குவாரிக்கும் எம்.எல்.ஏ-வுக்கும் சம்பந்தம் இல்லையென்றால், எம்.எல்.ஏ உதவியாளரின் மாமனார் இடத்தில்தான் மணல் குவாரி யார்டு நடந்துவருகிறது. தென் பெண்ணையாற்றில், மேல்குமாரமங்கலம் என் சொந்த ஊரில் உயர்மட்டம் பாலம் கட்டப்படுகிறது. இது 2015-ல் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது நிதி ஒதுக்கியது. அப்போது எம்.எல்.ஏ. எங்கே இருந்தார்? இது, எங்கள் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இதற்காக நான் முதல்வரிடம் பேசி நிதி வாங்கினேன். அது, இப்போதுதான் நடைமுறைக்கு வந்துள்ளது. நான் பெற்ற பிள்ளைக்கு, எனக்குப் பெயர் வைக்க உரிமை இல்லையா? எங்கள் ஊரில், நான் பேசி வாங்கிய பாலத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவுக்கு எனக்கு அழைப்பு இல்லையென்றால் எப்படி? மேல்குமாரமங்கலம் சமுதாயக் கூடம், கஸ்டம்ஸ் சாலை பிரச்னை என எல்லாவற்றுக்கும் அப்போது திட்ட அலுவலராக இருந்த ஆனந்தராஜ்தான் காரணம். அவர் எம்.பி. அருண்மொழித்தேவன் ஆதரவாளர். அதனால் மாவட்டத்தில் நடந்த பல்வேறு திட்டங்களுக்கு அவர்தான் முட்டுக்கட்டையாக இருந்தார். கஸ்டம்ஸ் சாலை பிரச்னையில் எனது நிலம், எனது சகோதரி நிலம் எல்லாம் உள்ளது. நாங்கள் விட்டுத்தரத் தயாராக உள்ளோம். ஆனால். மற்றவர்கள் விட்டுத் தர தயாராக இல்லாததால் கிடப்பில் உள்ளது. கஸ்டம்ஸ் சாலைத் திட்டம் எனது கனவுத் திட்டம், அதை நிறைவேற்ற வேண்டும் என நானும் ஆவலாக உள்ளேன். எம்.எல்.ஏ. கூறுவதுபோல் நான் அதில் ஏதும் முட்டுக்கட்டையாக இல்லை. எம்.எல்.ஏ வெற்றிக்கு மிகுந்த பாடுபட்டவன் நான். 

எம்.எல்.ஏ. கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டி சேர்மனாக இருந்தவர். அவரது வார்டில் எம்.எல்.ஏ-வுக்குக் குறைவான வாக்குகள்தாம் கிடைத்தன. ஆனால், எனது ஊரில் 564 ஓட்டுகள் அதிகமாக வாங்கித் தந்தேன். அதேபோல், அண்ணா கிராமம் ஒன்றியத்திலும் 3,745 வாக்குகள் அதிகமாகப் பெற்றுத் தந்துள்ளேன். அவருடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்து அவரை வெற்றிபெறச் செய்தேன். எனது ஆதரவாளர்களை எம்.எல்.ஏ தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். தொகுதியில் எந்த விழா நடந்தாலும் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எனது படம், பெயர் பேனரில் போடக்கூடாது எனக் கூறி வருகிறார். நடந்து முடிந்த கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் எம்.எல்.ஏ விதிமுறைகளை மீறித் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்குத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை வழங்கியுள்ளார். ஆனால், நான் இதையெல்லாம் கண்டுகொள்வது கிடையாது. நான் என்னால் முடிந்த அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் வேறுபாடு பார்க்காமல் நிறைவேற்றி வருகிறேன். ஆனால் அவர்கள், ஏன் என்னை இப்படி வேறுபாடு பார்க்கின்றனர் எனத் தெரியவில்லை. நடப்பது அம்மாவின் ஆட்சி. அவரும் அ.தி.மு.க எம்.எல்.ஏ. அப்படியிருக்கும்போது நான் எப்படித் தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்குத் தடையாக இருப்பேன்?" என்றார்.

இவர்கள் ஒருவரை, ஒருவர் குற்றம்சாட்டி வந்த நிலையில், கடந்த 4-ம் தேதி பண்ருட்டி அருகே ஒறையூர் கிராமத்தில் அருண்மொழித்தேவன் எம்.பி. தலைமையில் நடந்த மருத்துவ முகாமுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் ஆதரவாளர்களை அழைக்கவில்லை எனக் கூறி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டித் தகராறில் அ.தி.மு.க அலுவலகம் சேதமடைந்ததுடன், இரு தரப்பினரும் காயமடைந்தனர். `அமைச்சர் சம்பத், தொகுதியில் வளர்ச்சிப் பணிகளைச் செய்ய விடாமல் தடுக்கிறார்' என எம்.எல்.ஏ ஆதரவாளர்களும், `தங்களை எம்.எல்.ஏ புறக்கணிக்கிறார். இதுதவிர, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அமைச்சர் ஆதரவாளர்களும் மாறிமாறி பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேர்தல் நேரத்தில் மற்ற கட்சியினர் அனைவரும் எப்படி வாக்குகளைப் பெறுவது என ஆலோசனை நடத்திவரும் நிலையில். ஆளும் கட்சியினர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பண்ருட்டி பகுதியில் பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் எப்படிச் சொன்னாலும், இவர்களின் கருத்து வேறுபாட்டால் பண்ருட்டி தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது மட்டும் உண்மை. 

அடுத்த கட்டுரைக்கு