தொடர்கள்
Published:Updated:

கரையும் காங்கிரஸ்... காரணம் என்ன?

கரையும் காங்கிரஸ்... காரணம் என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
கரையும் காங்கிரஸ்... காரணம் என்ன?

ஓவியம்: பாரதிராஜா

சங்காத கதர்ச்சட்டை போட்ட காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுமானால் இப்படியொரு தோல்வியை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், கட்சியே கதியென்று கிடந்த அடிமட்ட காங்கிரஸ் தொண்டன், நொறுங்கிப்போயிருக்கிறான்.  ‘ராகுல் நம்மைக் காப்பார். நாட்டை மீட்பார்’ என்று அவன் கொண்ட நம்பிக்கை, அடியோடு தகர்ந்து போயிருக்கிறது. மூவிலக்கத்தைத் தொட்டிருந்தால்கூட, நிம்மதி மூச்சு விட்டிருப்பான், பாவம். அதற்கும்கூட வழியில்லை. இன்னும் மூன்று இடங்களைப் பெற்றிருந்தால், எதிர்க்கட்சி அந்தஸ்தேனும் கிடைத்திருக்கும். அதுவும் போச்சு. தார்மிகப்படி பார்த்தால், ராகுல் ராஜினாமா செய்ய வேண்டியவர்தான். செய்துமிருக்கிறார். இறுதியில், `இருவர் அணி’ இலக்கடைந்துவிட்டது!

கரையும் காங்கிரஸ்... காரணம் என்ன?

காங்கிரஸுக்கு இம்முறை ‘Something went wrong’ அல்ல, `Everything went wrong!’ காங்கிரஸ் தலைமையகம் அமைந்திருக்கும் டெல்லியின் அக்பர் சாலை, எப்போதும் கலகலவென்று இருக்கும். இப்போதோ, எங்கும் விரக்தி முகங்கள், தேம்பல் குரல்கள். அறுபது ஆண்டுகள் இந்தியாவின் அதிகாரமையமாக இருந்த இடத்துக்கு, இப்படியோர் அவலநிலை ஏற்பட்டிருக்க வேண்டியதில்லை. கஷ்டமாகத்தான் இருக்கிறது. காந்தி மேல் சத்தியம்!

காங்கிரஸின் தோல்விக்கான காரணங்களை எல்லா திசையிலும் அலசி ஆராய்கிறார்கள் அரசியலாளர்கள். `காங்கிரஸ் இன்னும்கூட இறங்கிச்சென்று வலுவான கூட்டணி அமைத்திருக்கலாம்’ என்கிறார்கள் சிலர். ‘ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கத் தவறிவிட்டார்கள்’ என்கிறார்கள் பலர். வாஸ்தவம்தான். ஆனால், காங்கிரஸ் தோல்விக்கு இவை மட்டுமே காரணங்களில்லை.

காங்கிரஸ் இன்னும் வலுவான கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்குமா...இல்லவே இல்லை. மாயாவதி - அகிலேஷை அழைத்து, மம்தா மனதைக் கரைத்து, நாயுடுவிடம் கொஞ்சம் இடங்களைப் பெற்று, காங்கிரஸ் இன்னும் வலுவான அணி கட்டியிருந்தாலும் பா.ஜ.க-வை வீழ்த்தியிருக்க முடியாது. மிஞ்சிப்போனால் 20, 25 தொகுதிகள் அவர்களுக்குக் குறைந்திருக்கும். பா.ஜ.க வாங்கியிருக்கும் வாக்குகள் 40 சதவிகிதம். காங்கிரஸுக்குக் கிடைத்திருப்பது வெறும் 18 சதவிகிதம். 22 சதவிகிதத்தை ஈடுகட்டும் அளவுக்கா மம்தாவும் மாயாவதியும் நாயுடுவும் வாக்குகளை மடைமாற்றியிருக்கப் போகிறார்கள்?

ராகுலைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்திருந்தால், காங்கிரஸ் தப்பித்திருக்கும் என்பது இன்னொரு வாதம். அனுபவ அரசியல்வாதி லாலுவேகூட, ‘காங்கிரஸ் கல்யாணத்துக்குத் தயாரான வரை சரி ஆனால், மாப்பிள்ளையை அறிவிக்க மறந்துவிட்டார்கள்’ என்று அங்கலாய்த்தார். ஆனால், இது ஓர் அவசரப் பார்வை. இந்தியா ஒன்றும் அமெரிக்கா அல்ல. முகங்களை மட்டுமே முன்னிறுத்தும் தேர்தல் முறையும் இந்திய ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. காங்கிரஸ் இதே நிலையில் நிற்பதே சரி. இழப்புகள் பெரிதென்றாலும்.

பா.ஜ.க தேர்தல் அறிக்கை...அட்டைப்படத்தில் மட்டுமல்ல, உள்ளேயும் ஆங்காங்கே சிரித்துக்கொண்டிருந்தது மோடி மட்டுமே. காங்கிரஸின் தேர்தல் அறிக்கையின் முதல் பக்கத்தில் மக்கள் திரள். இறுதிப்பக்கத்திலும் அதே மக்கள் திரள்தான். ஓரிடத்தில்கூட ராகுல்காந்தியின் தனிப்படம் ஏதுமில்லை. ராகுல்காந்தி மக்களுடன் நிற்கும் படங்களே இருந்தன. இரு கட்சிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை இதைவிட எப்படி அழகாகக் கணிக்க முடியும். காங்கிரஸ் வேறு, பா.ஜ.க வேறு. 
 
பா.ஜ.க-வின் சித்தாந்தத்தை வென்றெடுக்காமல் அவர்களைத் தோற்கடிக்க முடியாது. சரியாகச் சொன்னார்,  சுப்பிரமணியன் சுவாமி,  ‘இது மோடி அலை அல்ல, இந்துத்துவ அலை’ என்று. வெற்றி உறுதியானதும், மம்தாவுக்குக் கர்நாடக பா.ஜ.க தரப்பில் சொல்லப்பட்ட பதில்... ‘தீதி... ஜெய் ராம்.’ இதில் அடங்கிவிட்டது அனைத்தும். ஆனால் பா.ஜ.க-வை சித்தாந்த ரீதியாக பலவீனப்படுத்த வேண்டுமென்பதை ராகுல் கவனிக்கத் தவறினார்.  காங்கிரஸுக்கு அப்போதே சறுக்கல் தொடங்கிவிட்டது.

பா.ஜ.க வெற்றியைத் தீர்மானித்தவை இரண்டே காரணிகள்தான்... மதம் மற்றும் தேசியவாதம்! அதாவது, `மூன்று மாதத்துக்கு முன்பு வரை தேர்தல்களம் இவ்வாறு இல்லை’ என்று அடித்துச் சொல்கிறார்கள், அரசியல் ஆய்வாளர்கள். புல்வாமா தாக்குதல், பாலகோட் பதிலடிக்குப் பிறகு, தேர்தல் களம் வேறு மாதிரி மாறியது. வறுமை, வேலையின்மை, பணமதிப்பிழப்பு என எல்லாமே மக்களின் மனதிலிருந்து மறைந்து, `தேசியவாதம்’ மையத்திற்கு வந்தது. அதை இன்னும் வலுவாக உள்ளிறக்க உதவியது, மதம்! இப்போது வட இந்தியாவில் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ‘மோடிதான் பாகிஸ்தானிடமிருந்து நாட்டைக் காத்தார்’ என்கிறார்களாம்.

கரையும் காங்கிரஸ்... காரணம் என்ன?

காங்கிரஸின் மதச்சார்பின்மையைப் போலி மதச்சார்பின்மை என்று சித்திரிப்பதிலும் பெருவெற்றி பெற்றது பா.ஜ.க. அதேபோல பா.ஜ.க-வின் தேசியவாதத்தைப் போலி தேசியவாதம் என்று காட்டியிருக்க முடியும் காங்கிரஸால். ஆனால் தவற விட்டார்கள். `வேலைவாய்ப்புப் பிரச்னை’ மட்டுமே வெற்றியைத் தேடித்தந்துவிடும் என்று தப்புக்கணக்கு போட்டார்கள். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ‘வேலைவாய்ப்புதான் எங்களின் துருப்புச்சீட்டு’ என்று முன்மொழிந்தார். ராகுல் அதை வழிமொழிந்தார். பிரியங்கா அதைப் பின்தொடர்ந்தார். ஆனால், ‘இது சித்தாந்த யுத்தம்’ என்று அவர்களுக்குக் கடைசிவரை புரியவே இல்லை.

மதவாதமும் தேசியவெறியும் ஊட்டப்பட்ட மக்களிடம், `வேலைவாய்ப்பு உறுதியும் எழுபதாயிரம் ரூபாய் மானிய வாக்குறுதியும் என்ன பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்திவிடும்? காந்தியையும் நேருவையும் இரு கைகளில் ஏந்திவந்து, எதிராளிகளின் போலி தேசியவாதத்தை அடித்து நொறுக்கியிருக்கலாம் காங்கிரஸ். `இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி’ என்ற மிகப்பெரிய தேசியவாத ஆயுதத்துக்கு, எதிரணியிடம் என்ன எதிராயுதம் இருக்கிறது? ஆட்சியின் இடைக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைக் குறிவைக்க ஆரம்பித்தார் ராகுல் காந்தி. இடையிலேயே விட்டுவிட்டார்.

அல்பேஷ் தாகூர் குஜராத்காரர். இளம் அரசியல்வாதி. காங்கிரஸிலிருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கியவர். அவரிடம் ‘காங்கிரஸ் ஏன் தோற்றது’ என்று கேட்டதற்கு ‘காங்கிரஸ் எப்போதோ ‘தலைவர்களின் கட்சி ஆகிவிட்டது’ என்று, ஒரே வரியில் பதில் சொன்னார். ஆம், காங்கிரஸ் இப்போது வெறும் ‘தலைவர்களின் கட்சி’ மட்டுமே. குலாம்நபி ஆசாத், சசி தரூர், வேணுகோபால்... இன்னும் பலர் இருக்கிறார்கள். யாருக்கும் தொண்டர்களுடன் தொடர்புகளில்லை. அப்புறம் எப்படி கட்சி ஜீவனுடன் இருக்கும்?

காந்தி வருகைக்கு முந்தைய காங்கிரஸ் இப்படித்தான் இருந்தது. மாதம் ஒருமுறை, டெல்லியிலோ கல்கத்தாவிலோ கூட்டம் போடுவார்கள். ஏதோ போனால் போகிறதென்று, ஆங்கிலேயனின் ஆட்சியில் எப்படிப் பங்கு கேட்பது எனச் சில நிமிடம் பேசுவார்கள். அடிப்படையில், அது ஓர் இயக்கமே அல்ல. ஒரு கிளப். அவ்வளவு தான். காந்தி வந்தார்... ‘தலைவன் என்பவன் ஒரு போராளியாக இருக்க வேண்டும்’ என்றார். எல்லோரையும் போராளியாக மாற்றினார். அப்படியொரு போராளியாக ராகுல் மாறவேண்டிய நேரம் இது.

போகியை முடித்தே பொங்கல் கொண்டாட முடியும்... மூத்த தலைவர்களின் ஆதிக்கத்துக்கு சங்கோஜமே படாமல் முடிவுரை எழுத வேண்டும். ப.சிதம்பரம் பெரிய பொருளாதார மேதைதான். ஆனால், அவர் மக்கள் தலைவரா...சிவகங்கையைக் கடந்து சிதம்பரத்துக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது? தனயனுக்கு சீட்டு கொடுத்தே ஆக வேண்டுமென்று சண்டை போட்டார். இப்போது ராகுல் ராஜினாமாவிற்குத் தற்கொலை எச்சரிக்கை விடுக்கிறார்கள் தமிழக காங்கிரஸார் சிலர். இங்கே சிதம்பரம் பார்க்கும் வேலையை, ராஜஸ்தானில் கெலாட் பார்க்கிறார், மத்தியப்பிரதேசத்தில் கமல்நாத் பார்க்கிறார். அப்புறம் எப்படி உருப்படும் காங்கிரஸ்? 

ராகுல் காந்தி எளிமையான வாழ்க்கை வாழ்பவர்தான். மற்றவர்கள்? ப.சிதம்பரத்தின் சொத்து விவகாரத்தை அமலாக்கத்துறை பந்தி விரித்துக்கொண்டிருக்கிறது. கெலாட், கமல்நாத்தின் சொத்துகளைச் சேர்த்து வைக்க, அலிபாபா குகையே பத்தாதுபோல. இப்படியிருந்தால், `காங்கிரஸ்காரர்கள் ஊழல் பெருச்சாளிகள்’ என்று, மோடி விமர்சிக்கத்தான் செய்வார். இப்போதேனும் அறிக... மோடியை உருவாக்கியது பா.ஜ.க அல்ல.

இனிமேல் காங்கிரஸ் என்னவாகும்? கர்நாடகாவில் காங்கிரஸ் அமைத்திருக்கும் கூட்டணி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்ற நிலை. குலாம் நபி ஆசாத்தும், வேணுகோபாலும் அங்கே விரைந்திருக்கிறார்கள். மத்தியப்பிரதேசமும் ஊசலாட்டத்தில்தான் இருக்கிறது. கமல்நாத் கற்ற வித்தைகள் பலன் கொடுப்பதாகத் தெரியவில்லை. ராஜஸ்தானும் தப்பிப்பது கடினமே. அங்கே, சுயேச்சை வேட்பாளர்கள் அணி மாறிக் கொண்டிருக்கிறார்கள். சச்சின் பைலட் வேறு ஆர்வமில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார். உழைத்தவனுக்கு உரிய இடம் தரப்படவில்லை என்றால், ஆர்வம் இழக்கத்தான் செய்வான். ஜோதிராதித்யா சிந்தியாவும் விரக்தி மனநிலையிலேயே வீட்டில் விட்டத்தைப் பார்த்து அமர்ந்திருக்கிறார். அதுவும், குணா தொகுதியில் அவர் அடைந்த தோல்வி, அவ்வளவு எளிதில் மறக்கக் கூடியது அல்ல. இப்படி, காங்கிரஸின் இரண்டு முக்கிய இளம் தலைவர்களும் மனதளவில் சோர்ந்து
போயிருப்பது, கட்சியின் எதிர்காலத்துக்குத் துளியும் நல்லதல்ல. அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும்.

கரையும் காங்கிரஸ்... காரணம் என்ன?

காங்கிரஸுக்குப் பஞ்சாப் மட்டுமே நம்பிக்கை அளிக்கிறது. அதுவும், அமரீந்தர் சிங் எனும் அதிரடித் தலைவன் காப்பரணாகக் காத்துக் கொண்டிருக்கிறார். அமித் ஷா என்ன, அமித் ஷாவைப் போல ஆயிரம் பேர் வந்தாலும் ஒரு கை பார்ப்பார் அமரீந்தர். ராணுவ ரத்தம் அல்லவா? அப்படித்தான் இருக்கும்! ராகுலுக்கு அடுத்து யார் கட்சித்தலைவர் என்ற போட்டியில் முதலிடத்தில் இருப்பவர், அமரீந்தர்தான்.  காங்கிரஸ் தலைவரானால், நிச்சயம் பா.ஜ.க-வுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார். புல்வாமா தாக்குதலின் போது, ‘பாகிஸ்தானை நீங்கள் அடக்குகிறீர்களா, அல்லது நானே அடக்கட்டுமா’ என்று கொந்தளித்தவர் அவர்.  ஆனால், அமரீந்தருக்கு வயது 77. இதுமட்டுமே சிக்கல். இன்னொரு பெயரும் அடிபடுகிறது. அவர் சசிதரூர். ஆனால், சசி மக்கள் தலைவர் அல்லர்.

இன்னொரு புறம், கட்சியின் மாநிலத் தலைவர்களை அவமதிக்கும் போக்கை காங்கிரஸ் என்று கைவிடுமோ தெரியவில்லை. ஜெகஜீவன்ராமில் ஆரம்பித்தது, ஜெகன்மோகன் வரை தொடர்கிறது. எத்தனை மாநிலத் தலைவர்கள் எப்படியெல்லாம் கதறியிருப்பார்கள்? எவருக்கேனும் மரியாதை தந்ததா அந்த சோகால்ட் ‘ஹை கமென்ட்?’ இந்தியாவில் 29 மாநிலங்கள் இருக்கின்றன. அனைத்து மாநிலங்களிலுமே காங்கிரஸைப் பின்னொட்டாகவோ, முன்னொட்டாகவோ கொண்ட ஒரு கட்சி இருக்கும். தமிழ்நாட்டில், தமிழ்மாநில காங்கிரஸ், புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ், கேரளாவில் மணி காங்கிரஸ், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ். இப்படி, அடுக்கிக்கொண்டே போகலாம். இவை அத்தனையும் வெறுமனே கருத்து வேறுபாட்டால் கழன்று வந்த கட்சிகள் அல்ல. அத்தனையும் காங்கிரஸ் தலைமையின் அவமதிப்பால் உதித்தவை.

`இது காந்தி காங்கிரஸ் அல்ல, இந்திரா காங்கிரஸ்’ என்று அடிக்கடி சொல்வார்கள், அரசியல் அறிஞர்கள். `அப்படி இருக்காது’ என்று ஏதோ கொஞ்சம் காங்கிரஸ் தொண்டர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் இழந்துவிடாதீர்கள். அவ்வளவுதான் சொல்ல முடியும்!

- சக்திவேல்