Published:Updated:

ரஜினி சந்தித்த அடுத்த நொடியே ஸ்டாலினிடம் இருந்து...- பிரேமலதா சொன்ன ரகசியம்

ரஜினி சந்தித்த அடுத்த நொடியே ஸ்டாலினிடம் இருந்து...- பிரேமலதா சொன்ன ரகசியம்
ரஜினி சந்தித்த அடுத்த நொடியே ஸ்டாலினிடம் இருந்து...- பிரேமலதா சொன்ன ரகசியம்

துரைமுருகன் சந்திப்பு குறித்து சுதீஷ் நேற்று விளக்கம் அளித்த நிலையில் இன்று தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ``இன்னும் ஓரிரு நாள்களில் கூட்டணி குறித்த அறிவிப்பு தலைமைக் கழகம் மூலம் வெளியிடப்படும். சுதீசும், மாவட்டச் செயலாளர்களும் துரைமுருகனை சந்தித்தது குறித்து நேற்று தெளிவாக கூறிவிட்டனர். ஆனாலும் வயதில் மூத்தவர், மூத்த அரசியல்வாதி என்றே நிர்வாகிகள் துரைமுருகனை சந்தித்தனர். பெரிய மனிதர் என்று நம்பித்தானே துரைமுருகனை சந்தித்தார்கள். அதற்குக் காண்பிக்கும் நம்பிக்கை தான் இதுவா. இது தவறான புரிதல் தான். 

இதைப் பூதாகரமாக்கி தே.மு.தி.கவை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தி.மு.க செய்த சூழ்ச்சியே இது. தி.மு.க என்றால் `தில்லுமுல்லு கட்சி' என்பதை ஆரம்பக் காலத்தில் இருந்தே கூறிவருகிறேன். நேற்று துரைமுருகன் பேசியது முற்றிலும் உளறல். தே.மு.தி.க நிர்வாகிகளை யார் என்றே தெரியாது என்று துரைமுருகன் கூறுகிறாரே, அப்படியானால் யாரெனத் தெரியாதவர்களை வீட்டுக்குள் விடுவாரா. தே.மு.தி.க நிர்வாகிகள் துரைமுருகன் வீட்டுக்குச் செல்லும்போது அங்கு எந்த மீடியாவும் இல்லை. ஆனால், திரும்பி வரும்போது அனைத்து மீடியாவும் எப்படி வந்தது. நானும் துரைமுருகன் மாவட்டம்தான். வேலூர் மாவட்டத்தினர் இந்த அளவுக்குக் கீழ்த்தரமான செயல்களைச் செய்வார்களா என்பதை இவரைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். தி.மு.க தொகுதிப் பங்கீடு முடித்துவிட்டது என்று அனைவருக்கும் தெரியும். 

அப்படி இருக்கையில் யாராவது அவர்களிடம் கூட்டணி பேசச் செல்வார்களா. துரைமுருகன் தூக்கத்தில் இப்படிப் பேசினாரா எனத் தெரியவில்லை. அவர் பேசியது அனைத்தும் முரண்பாடாகவே இருக்கிறது. தேர்தல் ஆதாயத்துக்காக தே.மு.தி.கவை தி.மு.க பயன்படுத்தி உள்ளது. கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவரைச் சந்திக்க வேண்டும் என்று முதல் ஆளாக அனுமதி கேட்டது விஜயகாந்த்தான். ஆனால், கடைசி வரைக்கும் கருணாநிதியை சந்திக்க ஸ்டாலின் அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், நாங்கள் அதை எதுவும் மனதில் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால், விஜயகாந்த்தை ரஜினி சந்தித்த அடுத்த நொடியே, சுதீஷுக்குப் போன் செய்து நானும் உடனே விஜயகாந்த்தைப் பார்க்க வேண்டும் என ஸ்டாலின் கூறினார். 

பெருந்தன்மையோடு அவரை வரவேற்றுப் பேசினோம். இருதலைவர்கள் சந்திக்கும்போது அரசியல் பேசுவது இயல்பு என்றுதான் நான் பேசினேன். ஆனால், விஜயகாந்தைச் சந்திக்கும்போது அரசியல் பேசவில்லை என ஸ்டாலினை சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். தே.மு.தி.கவுக்கு யாரும் யோசனை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் கட்சி மீது நூறு சதவிகிதம் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். எங்களுக்கென்று கொள்கை உள்ளது" என்று ஆவேசமாகப் பேசினார். முன்னதாக செய்தியாளர்களுக்கும் பிரேமலதாவுக்கும் வாக்குவாதம் நடைபெற்றதால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.