Published:Updated:

பரிந்துரை: இந்த வாரம்... அரசியலில் பெண்கள்

பரிந்துரை: இந்த வாரம்... அரசியலில் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
பரிந்துரை: இந்த வாரம்... அரசியலில் பெண்கள்

பரிந்துரை: இந்த வாரம்... அரசியலில் பெண்கள்

பரிந்துரை: இந்த வாரம்... அரசியலில் பெண்கள்

பரிந்துரை: இந்த வாரம்... அரசியலில் பெண்கள்

Published:Updated:
பரிந்துரை: இந்த வாரம்... அரசியலில் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
பரிந்துரை: இந்த வாரம்... அரசியலில் பெண்கள்

ஆனந்த விகடன்’ வாசகர்களுக்காக வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள்.  இந்த வாரம், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.

டந்துமுடிந்திருக்கும் 17-வது நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய வரலாற்றில் முதன்முறையாக அதிக எண்ணிக்கையிலான பெண் எம்.பி-க்களை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மொத்தமுள்ள 542 எம்.பி-க்களில் 78 பேர் பெண்கள். அதாவது 14%.

பரிந்துரை: இந்த வாரம்... அரசியலில் பெண்கள்

தொலைக்காட்சிகளின் அரசியல் விவாதங்களில் அனைத்துக் கட்சிகளிலிருந்தும் பெண்கள் பிரதிநிதிகளாகக் கலந்துகொள்வதைப் பார்க்கிறோம். சில தொலைக்காட்சிகளில் அரசியல் விவாத மேடைகளை ஒருங்கிணைக்கும் நெறியாளர்களாகவும் பெண்கள் இருக்கிறார்கள். ஊடகங்களில் எழுதப்படும் அரசியல் செய்திகளில் பெண் பத்திரிகையாளர்களின் பங்களிப்பும் பெரிது. இவை அனைத்தையும்விட மிக முக்கியமான காட்சியாக நான் பார்ப்பது, ‘யாருக்கு ஓட்டு போடுவீங்க?’ என்று கேட்டு நீட்டப்படும் சர்வே தாள்களையும் மைக்குகளையும் ஆர்வத்துடன் எதிர்கொள்ளும் சாமான்யப் பெண்கள். ஆம், அந்த எளிய பெண்களும் அரசியல் அறிய ஆரம்பித்திருப்பதுதான் இவை எல்லாவற்றையும்விட மகத்தான மாற்றம்.

இல்லத்தரசியாக இருந்தாலும் சரி, ஐ.டி துறை யுவதியாக இருந்தாலும் சரி... அனைவரும் அரசியல் அறிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

செய்தித்தாள், தொலைக்காட்சி, கைப்பேசி எனச் செய்திகளைக் கொண்டு வந்து சேர்க்கும் ஊடகங்கள் வீட்டில் அனைவருக்கும் பொதுவானவை. அவற்றில் அரசியல் செய்திகளை இனியும் ஆண்களுக்கானவை என்று கடந்துபோகாதீர்கள். இங்கு வணிகம் முதல் அரசியல்வரை அனைத்துக்கும் பெண்களே அச்சு. பெண்களுக்கான நலத்திட்டங்கள், பெண் உரிமை தொடர்பான வழக்குகள், தீர்ப்புகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுடன் பிணைத்துவைக்கப்பட்டுள்ள புனிதங்கள் என அனைத்தும் இங்கு அரசியலாக்கப்பட்டு ஓட்டு அறுவடைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. மக்கள்தொகையில் பெண்கள்தான் பாதி. எதையும் மாற்றும் வல்லமை நம் கைகளில் இருக்கிறது. அதற்கு, எதை மாற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு முதலில் நமக்குத் தேவை.
எனவே, அரசியல் செய்திகளை அறியுங்கள்; அதைப் பற்றிப் பேசுங்கள்; விவாதியுங்கள்... அதன் நீட்சியாக அரசியலில் பங்களியுங்கள்.

‘அரசியல்வாதியா... நானா?!’ என்றால், ஆம்... நீங்கள்தான்! ஆசிரியப்பணி, வங்கிப்பணி தொடங்கி ராணுவம் முதல் ஸ்டார்ட் அப்கள்வரை அனைத்துத் துறைகளிலும் இன்று பெண்கள் பங்களித்துவருகிறார்கள். அரசியல் மட்டும் ஏன் வேண்டாம்?

பொதுச்சமூகத்தில் அரசியல் பங்களிப்பில் ஆர்வம்கொள்ளும் ஆண்களே வெகுசிலர்தான் எனும்போது, பெண்கள் எப்படி என்கிறீர்களா? உலகில், ஆண்களைவிடப் பெண்களை அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் கொண்ட முதல் மூன்று நாடுகள் ருவாண்டா (61.3%), க்யூபா (53.2%) மற்றும் பொலிவியா (53.1%). இது எப்படி இந்த நாடுகளில் சாத்தியமானது? படிப்படியாக!

ருவாண்டாவில் 1990-ல் 18 சதவிகிதமாக இருந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்று 61.3%. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு. இப்போது சொல்லுங்கள்... நாமும் ஆரம்பிக்கலாம்தானே?!

என் 22 வயதில், ‘நான் தேர்தலில் நிற்கப்போகிறேன்’ என்று சொன்னபோது வீட்டில் அனைவரும் அதிர்ச்சியானார்கள். ஆனால், நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன். காரணம், மக்கள் பணியின்மீது எனக்கிருந்த ஆர்வமும் அதில் நான் காட்டிய வேகமும். பெரும்பாலும், நம் முடிவு குறித்து நம் வீட்டில் எழும்பும் எதிர்ப்பு என்பது நம்மீது அவர்களுக்கு உள்ள அன்பின், அக்கறையின் வெளிப்பாடாகவே இருக்கும். ஆனாலும், அதையெல்லாம் தாண்டிவரக்கூடிய உறுதியும், நம் முடிவை அவர்களுக்குப் புரியவைக்கும் தெளிவும் நமக்குத் தேவை.

ஒருவழியாக வீட்டைத் தாண்டி வீதிவரை வந்ததும், ஆரம்பகால சவால்கள் பல காத்திருக்கும்தான். ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் சூழல்; காலுக்கடியில் பறிக்கப்படும் குழிகள்; விமர்சனத்துக்கும் மலினமான கேலிக்கும் வித்தியாசம் தெரியாத கூவல்கள்; இவற்றுடன், பெண் என்பதாலேயே வீசப்படும் பாலியல் வசைச்சொற்கள்... ஆம், அனைத்தையும் கடக்க வேண்டிய திடம் வேண்டும்தான் என்றாலும், இவையெல்லாம் எல்லாத் துறைகளிலும் பெண்கள் சந்திக்கும் சவால்கள்தானே?!

இதில் முக்கியமான ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.  இந்த நேர்மையற்ற போரை நம் மேல் நிகழ்த்துபவர்கள் நம் வளர்ச்சியின் மீது வெறுப்புகொண்ட, அச்சம்கொண்ட சிலரே தவிர, மக்கள் நம்மை ஒருபோதும் முன்முடிவுகளோடு ஒதுக்குவதில்லை. ஒரு நல்ல தலைமைக்காக எப்போதும் காத்துக்கொண்டிருக்கும் மக்களின் மனங்களுக்கு, தடைகளைத் தாண்டி நாம் சென்றடையும் பயணம் இந்தத் தேர்தல் அரசியல். இதில் அதிகாரம், பணம் என அனைத்தின் ஆதிக்கமும் இருக்கும்தான் என்றாலும், ‘இவர் நமக்கான பணிகளைச் செய்வார்’ என்று நம் நேர்மையின்மீதும் சமூகப் பணிகளின்மீதும் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டால், இவை அனைத்தையும் தகர்த்து அவர்கள் நிச்சயம் நமக்கு வெற்றியைக் கையளிப்பார்கள்.

23 ஆண்டுகளாக அரசியலில் இருந்துவருகிறேன். நான் அரசியல் குடும்பத்திலிருந்து வந்த பெண் இல்லை. என்னிடம் பண பலமோ அதிகாரப் பின்புலமோ கிடையாது. இருந்தும், கிட்டத்தட்ட ஏழு லட்சம் ஓட்டுகள் பெற்றிருக்கிறேன். ஏழு லட்சம் மக்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையல்லவா இது?! அதற்கு என்னிடமிருந்த முக்கியத் தகுதி, நேர்மையான அரசியல் வாழ்க்கையும் அதற்கான என் தொடர்ச்சியான பயணமுமே.

அதிகாரத்தைப் பெண்களிடம் அளிப்பதில் உள்ள விருப்பமின்மையே பெண்களுக்கும் அரசியலுக்கும் இடையில் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது. அது குடும்பமோ, சமூகமோ, அரசியலோ, அரசாங்கமோ... அதிகாரம் ஆண்களிடம் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற கட்டமைப்பு இறுகிப்போயுள்ளது. அதுதான் பிரச்னை. அதைத் தகர்க்கும் வேலைகளைப் பெண்கள் தொடங்கிவிட்டார்கள். நாடாளுமன்றம் முதல் பஞ்சாயத்து அமைப்புகள்வரை பெண் உறுப்பினர்களைப் பார்க்கிறோம். நாளை அது நீங்களாக வேண்டும் சகோதரிகளே! 

- வெ.வித்யா காயத்ரி