Published:Updated:

`உங்க கூட்டணி பேரம் முகம் சுளிக்க வைக்குது!’ - விஜயகாந்த்தை விளாசும் கொங்கு ஈஸ்வரன்

`உங்க கூட்டணி பேரம் முகம் சுளிக்க வைக்குது!’ - விஜயகாந்த்தை விளாசும் கொங்கு ஈஸ்வரன்
`உங்க கூட்டணி பேரம் முகம் சுளிக்க வைக்குது!’ - விஜயகாந்த்தை விளாசும் கொங்கு ஈஸ்வரன்

``தே.மு.தி.க தங்களுடைய கூட்டணி பேரத்தை அதிகரிக்க என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் எந்தவொரு கூச்சமும் இல்லாமல் செய்வார்கள் என்பதைக் கடந்த சில தினங்களாக நடக்கும் நிகழ்வு வெளிக்காட்டியிருக்கிறது’’ என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

கொங்கு மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகித அளவுக்கு வாக்கு வங்கியை வைத்திருக்கும் கொங்கு ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியானது தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒரு சீட்டை பெற்றிருக்கிறது. தி.மு.க கூட்டணியில் இடம்பெறுவதற்கு முன்பு வரை, அ.தி.மு.க-வுடன் கொங்கு ஈஸ்வரன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வந்ததாகப் பேசப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில், அ.தி.மு.க மீது கடுமையான விமர்சனங்கள் எதையும் கொங்கு ஈஸ்வரன் வைக்காமல் இருந்தார். ஆனால், தி.மு.க கூட்டணியில் கொங்கு ஈஸ்வரன் இணைந்த பிறகு, அ.தி.மு.க-வை கடுமையாகச் சாடி அறிக்கைகளை விட்டும் போராட்டங்களை நடத்தியும் வருகிறார். அந்த வகையில், அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.

“வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்காகத் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளுடன் மற்ற அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைத்து வரும் நிலையில், தே.மு.தி.க-வைக் கூட்டணியில் கொண்டு வருவதற்கு அ.தி.மு.க - தே.மு.தி.க இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதை நாம் அறிவோம். ஆனால், கடந்த சில நாள்களாக இரு கட்சிகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வு தமிழக மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. ஏதோ வியாபாரத்தில் இடைத்தரகர்கள் செய்யும் வியாபார உத்தியைப்போல கூட்டணி பேரத்தை அ.தி.மு.க - தே.மு.தி.க ஆகிய இரண்டு கட்சிகளும் மாறிமாறி அரங்கேற்றி வருவது தமிழக அரசியலுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லதல்ல.

தே.மு.தி.க தங்களுடைய கூட்டணி பேரத்தை அதிகரிக்க என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் எந்தவொரு கூச்சமும் இல்லாமல் செய்வார்கள் என்பதைக் கடந்த சில தினங்களாக நடக்கும் நிகழ்வு வெளிக்காட்டியிருக்கிறது. அரசியல் நாகரிகம் துளியும் இல்லாமல், பேர அரசியலைக் கொண்டு இவ்விரு கட்சிகளும் அமைக்கும் கூட்டணி எப்படி மக்கள் நலம் சார்ந்த கூட்டணியாக இருக்க முடியும். தமிழக மக்களுக்குப் போதிய அளவில் அரசியல் விழிப்புணர்வு இல்லை என்று இவ்விரு கட்சிகளும் கருதுகிறார்களா. இவ்விரு கட்சிகளும் அமைக்கும் வியாபார அரசியல் கூட்டணிக்குத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பதிலடியைக் கொடுப்பார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.