Published:Updated:

`சமரசம் செய்துகொள்ளவில்லை; கட்சிதான் முக்கியம்!’ - அ.தி.மு.க-வில் மீண்டும் இணைந்த கே.சி.பழனிசாமி

`சமரசம் செய்துகொள்ளவில்லை; கட்சிதான் முக்கியம்!’ - அ.தி.மு.க-வில் மீண்டும் இணைந்த கே.சி.பழனிசாமி
`சமரசம் செய்துகொள்ளவில்லை; கட்சிதான் முக்கியம்!’ - அ.தி.மு.க-வில் மீண்டும் இணைந்த கே.சி.பழனிசாமி

உச்ச நீதிமன்றத்தில் தான் தொடுத்த வழக்குகளையும் முதல்வர் துணை முதல்வர் மீது வைத்த விமர்சனங்களையும் திரும்பப் பெறவில்லை என அ.தி.மு.க-வில் மீண்டும் இணைந்த கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமி மீண்டும் இன்று அ.தி.மு.க-வில் சேர்க்கப்பட்ட நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றிக்கொள்ள முன் வந்துள்ளேன். என்றுமே நான் அ.தி.மு.க-வைச் சார்ந்தவன்தான், எம்.ஜி.ஆரால் அறிமுகம் செய்யப்பட்டவன். ஓ.பி.எஸ், ரகசியமாக தினகரனைச் சந்தித்துப் பேசியது தவறு. அதனால் ஓ.பி.எஸ் சுயநலமானவர் என நான் விமர்சனம் செய்தேன். அது உண்மைதான். நான் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளது, வழக்குகள் என்பது தனிப்பட்ட ஒன்று அல்ல, கொள்கை சார்ந்த ஒன்று, அது ஒவ்வொருவருக்கும் முரண்பட்டு உள்ளது.

பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையத்தில் நான் முக்கியமாக முன் வைத்தேன். இன்றும் என் நிலைபாடு அதுதான். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வை ஆதரித்து வேலை செய்ய முடியாது. அதனால் நான் என் கட்சிக்குதான் வேலை செய்ய விரும்புகிறேன். சில குற்றச்சாட்டுகள் முதல்வர் மீதும் துணை முதல்வர் மீதும் வைத்தேன். அது வேறு. கட்சி தலைமைகள் மாறிக்கொண்டுதான் உள்ளது. பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் தெளிவாக உள்ளேன்’’ என்றார்.

முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது புகார் இருந்தபோதும் அவர்கள் கீழ்தான் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றுகொள்கிறீர்களா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த கே.சி.பழனிசாமி, ``அ.தி.மு.கவை பொறுத்தவரை தனிமனிதனைவிடக் கட்சிதான் பெரியது. யார் ஒருவரையும்விட கட்சிதான் எனக்குப் பெரிது’’ என்றார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, தனக்கு அதுபோல திட்டம் ஏதும் இல்லை என அவர் கூறினார்.