Published:Updated:

`துரைமுருகன் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு இதற்காகத்தான்!’ - கலகலத்த ஸ்டாலின்

கலிலுல்லா.ச
`துரைமுருகன் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு இதற்காகத்தான்!’ - கலகலத்த ஸ்டாலின்
`துரைமுருகன் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு இதற்காகத்தான்!’ - கலகலத்த ஸ்டாலின்

`தலைவர்கிட்ட தே.மு.தி.க நிர்வாகிகள் வந்தது குறித்துப் பேச தொடர்புகொண்டேன். தூங்குறார் டிஸ்டர்ப் வேண்டாம் என்றனர். சரி அவரை எழுப்பிச் சொல்ற அளவுக்கு ஒண்ணும் முக்கியமான விஷயம் இல்லைன்னு போனை வச்சுட்டேன்’’ தே.மு.தி.க-வைக் கலாய்த்தார் துரைமுருகன். இதையடுத்து, தே.மு.தி.க-வின் துணைச் செயலாளர் சுதீஷ், `அவர்கள் சீட்டு கேட்க, துரைமுருகனை சந்திக்கவில்லை' என்றார். `தே.மு.தி.க-வைத் தொடர்ந்து பழிவாங்கும் செயலில் தி.மு.க செயல்பட்டு வருகிறது. தி.மு.க குறித்து சுதீஷிடம் துரைமுருகன் என்ன சொன்னார் என்பதை அவர் கூற வேண்டும்' என்று இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். இப்படியாக இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஒருவரை ஒருவர் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.

`அ.தி.மு.க-வுடன் கூட்டணி முடிவாகிவிட்டது. எத்தனை தொகுதிகள் என்பது குறித்து இரண்டு நாள்களில் தெரிவிக்கப்படும்' என சுதீஷ் கூறியிருக்கிறார். இந்நிலையில், இன்று தோழமைக் கட்சிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,``காங்கிரஸ் சார்பில் தொகுதி பங்கீடு குழு இன்னும் அமைக்கப்படவில்லை. இன்றைக்குள் குழு அமைக்கப்பட்டுவிடும். நாளை காலை ஆலோசனை நடத்த இருக்கிறோம். இன்னும் ஓரிரு நாள்களில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்து அறிவிப்போம்'’’ என்றார்.

துரைமுருகனின் காட்பாடி வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குக் கருத்து தெரிவித்த அவர், ``தே.மு.தி.க-வினர் எங்களை மீண்டும் சந்திக்க விடக்கூடாது என்பதற்காக ஆளுங்கட்சியினர் துரைமுருகன் வீட்டுக்குப் பாதுகாப்பு வழங்கி இருக்கலாம்’’ என்று கலாய்த்தார். `ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் தொலைந்துவிட்டதாகக் கூறப்படுவது தொடர்பான கேள்விக்கு’, ``ஆவணங்களையே காப்பற்ற முடியாத மோடி, இந்தியாவை எப்படிக் காப்பாற்றுவார். நாடளுமன்றத் தேர்தலோடு இடைதேர்தல் நடத்த வேண்டும். நாங்கள் ஏற்கெனவே கிராமசபைக் கூட்டங்கள் மூலமாகத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டோம்’’ என்றும் தெரிவித்துள்ளார்.